விளைச்சல் உற்பத்தியை மட்டும் ஒப்பிடுவதில் உள்ள பிரச்சினையைப் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். இப்போது உண்மையான உற்பத்தித் திறன் கணக்கைப் பார்ப்போம்.
இந்திய உழவர்கள், அதாவது ‘பத்தாம் பசலி' உழவர்கள் மாட்டைக் கொண்டு உழவு செய்யும் ‘அப்பாவிகள்', ஒரு ஹெக்டேரில் கோதுமை சாகுபடி செய்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹெக்டேருக்கு 821 கிலோ விளைச்சல் எடுக்கிறார்கள். இதில் பயன்படுத்தப்பட்ட ஆற்றல் 2,703 கிலோ கலோரி. இந்தப் புள்ளிவிவரத்தை யாரோ தரவில்லை, தேர்ந்த ஆய்வாளர்கள் தந்துள்ளனர். (Food, Energy, and Society, - David Pimentel, Ph.D., Marcia H. Pimentel, M.S). ஆனால், இது காலத்துக்குக் காலம், பருவநிலைக்கு ஏற்ப மாறும் என்பது உண்மை. இது ஒருபுறம் இருக்கட்டும்.
விளைச்சலும் ஆற்றலும்
அதேநேரம் அமெரிக்காவில் ஹெக்டேருக்கு 2,670 கிலோ கோதுமை விளைகிறது. இதற்குப் பயன்பட்ட ஆற்றல் 9,035 கிலோ கலோரி. அப்படியானால் இருவரும் சராசரியாகக் கிலோவுக்கு 3,500 கலோரி செலவிடுகின்றனர். ஆகவே, இரண்டு பேருடைய உற்பத்தித்திறனும் சமமாக உள்ளது என்று தோன்றலாம். இதுவும் உண்மையல்ல.
ஏனெனில், இரண்டும் சமமே என்றால் ரசாயன வேளாண்மையை ஊக்குவிக்கலாம். உண்மை இதுவல்ல, அதாவது மாட்டை வைத்துச் செய்த வேளாண்மையில் ஆற்றல் உள்ளீடு என்பது ஏறத்தாழ ஹெக்டேருக்கு 2,247 கிலோ கலோரிகளாக உள்ளது. மாட்டின் ஆற்றல் அருகில் உள்ள புல்லிலிருந்து, மற்ற தாவரக் கழிவிலிருந்தும் கிடைப்பதுதான். இது ஒரு உழவருக்குக் கிட்டத்தட்டப் பண மதிப்பற்றது.
தப்பிப்போன கணக்கு
ஆகவே, அதையும் கழித்துவிட்டுப் பார்த்தால் (2703 - 2247 = 456 கி.க.) 456 ஹெக்டேருக்கு, 456 கிலோ கலோரி. இதை வைத்து ஹெக்டேருக்கு 821 கிலோ கோதுமையை அவர் அறுவடை செய்கிறார். அதாவது, கிலோவுக்கு வெறும் 555 கலோரிகளையே பயன்படுத்துகிறார். இதேபோல, நெல்லுக்கும் தனிப் புள்ளிவிவரங்கள் உள்ளன.
சரி, இதை மற்றொரு அளவீட்டுடன் ஒப்பிடுவோம், ஒரு கிலோ கோதுமையைச் சாப்பிட்டு, நீங்கள் வேலை செய்தால் கிடைக்கும் ஆற்றல் 3,151 கலோரி என்று உணவு அறிவியல் கூறுகிறது. அதாவது ஆற்றல்மிக்க, அறிவுமிக்க அமெரிக்க உழவர் 3,500 கலோரியைச் செலவிட்டு 3,151 கலோரியைத் தரும் கோதுமையை எடுக்கிறார்.
புள்ளிவிவர ஏமாற்று
பாமர இந்திய உழவரோ 555 கிலோ கலோரியைச் செலவிட்டு, 3,151 கலோரியை ‘முட்டாள்தனமாக' எடுக்கிறார். என்னே நமது அறிஞர்களின் ‘வியாக்யானங்கள்', விளக்க உரைகள்! அது மட்டுமா, நமது உழவரின் ஆற்றல் முழுக்க முழுக்கப் பசுமையானது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதது.
இந்த உழவைப் பாதுகாக்காமல், ‘அக்கரை' உழவுக்கு ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கிறோம். இதுபோல இன்னும் நிறைய புள்ளிவிவர ஏமாற்றுகள் உள்ளன. காலம் வரும்போது ஒவ்வொன்றையும் பார்ப்போம். வெறுமனே புள்ளிவிவர ஏமாற்றுத் தகவல்களை மட்டும் பார்க்காமல், உண்மையை உணர்ந்துகொள்ள முயற்சிப்போம்.
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com