சு. அருண் பிரசாத்
வெவ்வேறு சூழலியலைக் கொண்ட, தனித்த இயல்புடைய நில அமைப்புகள் உலகம் முழுக்க பரவியுள்ளன. எடுத்துக்காட்டாக, பிரேசிலில் உள்ள அமேசான் காடுகள், ஏறக்குறைய 16,000 வகை மரங்களையும், கணிசமான எண்ணிக்கையில் தாவர-விலங்கினங்களையும் கொண்டிருக்கிறது.
சஹாரா பாலைவனம் 2,800 தாவர இனங்களை மட்டுமே கொண்டிருந்தாலும், பெரும் காற்றோட்டங்களின் மூலம் அமேசான் காட்டுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. மற்ற கண்டங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, ஆஸ்திரேலிய கண்டத்தின் தாவர-விலங்கின வகைகள் தனித்துவமானவை. அந்த வகையில், இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதியில் நீண்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய அங்கமான நீலகிரி முக்கியத்துவம் வாய்ந்தது.
5,000 சதுர கி.மீ. மட்டுமே கொண்ட நீலகிரியின் பரப்பளவு, புவியியல்-வரலாற்று ரீதியில் மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது; அதன் இயற்கை வளம் பிரமிக்கத்தக்கது. உலகில் வேறெங்கும் இல்லாமல், குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வாழும் உள்ளூர் உயிரினங்கள் இங்கு ஏராளம்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ப்பன்மைச் செழுமைக்கு நீலகிரி முக்கியப் பங்காற்றுகிறது. தாவரங்கள், விலங்கினங்கள் உள்ளிட்ட காட்டுயிர்கள் வாழ்வதற்கு துணைசெய்யும் நீலகிரி மலையுடன் இயைந்த வாழ்க்கையை மேற்கொண்ட அதன் பூர்வகுடிகளின் கதையும் வரலாற்றில் தவிர்க்க முடியாதது.
காடுகளும் புல்வெளிகளும் போர்த்தியிருந்த நீலகிரி மலையின் வெப்பமண்டல ‘மான்டேன்’ காடுகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தேயிலைப் பயிரிடுவதற்காக திருத்தப்பட்டன. சோலைகள் என்று உள்ளூர் மொழியில் வழங்கப்பட்ட இந்தச் சூழலியல் தொகுதி, கடந்த இருநூறு ஆண்டுகளில் 80 சதவீதம் அழிந்துவிட்டது.
இதன் விளைவாக தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட காட்டுயிர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையத் தொடங்கியது. தேயிலை-காபித் தோட்டங்கள், அயல் மரங்கள்-சிறு தாவரங்கள் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பால், மரபார்ந்த காடுகளின் பரப்பு 20 சதவீதத்துக்குச் சுருங்கிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மலையின் குரல்
மலைகளுக்கு உயிர் உண்டு, நிலத்துக்கு உணர்வு உண்டு, நதிகளுக்கு அறிவு உண்டு என உலகம் முழுவதும் உள்ள பூர்வகுடிகள் தொடர்ந்து கூறிவந்தனர்; அறிவியல் அதைச் சந்தேகித்தது. இந்தப் பின்னணியில் எளிமையான, ஆனால் ஆச்சரியமூட்டும் ஆதாரங்களுடன் தென் இந்தியாவின் மலைத் தொடர்கள் உயிரும் உணர்வும் கொண்டிருக்கின்றன என்று அறிவியல்பூர்வமான வாதத்தை ஒரு நூல் முன்வைக்கிறது; நீலகிரி மலைப் பரப்பு எதிர்கொண்டிருக்கும் சூழலியல் சவால்கள், அதன் உள்ளேயே இருக்கும் தீர்வுகள், காலநிலை மாற்ற யுகத்தில் மனிதர்களின் பொறுப்புணர்வு என நீலகிரி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சூழலியல் பாதுகாப்புக்குமான வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் ஆகியவற்றை வழங்கும் அந்த நூல் ‘வாய்ஸ் ஆஃப் அ சென்டியென்ட் ஹைலேண்ட்’. சூழலியலாளர் காட்வின் வசந்த் போஸ்கோவின் முதல் நூல் இது.
நீலகிரியைப் பூர்விகமாகக் கொண்ட காட்வின், தன் வாழ்க்கை அனுபவங்கள், நீலகிரியின் உயர்நிலை நிலப்பரப்புகள், அதன் தாவரங்களை உள்ளடக்கிய காட்டுயிர் சார்ந்த விரிவான ஆய்வுகள் ஆகியவற்றின் அடித்தளத்தில், ஒன்பது ஆண்டுகால உழைப்பில், நீலகிரியின் மாபெரும் சூழலியல் வரலாற்றை இந்த நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.
தவிக்கும் தாவரங்கள்
நீலகிரியில் அதிகரித்து வரும் வெப்பநிலை தாழ்வான பகுதிகளில் உள்ள தாவரங்களை மேல் நோக்கி நகரச் செய்யும். ஏற்கெனவே உச்சியில் உள்ள தாவரங்களால் இதுபோல் மேலேறி தகவமைத்துக்கொள்ள முடியாது. இது வெப்பநிலை உயர்வால் ஏற்படும் ஒரு பின்னணி நிகழ்வு மட்டுமே.
அதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கும் முன்பே, வேறு சில மோசமான விளைவுகளும் ஏற்படலாம். 2011 - 2018-க்குஇடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் நீலகிரி மரங்கள் வலுவிழந்து இறப்பைச் சந்திப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதன் தண்டு, வேர் ஆகியவற்றைப் பரிசோதித்தபோது, அவற்றில் ஏதும் நோய் இல்லை என்பதும் அதன் காரணமாக அவை இறக்கவில்லை என்பதும் உறுதியானது.
நீலகிரியில் சில பத்தாண்டுகளாக அதிகரித்துவரும் மழைப்பொழிவு, வரும் காலத்தில் அதிதீவிர மழைப்பொழிவாக உருவெடுக்கும்; அதற்கு இணையான காலத்தில் கடும் வறட்சியும் உருவாகும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
காலநிலை மாற்றம்
வளிமண்டலத்தில் அதிகரித்துவரும் கரியமில வாயு, தாவர வகைகளில் முதலில் பாதிப்பது புல்வெளிகளைத்தான். வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு மிகக் குறைவாக இருந்த காலத்தில் உருவாகி பரிணாமம் பெற்றவை, நீலகிரிப் புல்வெளிகள்.
அதிகப்படியான கரியமில வாயுவை கிரகிக்கும் திறன் இவற்றுக்கு இல்லாததால், அவை பாதிப்புக்குள்ளாகின்றன. மேலும், மண்ணில் சேகரமாகும் கரியமில வாயு, அவற்றின் தன்மையைக் குலைத்து நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்; அதன்மூலம் தாவரங்களின் திசுக்களில் கரியமில வாயு சேரும் அபாயமும் இருக்கிறது.
இத்தகைய சிக்கல்களைக் களைவதற்கு, புரிந்துகொள்ளவதற்கும்-செயல்படுத்துவதற்கும் எளிய வழிமுறைகளை இந்த நூல் பரிந்துரைக்கிறது. தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் உள்ளிட்டவற்றையே உயிருள்ளவையாக அறிவியல் அங்கீகரிக்கிறது. ஆனால், நிலங்களும் மலைகளும் நதிகளும்கூட உயிருள்ளவைதான், அவற்றுக்கும் உணர்வு உண்டு என்பதை அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் காட்வின் முன்வைக்கிறார்.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகவும் ஆழமாகவும்; அத்தியாங்களின் இறுதியில் மஞ்சள் வண்ணப் பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள அதன் சுருக்கங்களை வாசிப்பதன் மூலம் விரைவாகவும்; இந்த இரண்டு வழிகளிலும் சேர்த்து மிதமான வேகத்தில் என மூன்று வழிகளில் இப்புத்தகத்தை வாசிக்கும் வசதியை ஆசிரியர் வழங்கியிருக்கிறார்.
மேற்குத் தொடர்ச்சி மலை, நீலகிரி உயர்நிலை நிலப்பரப்பு, அதன் காடுகள், சூழலியல் சார்ந்த ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஓர் முழுமையான வழிகாட்டியாக இந்நூல் திகழ்கிறது.
புத்தக அறிமுகம்
Voice of a Sentient Higlandby Godwin Vasanth Boscoவெளியீடு: Partridge India
தொடர்புக்கு: partridgepublishing.com/india