உயிர் மூச்சு

நீராலானது!

செய்திப்பிரிவு

புவியின் பரப்பில் 71 சதவீதம் நீரால் சூழப்பட்டிருக்கிறது; அதில் 96.5 சதவீதம் கடல்நீரால் ஆனது என்று பள்ளியில் நாம் படித்திருப்போம். ஆனால், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் புவி முழுவதும் கடலாக இருந்ததற்கான ஆதாரங்களை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். புவியில் முதல் ஒரு-செல் உயிரி எப்படித் தோன்றியது என்பதைக் குறித்த கோட்பாடுகளைத் திருத்தியமைப்பதற்கு அறிவியலாளர்களுக்கு இந்தக் கண்டறிதல் உதவும்.

ஆதியில் புவி எப்படி இருந்தது என்பதைப் பற்றிய புதிய சாத்தியங்களை அறிய, அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகப் பேராசிரியர் போஸ்வெல் விங், அயோவா மாகாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஜான்ஸன் ஆகிய இருவரும் இணைந்து புதிய ஆராய்ச்சி ஒன்றைத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் வடமேற்கு பகுதியில் பனோரமா மாகாணத்தில் உள்ள 320 கோடி ஆண்டுகள் பழைமையான பெருங்கடல் தரையைத் தங்கள் ஆய்வுக்கான புவியியல் தளமாகக் கொண்டனர்.

புவி முழுக்க கடல்நீர் சூழ்ந்திருந்த அப்போதைய காலகட்டம் குறித்த வேதியியல் படிமங்களைக் கொண்டிருக்கும் கற்களை அவர்கள் பரிசோதித்தனர்.

ஆக்ஸிஜன்-16, அதைவிட சிறிது அதிக கனம்கொண்ட ஆக்ஸிஜன்-18 ஆகிய ஐசோடோப்புகளை நூற்றுக்கும் அதிகமான கற்களில் அவர்கள் பரிசோதித்தனர். 320 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான அந்தப் கற்களில் ஆக்ஸிஜன்-18 ஐசோடோப்புகள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பெருங்கடல்களின் கனமான ஆக்ஸிஜன் ஐசோடோப்புகளை கிரகித்துக்கொண்ட இந்தக் கற்கள் உருவான காலத்தில், புவியில் கண்டங்கள் இல்லை என்று நம்பும்படியான முடிவுகளை இந்த பரிசோதனை வழங்கியது. அந்த காலகட்டத்தில் ஒரு துண்டு நிலம்கூட புவியில் இருக்கவில்லை என்பது இதன் பொருள் அல்ல; இங்கும் அங்குமாக சிறு நிலப்பரப்புகள் இருந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு இருப்பதைப் போன்ற கண்டங்களை மையப்படுத்தியதாக இல்லை!

- அபி

SCROLL FOR NEXT