உயிர் மூச்சு

பசுமை எனது வாழ்வுரிமை 21: இமயமலையைக் காப்போம்

செய்திப்பிரிவு

கு.வி. கிருஷ்ணமூர்த்தி

தேரி அணை எதிர்ப்புப் போராட்டத்தின் மூன்றாம் கட்டம் 1991-ல் தொடங்கியதாகக் கருதலாம். அந்த ஆண்டில் பொதுக்கூட்டங்கள், தர்ணாக்கள் நடைபெற்றன. 1992 மார்ச் 20 அன்று தர்ணாவில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்த மக்கள் பயணித்த பேருந்து மலைப் பாதையிலிருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் 16-க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். இது இயற்கையாக நடந்ததா என்பதில் போராட்டக் குழுவில் பலருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

ஏனென்றால், இந்த விபத்து பற்றி வழக்கு, விசாரணை எதுவும் நடைபெறவில்லை. இந்த விபத்தின் காரணமாக, பகுகுணா தலைமையில் தொடர்ச்சியாக 75 நாட்களுக்கு காந்திய வழியில் போராட்டம் தொடர்ந்தது. இதனால் அவர் கைது செய்யப்பட்டு 10 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்த நிகழ்வுகளின் விளைவாக அணைக் கட்டமைப்பு வேலை டிசம்பர் 1994 வரை, இரண்டரை ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டது.

இமயம் காப்போம் போராட்டம்

போராட்டத்தின் நான்காம் கட்டம் 1992 மே 15 அன்று தொடங்கியது. தேரியில் போராட்டக் குழு ஏற்பாடு செய்திருந்த தர்ணா கூட்டத்தின் மூன்றாவது, கடைசி நாள். அன்று ‘இமயமலையைக் காப்போம் இயக்கம்’ இயக்கம் தொடங்கப்படுவது பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தேரி அணைப் போராட்டம் மொத்த இமயமலைச் சூழலியல் பாதுகாப்புப் போராட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக மாறியது; அதாவது தேரி அணை எதிர்ப்பு இயக்கத்துக்கு ஒரு புதிய சமுதாய இயக்க வடிவம் கிடைத்தது.

இந்தப் பிரகடனத்தின் மூன்று முக்கிய முடிவுகள்: 1) தேரி அணைக்கு பதிலாக மலைச்சரிவில் வழிந்தோடும் நீரை ஆங்காங்கே சிறுசிறு தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் பெரிய அணையின் முக்கிய நோக்கங்களை ஓரளவுக்கு பூர்த்தி செய்யலாம், இது சூழலுக்கு இயைந்த (environmental friendly) செயல்பாடாக இருக்கும்; 2) மொட்டையாக்கப்பட்ட மலைச்சரிவுகளை புதுக் காடாக்குவது; 3) வேளாண் காடாக்க முயற்சிகளை மேற்கொள்வது.

தீவிரமடைந்த போராட்டம்

போராட்டத்தின் ஐந்தாம் கட்டம் 1994 டிசம்பரில் தொடங்கியதாகக் கருதலாம். பகுகுணாவின் உண்ணாவிரதப் போராட்டங்கள், ஊடகங்களில் அதற்குக் கிடைத்த வரவேற்பு, ‘இமயமலையைக் காப்போம் இயக்க’த்தின் ஒரு முக்கிய அங்கமாக தேரி அணைப் போராட்டம் மாறியது போன்றவற்றால் இந்தப் போராட்டத்துக்கு தேசிய அந்தஸ்து கிடைத்தது. என்றாலும், அதே மாதத்தில் அணையின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

பகுகுணாவும் இதர போராட்டக்காரர்களும் அணைக்குச் செல்லும் சாலையை ஆக்கிரமித்து அணைப் பணியாளர்கள் பணிக்குச் செல்வதைத் தடை செய்தனர். ஒரு சில அணை பணியாளர்களும் இந்தத் தடையில் பங்கேற்றனர். இதனால் அவர்கள் மேல் காவல்துறை தடியடி நடத்தியது. பலர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர். பகுகுணா தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் புது டெல்லி சிறைக்கு இடம் மாற்றப்பட்டார். சிறையில் அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது.

இதன் விளைவாக மீண்டும் அணை கட்டுவதை மறுபரிசீலனை செய்ய 1996 ஜூன் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. என்றாலும், துரதிர்ஷ்டவசமாக ஒராண்டு கடந்தும் மறுபரிசீலனை நடைபெறவே இல்லை. இதனால் பகுகுணா மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். அணை கட்டுவதை எதிர்க்கட்சிகளும் சேர்ந்து எதிர்த்தன. வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. அணை கட்டுவது சட்டப்படி சரியானதே என்று உச்ச நீதிமன்றம் 2003 செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியதால் போராட்டக்காரர்களுக்கு இருந்த அனைத்து சட்ட வழிகளும் அடைக்கப்பட்டன.

போராட்டச் சரிவு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக அணையின் அனைத்து வாயில்களும் நவம்பர் 2005-ல் மூடப்பட்டன. அணை முழுவதும் நீரால் நிரம்பியது மட்டுமின்றி சுற்றியிருந்த தேரி பகுதிகளை முழுவதுமாக மூழ்கடித்தது. போராட்ட இயக்கத்தின் தலைமை இடமாகத் திகழ்ந்த பகுகுணாவின் குடிசைகளையும் முற்றிலும் மூழ்கி அழித்தது.

அணை எதிர்ப்புப் போராட்டமும் படிப்படியாகக் குறைந்தது. வட்டார மக்கள் பயம் - பேராசையின் ஆற்றலுக்கு அடிபணிந்தனர். மக்கள் பலர் இழப்பீட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு திருப்தியடைந்தனர். போராட்டத்தின் வீழ்ச்சிக்கான மற்றொரு காரணம், இயக்கத்தை வலுவாக வழிநடத்திச் செல்வதற்கான ஒருங்கமைவையோ, நிறுவன அமைப்பையோ உருவாக்கம் செய்யத் தவறியதே.

என்றாலும், இந்தப் போராட்டத்தின் மூன்று முக்கிய முடிவுகள் குறிப்பிடத்தக்கவை: 1) அணையின் கட்டுமானம் மிகவும் நீண்ட காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டது; 2) பல சூழல்-தாக்கப் பரிசீலனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு இமயமலைப் பகுதியின் சூழலியல் நன்கு ஆய்வு செய்யப்பட்டது; 3) இந்தியாவின் இதர அணை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இது ஓர் தளமாக அமைந்தது.

(தொடரும்)

கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்

தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

SCROLL FOR NEXT