மண் வளம் காக்கும் அதேநேரத்தில், விதைகளுக்கு இயற்கை முறையில் வீரியம் கூட்டும் பயோ ஃபிக்ஸ் (Bio Fix) என்னும் இயற்கையான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார் பேராசிரியர் நந்தகோபால்.
சென்னை மாநிலக் கல்லூரியில் மனோதத்துவம் படித்த நந்தகோபால், நஞ்சியலும் (Toxicology) முடித்தவர். இயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேளாண் துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே இவரும் இவருடைய சகோதரர் பிரேம்குமாரும் இணைந்து ’ரெவல்யூஷன்ஸ்’ என்னும் ஆராய்ச்சி நிறுவனத்தை 1987-ல் தொடங்கினார்கள். அந்த நிறுவனம் சார்பில் ’பயோ ஃபிக்ஸ்’ என்ற இயற்கை தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு 2009-லிருந்து மூன்றாண்டுகள் போராடி, இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார் நந்தகோபால். இந்தக் கண்டுபிடிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு வேளாண் நிறுவனங்களின் களஆய்வில் உள்ளது.
மண்புழு அழிவு
பயோ ஃபிக்ஸ் குறித்து நந்தகோபால் பகிர்ந்துகொண்டார்:
கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும்போது, அதிக அளவில் அமோனியா வாயு வெளிப்படும். அமோனியாவுடன் கரியமில வாயுவைக் கலந்தால் அமோனியம் கார்பனேட் கிடைக்கும். அதுதான் வயலுக்குப் பயன்படுத்தும் யூரியா. கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் இடங்களுக்கு அருகிலேயே, ரசாயன உரத் தொழிற்சாலைகள் இருப்பதன் ரகசியம் இதுதான்.
இந்தியாவுக்குள் 1960-களில் யூரியா வந்தது. அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்குள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே ரசாயன உரங்களுக்கு அடிமைப்பட்டது. அந்தப் பதினைந்து ஆண்டுகள் நமக்குத் தந்த பரிசு, குடியானவர்களின் நண்பனான மண்புழுக்கள் நிலத்திலிருந்து அழிக்கப்பட்டதுதான்.
இயற்கைத் தொழில்நுட்பம்
பொதுவாகத் தாவரங்களுக்கு, அவற்றுக்கே உரித்தான இயல்பூக்கச் சக்தி (Vigour of the plant) உண்டு. இந்த சக்தியைக் கொண்டு, தம்மைத் தாக்க வரும் பூச்சிகளை, இவை சுரப்பிகளைச் சுரந்து விரட்டுகின்றன. ரசாயன உரங்களால் தாவரங்கள், இந்தச் சக்தியை இழந்துவிட்டன. இதனால், 1975-க்குப் பிறகு பயிர்கள் அதிகமான பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகின. இதைச் சமாளிப்பதற்காக மேற்கத்திய நிறுவனங்கள், அதிக விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்தன.
பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்யத் தொடங்கிய 12 ஆண்டுகளுக்குள், தாவரங்களுக்குத் துணைச் செய்யும் நல்ல பூச்சிகளும் அழிக்கப்பட்டன. இதனால் தாவரங்கள் பல நோய்கள், நுண் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின.
இப்படி, ஒன்றை அழிக்க இன்னொன்று. பிறகு, அதனால் வரும் விளைவுகளைச் சமாளிக்க மற்றொன்று என மாறி மாறி ரசாயனங்களைக் கொட்டி நிலங்களையும், பயிர்களையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தச் சவால்களை எல்லாம் எதிர்கொள்ளும் வகையில் விதைகளைத் தயார்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இயற்கைத் தொழில்நுட்பம்தான் பயோ ஃபிக்ஸ் (Bio Fix)’’ என்கிறார் நந்தகோபால்.
சர்வரோக நிவாரணி
பயோ ஃபிக்ஸ், தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தண்ணீர் கலந்த ஒரு கலவை. இதில் விஷத் தன்மை கிடையாது. நாம் அப்படியே குடித்தாலும் எந்தப் பாதிப்பும் வராது. ஒரு கிலோ விதைக்கு 100 மி.லி. பயோ ஃபிக்ஸ் போதுமானது. இந்தத் திரவத்தில் விதைகளை ஊறவைப்பதன் மூலம் விதைகளில் உள்ள நுண் கிருமிகளும், அவற்றோடு தொற்றியிருக்கும் பூஞ்சானங்களும் அகற்றப்படும். இதனால் விதைகள் கூடுதல் பலம் பெறும். இந்த விதைகள் மண்ணுக்குப் போகும்போது, மண்ணில் உள்ள கிருமிகள் தாக்காது.
இந்த விதைகளிலிருந்து முளைக்கும் பயிர் 30-லிருந்து 50 சதவீதம் கூடுதல் மகசூலைக் கொடுக்கும். பயிர்கள் முழு சக்தியுடன் வளர்வதால், பூச்சிகளின் தாக்கம் இருக்காது. தொழு உரம் மட்டும் போதுமானது; வேறு ரசாயன உரங்கள் அவசியமில்லை. பயோ ஃபிக்ஸ் திரவத்தில் நனைக்கப்பட்ட விதைகளை ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகள்வரை தொடர்ந்து பயன்படுத்தினால், அந்த நிலங்களில் மண்புழுக்கள் மீண்டும் உற்பத்தியாகும்.
உலக அங்கீகாரம் தேடி
ஒரு ஏக்கரில் தக்காளி பயிர் செய்வதற்கு 300 கிராம் விதை போதும், இந்த விதையிலுள்ள கிருமிகளை அகற்ற 10 மில்லி பயோ ஃபிக்ஸ் திரவம் போதும். இதற்கு ஆகும் செலவு 20 ரூபாய்க்குள் இருக்கும். ஆனால், ஒரு ஏக்கர் தக்காளிக்குப் பூச்சி மருந்து அடிக்க வேண்டுமானால், மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய்வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
"இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நிறுவனங்கள் எங்களது பயோ ஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு முன்வந்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் பரிசோதனை முடிவுகள் சமர்ப்பிக்கப்படும். ஃபிக்கி (Federation Of Indian Chambers Of Commerce And Industry) நடத்தும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில், இந்த ஆண்டு கலந்துகொள்கிறோம். அங்கே அங்கீகாரம் கிடைத்துவிட்டால் பயோ ஃபிக்ஸுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துவிடும்" என்கிறார் நந்தகோபால்.
"பயோ ஃபிக்ஸ் திரவத்தைத் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள் உலகின் எந்த மூலையிலும் மிக எளிதாகக் கிடைக்கக்கூடியது. உலகில் விடை கிடைக்காத சவால்களுக்கு இயற்கை முறையில் பதில் காண்பதுதான் எங்களுடைய ஆராய்ச்சியின் நோக்கம். அதை இப்போது அடைந்திருக்கிறோம்’’ - உற்சாகத்துடன் விடைகொடுக்கிறார் நந்தகோபால்
- பயோ ஃபிக்ஸ் நந்தகோபால் தொடர்புக்கு: 93823 08369