பூநாரைகள் படங்கள்: R.G. ஸ்ரீகாந்தா 
உயிர் மூச்சு

காட்டுயிர் வகைப்பாட்டியல்: என்ன பேரு வைக்கலாம்… எப்படி அழைக்கலாம்?

செய்திப்பிரிவு

சு. தியடோர் பாஸ்கரன்

அண்மையில் தேனியில் நடைபெற்ற பறவை அவதானிப்பவர்களின் ஆண்டுக் கூடுகையில் 160 பேர் பங்கேற்ற செய்தி காட்டுயிர் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது. இந்தக் கூட்டத்தில் பல தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன என்றறிகிறேன். அதில் ஒரு பொருள், தமிழில் பறவைகளின் பெயர் தொடர்புடையது.

இன்று புறச்சூழலிலும் பறவைகளை அவதானிப்பதிலும் ஈடுபாடு வளர்ந்துவருகிறது. கோவை, சேலம், சென்னை போன்ற நகரங்களில் பொங்கல் வேளையில் பறவை கணக்கெடுப்புப் போட்டி நடத்தப்படுகிறது. இதுபோன்ற தருணங்களில் பறவைகளின் பெயர்கள் பற்றிக் கேள்விகள் எழுகின்றன.

தமிழ்ப் பெயர்கள்?

தமிழ் மரபில் பல பறவைகளுக்கு, அதிலும் மக்கள் வாழுமிடங்களுக்கு அருகில் இல்லாத புள்ளினங்களுக்குப் பெயர்கள் கிடையாது. வண்ணத்துப்பூச்சிகளுக்குத் தமிழில் தனித்தனிப் பெயர்கள் இல்லை; அடர்ந்த சோலையில் வாழும் மலபார் டிரேகான் எனும் கண்ணைக் கவரும் புள்ளினத்துக்கு நம்மிடம் பெயரில்லை. தீக்காகம் எனச் சில ஆண்டுகளுக்கு முன் பெயர் சூட்டப்பட்டுப் புழக்கத்தில் வந்துவிட்டது.

சில பறவைகளுக்கு அவற்றின் இனப்பெயர் மட்டும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது; எடுத்துக்காட்டு மீன்கொத்தி. தமிழ்நாட்டில் மட்டும் ஆறு வகை மீன்கொத்திகள் உண்டு. இவை ஒவ்வொன்றையும் எப்படிப் பிரித்தறிந்து குறிப்பிடுவது? எல்லாவற்றையும் ஒரு பொதுப்பெயரில் மீன்கொத்தி என்றே குறிப்பிடுகிறோம்.

அதேபோல் புறா, கிளி, மைனா, காடை போன்ற பறவைகளையும் பொது இனப்பெயரில்தான் நாம் அறிந்திருக்கிறோம். இன்று நம்மிடம் இருநோக்கி (Binoculars) இருப்பதால், அசப்பில் ஒன்றுபோல் தோன்றும் பறவைகளிடையே உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில், அவற்றைத் தனித்தனி இனமாக கண்டுகொள்ள முடிகிறது. இந்தத் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் புள்ளினங்களை வேறுபடுத்தி அடையாளம் காண முடியவில்லை. ஆகவே, தனித்தனிப் பெயர்களும் உருவாகியிருக்கவில்லை.

புது முயற்சி

தமிழ்நாட்டில் காட்டுயிர் ஆர்வலர்கள் சிலர் 2013 மே மாதம் சென்னையில் ‘பசுமைச் சந்திப்பு’ என்ற பெயரில் கூடி இந்தப் பொருள் பற்றி விவாதித்தார்கள். புதிய பெயர்களைச் சூட்டவும், பழைய பெயர்களை மீட்டெடுக்கவும், ப. ஜெகநாதன் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள், பறவையியலாளர்களைக் கொண்ட இந்தக் குழு தீர்மானித்தது. அதற்காக tamilbioterms@googlegroup.com
என்ற மின்னஞ்சல் குழுவை உருவாக்கினார்கள்.

புதிய பெயர்கள் தேவையென்றால் இங்கே பதிவிட்டு மற்றவர்களுடைய கருத்துகளை அறிய முடியும். பொருத்தமானது என்று ஒருவர் நினைக்கும் ஒரு பெயரை இந்த குழுவில் முன்வைக்கலாம். இப்படி, Crane என்னும் பறவைக்கு பெருங்கொக்கு என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பது பொருத்தமானது. Crane, Stork, Egret ஆகியவை தனித்தனிப் பேரினங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

தமிழ்நாட்டில் காண முடியாத பல பறவைகள், நம் நாட்டின் பிற பகுதிகளில் உள்ளன. அவற்றை எந்தப் பெயரில் குறிப்பிடுவது? எடுத்துக்காட்டாக சாரஸ் கிரேன். எப்போதும் இணை பிரியாமலிருக்கும் இந்தப் பறவைதான், ராமாயணம் எழுதப்பட காரணமாயிருந்தது என்பது ஒரு தொன்மம். இந்தப் பெயர்ப் பிரச்சினையைப் பறவை ஆர்வலர்கள்தாம் தீர்க்க முடியும்.

தமிழ் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், இருக்கவே இருக்கிறது முகநூல் என்று ஆளாளுக்குப் புதுப்புதுப் பெயர்களை வைத்து, குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். அது மட்டுமல்ல, சில பறவைகளுக்குப் பல பெயர்கள் உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பெயர்களும் குழப்பமும்

பொதுவாக மரபுத் தமிழ்ப்பெயர்கள், ஒரே ஒரு சொல்லாக இருக்கும். மயில் என்பதைப் போன்று; அரிதாக, காட்டுக்கோழி போல் இருசொற்களைக் கொண்டிருக்கும். இன்று புழக்கத்திலிருக்கும் தமிழ்ப்பெயர்களில் பல காரணப்பெயர்கள் உண்டு. அவை தோற்றத்தைச் சார்ந்து இருக்கலாம் (வேதிவால் குருவி); அது எழுப்பும் குரலின் அடிப்படையில் பெயர் வரலாம் (குக்குறுவான்); வாழிடத்தைச் சார்ந்திருக்கலாம் (பனங்காடை); அதன் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம் (மரங்கொத்தி); பெயர் சுருக்கமாக இருந்தால் மனத்தில் எளிதில் பதிவது மட்டுமல்ல, புழக்கத்திலும் சீக்கிரமே வந்துவிடும்.

பிரிட்டிஷ் காலத்துப் பறவை ஆர்வலர்களும் தங்கள் விருப்பப்படி பெயர் சூட்டி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். காகத்துக்கும் காட்டுக்கோழிக்கும் தொடர்பே இல்லாத செம்பூத்துக்கு, Crow Pheasant என்று பெயர் வைத்துவிட்டார்கள். ஆங்கிலேயர் வைத்த பெயர்களை இன்று சிலர் மொழிபெயர்த்து, குழப்பத்தைக் கூட்டுகிறார்கள். தமிழில் பெயர் உள்ள சில பறவைகளுக்கும் இந்தத் தண்டனை கொடுக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக Brown-headed Flycatcher என்ற பறவையை ‘சாம்பல் நிற ஈப்பிடிப்பான்’ என்று ஒரு புகழ்பெற்ற காட்டுயிர் நிறுவனம் வெளியிட்ட கையேடு பெயர் சூட்டியுள்ளது. இது ஏதோ சாம்பல் நிற ஈயைப் பிடித்து தின்னும் பறவை என்று அர்த்தமாகிவிடுகிறது. முதலாவது fly என்று குறிப்பிடப்படுவது ஈ அல்ல. (ஈ என்ற சிற்றுயிரின் ஆங்கிலப்பெயர் House fly). இரண்டாவது flycatcher என்ற சொற்றொடர் அந்தப் பறவை அதன் இரையைப் பறந்தபடியே பிடிக்கிறது என்பதையே குறிக்கிறது.

மரபுப் பெயர்கள்

கிராமப்புறங்களில் இன்றும் புழங்கும் பெயர்கள் பல கி.ராஜநாராயணன், பெருமாள் முருகன், சோ.தர்மன், ராஜ் கெளதமன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளில் மிக இயல்பாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன; பல பெயர்களை இவர்களுடைய படைப்புகளிலிருந்து நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். பறவைகள் மட்டுமல்ல, வேறு சில காட்டுயிர்களின் பெயர்களையும் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் நாம் படிக்கும்போது கண்டறிய முடியும்.

ஒரு புள்ளினத்தின் பெயரை அறிய வேண்டுமென்றால் முதலில் புழக்கத்தில் அதற்குத் தமிழில் பெயர் உள்ளதா என்று பார்க்க வேண்டும். நாட்டுப்புறத்தில் பல பெயர்கள் உயிர்ப்புடன் இருக்கும். அவற்றை நாம் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் Sandgrouse எனும் பறவையின் கல்கெளதாரி என்று சூட்டப்பட்ட பெயர் உருமாறி, கதுவேளி என்று இன்று அறியப்படுகிறது. பல பெயர்கள் இவ்வாறு மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அன்றில் இன்னொரு எடுத்துக்காட்டு.

காரணப் பெயர்கள்

தமிழில் பெயரில்லாத பறவைக்கு, அதன் இயல்பைச் சார்ந்து பெயரிடலாம். பாம்புண்ணிக் கழுகு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நம்மிடையே மறக்கப்பட்ட சில தமிழ்ப்பெயர்கள் இலங்கையில் புழக்கத்தில் இருக்கின்றன. நாகணவாய்ப்புள் (Hill myna) ஓர் எடுத்துக்காட்டு.

அதேபோல் வெளிநாட்டுப் பறவைகளுக்கும் தமிழில் பெயர் வைக்கலாம். ஹம்மிங் பேர்ட் பறவையை ‘ரீங்காரச்சிட்டு’ என்று மேட்டுப்பாளையம் முகமது அலி குறிப்பிட்டார். வண்டு அதன் இறகுகளால் எழுப்பும் ரீங்கார ஒலி போல், ஹம்மிங் பேர்டின் ஒலியும் அதன் இறகுகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் உண்டாவது. எனவே, ரீங்காரச்சிட்டு.

தமிழ்ப்பெயர்களை அறிந்து கொள்ள புலவர் க. ரத்னம் எழுதிய ‘தமிழ்நாட்டுப் பறவைகள்'என்ற நூலும் ப. ஜெகநாதன், ஆசை எழுதிய ‘பறவைகள்: ஒரு அறிமுகக் கையேடு' நூலும் உதவும். ஆனால், எல்லாப் புள்ளினத்துக்கும் லத்தீன் மொழியிலான தனிப்பட்ட அறிவியல் பெயர் ஒன்று இருக்கிறது. இளம் பறவை ஆர்வலர்கள் பலர் இவற்றை அதிகம் பயன்படுத்துவைதைக் கவனித்திருக்கிறேன்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொiடர்புக்கு: theodorebaskaran@gmail.com

SCROLL FOR NEXT