கு.வி. கிருஷ்ணமூர்த்தி
கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சிர்சி நகருக்கு அருகில் உள்ளது குப்பி கட்டே (Gubbi Gadde) கிராமம். இங்குள்ள ஹூஸ்ரி பகுதியில் 8 மரங்கள் வெட்டப்பட்டது, அப்பகுதியைச் சேர்ந்த சால்கானி மக்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது; உலிசு (காப்பாற்று), பெலசு (வளர்க), பலசு (பலப்படுத்து) என்ற முழக்ககங்களுடன் மரங்களைக் கட்டித் தழுவிக்கொண்டு காட்டுக்குள் 38 நாட்களுக்கு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காடுகளையும் மரங்களையும் முறைப்படுத்தப்பட்ட வகையில் (Sustainable) பயன்படுத்துங்கள் என்ற அறைகூவலோடு அப்பிக்கோ இயக்கம் பிறந்தது; சிப்போ இயக்கத்தின் தென்னிந்திய வடிவம் என்று வழங்கப்படும் இதன் பொருளும் ‘கட்டித் தழுவிக்கொள்ளுதல்’ என்பதுதான்!
வளர்ச்சியின் பெயரால்...
1950-களில் சிர்சியின் 81 சதவீதத்துக்கும் அதிகமான பகுதிகள் காடுகளைக் கொண்டிருந்தன. வளர்ச்சியில் பின்தங்கியதாகக்கருதப்பட்ட சிர்சி பகுதி, காகிதம் - மரக்கூழ் தயாரிக்கும் ஆலை, பிளைவுட் ஆலை, தொடர்ச்சியான நீர்-மின்சார அணைகள் உள்ளிட்ட பல பெரிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதன் காரணமாக, 81 சதவீதம் இருந்த காடுகளின் பரப்பு, 30 ஆண்டுகளுக்குள் (1980-க்குள்) வெறும் 25 சதவீதமாகக் குறைந்தது. அணைகளால் அதிக மலைவாழ் மக்கள் இடம்பெயர்க்கப்பட்டனர், ஒற்றைப் பயிர் மரத்தோட்டங்கள் (Monoculture plantations) மண்நீரை உறிஞ்சிவிட்டன. காட்டை நம்பி வாழ்ந்துவந்த மக்கள் அதன் பயனை அடைய முடியாமல் தவித்தனர்.
பாண்டுரங்க ஹெக்டே என்ற இயற்கைப் பாதுகாப்புப் போராளி 1983 செப்டம்பர் 8 அன்று அப்பிக்கோ இயக்கத்தைத் தொடங்கினார். ஒற்றைப் பயிர் - வெளிநாட்டு மரக்காடுகளையும், தோட்டங்களையும் வளர்க்கும் முயற்சிக்கு எதிராக மேற்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் மலைவாழ் மக்களுடைய வாழ்க்கையின் ஓர் அங்கமாக இன்றைக்கு மாறிவிட்டது.
இந்த இயக்கத்தின் விளைவாகச் சூழலியல் கூருணர்வு (Ecosensitive) கொண்ட பகுதிகளில் மரம் வெட்டுதல் நிறுத்தப்பட்டது. இதேபோல், காடு சிதைந்துள்ள இடங்களில், காடுவளர்ப்பு (Afforestation) முயற்சிகளை மேற்கொள்ள இந்த இயக்கம் வழிகோலியது. கிராம மக்கள் காட்டு மரக்கன்றுகளை வளர்த்து இதற்கு உதவினார்கள். சிர்சி பகுதியில் மட்டும் 12 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, ஒவ்வொன்றும் 20 காசுக்கு மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதற்கு பர்சாரா சம்ரக்ஷனா கேந்திரங்கள் உதவின. இவை பாண்டுரங்க ஹெக்டேயின் முயற்சியால் பல பகுதிகளில் நிறுவப்பட்டன.
விழிப்புணர்வின் வடிவம்
நாட்டார் கதைகள், பண்பாட்டு நடைமுறைகள்-செயல்பாடுகள் ஆகியவற்றைப் (Folklore) பயன்படுத்தி மக்களிடம் கருத்தை எடுத்துச்செல்லும் முயற்சியில் இந்த அமைப்புகள் ஈடுபட்டன. நாட்டார் கலைகள், நடனங்கள், தெருக்கூத்துகள், நாடகங்கள் போன்றவற்றின் மூலம் அவர்கள் இந்த முயற்சிகளை மேற்கொண்டனர். சுந்தர்லால் பகுகுணாவும் இந்தப் பகுதிக்குத் தொடர்ந்து வந்து ஆதரவும் ஊக்கமும் அளித்தார்.
‘இந்த மலைப்பகுதி பள்ளத்தாக்கின் ஊடே காளி ஆறு வளைந்து நெளிந்து ஓடிக் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கிறது. அப்பிக்கோ இயக்கத்தின் பாடல் இந்த மலை முழுவதும் எதிரொலிக்கிறது. அழியும் அபாயத்தில் உள்ள முக்கியமான மலைப்பகுதிகளைக் காக்கும் உணர்வை மக்களிடையே இந்த ஆறும் இந்தப் பாடலும் தூண்டுகின்றன’ என்று இந்த இயக்கத்துக்குத் தலைமை வகித்த மகாபலேஸ்வர ஹெக்டே கூறினார்.
எஞ்சியுள்ள சூழலியலைச் சரியாகப் பயன்படுத்த மக்களுக்கு உதவுவது இந்த இயக்கத்தின் மற்றொரு முக்கியச் செயல்பாடு. எனவே, காட்டின் மேல் அதிக அழுத்தம் கொடுக்காமல் மாற்று ஆற்றல் ஆதாரங்களை இந்த இயக்கம் அறிமுகப்படுத்தியது. இதற்காக 2,000 எரியாற்றல் திறன் வாய்ந்த மண் அடுப்புகள் (Chula) தயாரிக்கப்பட்டன; இதனால் மரக்கட்டைப் பயன்பாடு 40 சதவீதம்வரை குறைந்தது. சாண எரிவாயு அமைப்புகளும் நிறுவப்பட்டன.
இறுதியில் வெற்றி
கர்நாடக மாநிலத்தின் மரம் வெட்டுதல் தொடர்பான வனச் செயல்திட்டத்தையே மாற்றுமளவுக்கு அப்பிக்கோ இயக்கத்தின் செயல்பாடுகள் தீவிரமாக இருந்தன. இதன் பின்னணியில்தான், டிசம்பர் 1983-ல் கர்நாடக மாநிலத்தின் அப்போதைய வனத்துறை அமைச்சர் சிர்சிக்கு வந்து போராட்டக்காரர்களுடனும் மக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 400 பேருடன் சேர்ந்து பில்கல் (Bilgal) காட்டுப் பகுதியில் அவர் நடைப்பயணமும் மேற்கொண்டார்.
அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யூப்படோரியம் மலர்கொத்து (இது மோசமான வெளிநாட்டுக் களைச்செடி) ஒன்றை மக்கள் கொடுத்தார்கள். பிறகு அந்தக் காட்டின் மரத்தடியில் மக்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், மரம் வெட்டுவதை உடனடியாக நிறுத்துவதற்கு இசைவு தெரிவித்தார். மிக அதிக அளவு மரம் வெட்டப்பட்ட கலாசே (Kalase) காட்டுக்கும் அமைச்சர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in