உயிர் மூச்சு

10,349 விவசாயிகள் தற்கொலைகள்

செய்திப்பிரிவு

சமீபத்தில் வெளியாகியுள்ள தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி இந்த ஆண்டு உழவர்கள் 10,349பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில் 4,586 பேர் கூலித் தொழிலாளர்கள். தொழி லாளர்களில் 515பேர் பெண்கள். தற்கொலைசெய்துகொண்டுள்ள உழவர்களின் எண்ணிக்கை 5,763. இதில் பெண்களின் எண்ணிக்கை 306. 2017-ல் உழவர்களின் தற்கொலை எண்ணிக்கை 10,655. 2016-ல் அது 11,379ஆக இருந்தது.

எருமை இறைச்சி ஏற்றுமதி சரிவு

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழுள்ள வேளாண்மை, பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி ஆணையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதி 13.5 சதவீதம் சரிவடைந்துள்ளது. உலக அளவில் எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதி இரண்டாம் இடம் வகித்த இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இந்திய எருமை மாட்டிறைச்சியின் முக்கியமான இறக்குமதியாளராக இருந்த சீனா, சுகாதரக் கேடு காரணமாக அதைச் சில ஆண்டுகளுக்கு முன்பு தடைசெய்தது. இந்தியாவின் மொத்த இறைச்சி உற்பத்தியில் எருமை மாட்டிறைச்சி 20 சதவீதமாக உள்ளது. சென்ற ஆண்டு 2.20 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த எற்றுமதி அளவு இந்தாண்டு 1.90 பில்லியன் அமெரிக்க டாலராகச் சரிந்துள்ளது.

ரேஷனில் மீன்

ரேஷன் கடைகளில் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றை விற்கும் திட்டத்தை நிதி ஆயோக் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கவுள்ளது. சத்துணவுக் குறைபாட்டைப் போக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நிதி அயோக் இதைத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இந்தாண்டு ஏப்ரலில் இது நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

நெற்பயிரில் இலைச்சுருட்டு நோய்

நெற்பயிரில் ஏற்படும் இலைச்சுருட்டு நோயைக் கட்டுப்படுத்த வேளாந்துறை ஆலோசனைகளை வழங்கி யுள்ளது. வயல் வரப்புகளைச் சீராக்கிச் சுத்தமாக வைக்க வேண்டும். புல் இனக்களைகளை முழுமையாக நீக்க வேண்டும். தழைச்சத்து உரங்களான யூரியா போன்றவற்றைத் தேவைக்கு அதிகமாக இடக் கூடாது. பூச்சிகள் மீண்டும் புத்துயிர்ப்புப் பெறுவதைத் தவிர்க்க கார்போபியூரான் அல்லது போரேட் குருணைகள், பைரித்ராய்டு வகை பூச்சிக்கொல்லிகளான சைபர் மெத்ரின் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

டிரைக்கோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணியை வயலில் நெற்பயிர் நடவு செய்த 37, 44, 51வது நாட்களில் மொத்தம் மூன்றுமுறை ஒரு ஹெக்டேருக்கு 5சிசி (ஒரு லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்) என்ற அளவில் காலை நேரத்தில் வயலில் கட்ட வேண்டும். மேலும், விளக்குப் பொறிகளை வைத்துத் தாய்ப் பூச்சிகளைக் கவர்ந்து அழித்துக் கட்டுப்படுத்தலாம். இத்துடன் வயலில் தழை வளர்ச்சிப் பருவத்தில் பூச்சி உண்ணும் பறவைகள் நிற்பதற்கு ஏதுவாகப் பறவைத் தாங்கிகளை வயலில் ஆங்காங்கே நட்டு வைக்க வேண்டும்.

தொகுப்பு: விபின்

SCROLL FOR NEXT