பிரசாத்
விடைபெறும் 2019:
நீர் எழுத்து
நக்கீரன்
‘சங்க காலம் தொடங்கி சமகாலம் வரைக்குமான தமிழ்நாட்டின் ஈராயிரம் ஆண்டுகால நீர் வரலாற்றைப் பதிவுசெய்யும் முயற்சியாக, சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் ஆறாண்டு காலக் கள ஆய்வுகள், இரண்டரை ஆண்டு கால எழுத்து முயற்சியில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். ‘கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்’, ‘உயிரைக் குடிக்கும் புட்டிநீர்’ என நீர் சார்ந்து ஏற்கெனவே இரண்டு குறுநூல்களை நக்கீரன் எழுதியுள்ளார். தமிழகத்தின் நீரியல் குறித்து அனைத்துக் கோணங்களிலும் ஆய்வுசெய்த முதல் நூலாக இது கருதப்படுகிறது.
காடோடி பதிப்பகம், தொடர்புக்கு: 80727 30977
கடற்கோள் காலம்
வறீதையா கான்ஸ்தந்தின்
சுனாமி, ஒக்கி, கஜா போன்ற பேரிடர்களின்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடல் பழங்குடிகளான துறைவர்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். இத்தகைய இயற்கைப் பேரிடர்களின்போது அரசின் மெத்தனம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியது என்பதைக் களத்தில் இருந்து நேரடியான சாட்சியங்களோடு வறீதையா முன்வைத்திருக்கிறார். அடித்தள மக்கள் மீதான உளவியல் போராக இயற்கைப் பேரிடர்களை முன்னெடுக்கும் குரூர மனநிலை ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால், மக்களுக்குப் போக்கிடமேது என்ற வலுவான கேள்வியை இந்தப் புத்தகம் எழுப்புகிறது.
எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 97890 09666
அறிமுகக் கையேடு: பறவைகள்
ப. ஜெகநாதன், ஆசை
உயிரினங்களைப் பற்றிய அறிமுகக் கையேடுகள் வரிசையில் க்ரியா பதிப்பகம் பறவைகளைப் பற்றிய இந்த அறிமுகக் கையேட்டை முதலில் வெளியிட்டது. அதன் புதிய, மேம்படுத்தப்பட்ட பதிப்பு இது. தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் பறவைகளை எளிமையான தமிழில் அறிமுகம் செய்துவைக்கிறது. பறவைகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும், பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்த வேண்டிய சரியான சொற்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பறவைகளின் 174 வண்ணப்படங்கள் இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு.
க்ரியா, தொடர்புக்கு: 72999 05950
மாயவலை,
அ. முத்துக்கிருஷ்ணன்
அணு உலைகள் முதல் அமேசான் காடுகள்வரை, ஆகாயம் முதல் ஆழ்கடல் வரையுமான சூழலியல் பிரச்சினைகளையும் அவை கொண்டுவந்திருக்கும் சிக்கல்களையும் இந்தப் புத்தகத்தின் கட்டுரைகள் பேசுகின்றன. தேசங்கள் வளர்ச்சிக்குப் பின் சென்றால் இந்தப் பூமி மனிதர்கள், தாவரங்கள், கானுயிர்கள் வாழ்வதற்குத் தகுதியுள்ள இடமாக இனியும் தொடருமா என்ற கேள்வியுடன், நம்மைச் சுற்றி நிகழும் கண்மூடித்தனமான அழிவை இந்தக் கட்டுரைகள் விசாரிக்கின்றன.
வாசல், தொடர்புக்கு: 98421 02133
பாறு கழுகுகளும் பழங்குடியினரும்,
சு. பாரதிதாசன்
பிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களுக்கும் எளிமையாகப் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல், அதன் நுண்ணரசியலையும் பேசுகிறது.
உயிர் பதிப்பகம்
சாம்பலிலிருந்து பசுமைக்கு:
ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
அதுல்ய மிஸ்ரா, (தமிழில்: அருண்)
தமிழ்நாட்டின் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையின் தலைமைச் செயலாராகப் பணியாற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அதுல்ய மிஸ்ரா எழுதியிருக்கும் நாவல் இது. சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் போராட்டத்தில் எளிய மக்கள் சக்தியானது எப்படி வெற்றிபெறுகிறது என்பதை இந்த நாவல் பேசுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழிடங்களைச் சீரமைத்தல், களப்போராட்டங்கள் மூலம் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை இந்த நாவல் உணர்த்துகிறது.
கிழக்கு, தொடர்புக்கு: 044 4286 8126
மேற்குத் தொடர்ச்சி மலை: பல்லுயிரிய வளமும் பாதுகாப்பும்
மாதவ் காட்கில், (தமிழில்: ஜீவா)
சட்டத்தை மதிப்பவர்களும் உண்மையான ஜனநாயகத் தன்மை கொண்டவர்களும் அறிவியலை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துபவர்களும் விழிப்புணர்வு பெற்ற மக்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதே என் விருப்பம் என்று மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கைப் பாதுகாப்பு குறித்த அறிக்கையில் மாதவ் காட்கில் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையின் சாரத்தை தமிழகப் பசுமை இயக்கத்தின் செயற்பாட்டாளரும் மருத்துவருமான ஜீவானந்தம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
உயிர் பதிப்பகம், தொடர்புக்கு: 99404 04363
இன்பமயமான தமிழக வரலாறு,
இரா. முருகவேள்
சுற்றுச்சூழல் கட்டுரைகள், மலைகளில் நாகரிகம் பரவிய வரலாறு என இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்தச் சிறு நூல் 10 கட்டுரைகளால் ஆனது. பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் மக்கள் பருவநிலை அகதிகளாக மாறுதல், கரியமில வாயுவின் சந்தை எனச் சமகாலச் சூழலியல் சிக்கல்களையும், அவற்றின் அரசியலையும் இந்தப் புத்தகம் பேசுகிறது.
காக்கைக்கூடு, தொடர்புக்கு: 9043605144
வான் மண் பெண், ந. வினோத்குமார்
உலகின் முன்னோடி சூழலியல் போராட்டங்களில் தொடங்கி தற்போது நம்மிடையே செயல்பட்டுவரும் சூழலியல் போராளிகள்வரை பல்வேறு தரப்பைச் சேர்ந்த பெண்கள் குறித்து ‘பெண் இன்று’ இணைப்பிதழில் ந. வினோத்குமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தகவல் களஞ்சியமாக மட்டும் நின்றுவிடாமல், அந்தப் பெண்கள் முன்னெடுத்த போராட்டத்தையும் எதிர்கொண்ட சிக்கல்களையும் மீண்டெழுந்த சாதனைகளையும் இந்த நூல் பேசுகிறது.
கடலம்மா பேசுறங் கண்ணு!, வறீதையா கான்ஸ்தந்தின்
மீனவ மக்கள் சார்ந்த அறிவைப் பரவலாக்கிவரும் முன்னணி எழுத்தாளரான பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின், நெய்தல் நிலக் கூறுகள், பாரம்பரிய அறிவு குறித்து அனைத்து தரப்பு வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் ‘உயிர் மூச்சு’ இணைப்பிதழில் எளிய மொழியில் எழுதிய ‘கடலம்மா பேசுறங் கண்ணு!’ தொடரின் புத்தக வடிவம்.
தொடர்புக்கு: 74012 96562
| சென்னை புத்தகக் காட்சியில் ‘இந்து தமிழ் திசை' அரங்கில் (133, 134) இந்தப் புத்தகங்கள் கிடைக்கும். |