உயிர் மூச்சு

விதை முதல் விளைச்சல் வரை 16: மானாவாரிப் பயிர்களுக்கான ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை

செய்திப்பிரிவு

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்

மானாவாரி நிலங்களில் பெறப்படும் மழைநீரின் அளவு இடத்துக்கு இடம், பருவநிலைக்கு ஏற்ப மாறுபடும். சில நேரங்களில் குறைந்த அளவு மழை, அதன் பின் தொடர் வறட்சி ஏற்படும். இதன் காரணமாகப் பயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாக அதிக வாய்ப்புண்டு.

இந்நிலங்களின் நீரின் தேவை மிகுதியாக இருக்கும். ஆனால், திறம்பட்ட நீர்ப் பயன்பாடு என்பது குறைவு. இதற்குப் பல்வேறுபட்ட காரணங்களிருப்பினும், இந்நீரின் பயன்பாட்டை அதிகரிப்பது அவசியம். இதற்கான வழிமுறைகளை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த நீா் மேலாண்மை முறைகளை மேற்கொண்டு மானாவாரிப் பயிர்களின் அதிக மகசூல் எடுப்பது எவ்வாறு எனப் பார்ப்போம்.

இந்நிலத்தில் பயிர் சாகுபடிக்கு முன்பு கோடைக்காலத்தில் பெறப்படும் மழையைக் கொண்டு கோடை உழவு செய்வதன் காரணமாக நிலத்தில் நீர்ப்பிடிப்புத் திறனை அதிகரிக்கலாம். இதற்காக நிலச்சரிவுக்குக் குறுக்காகக் கோடை உழவு அந்நிலத்துக்குத் தகுந்தவாறு ஆழ உழவு செய்தல் அவசியம். பல்வேறு பயிர்களில் வறட்சியைத் தாங்கும் பயிர் ரகங்களைப் பயிரிடுவதன் மூலம், பயிரின் இடைக்காலத்தில் தோன்றும் வறட்சியிலிருந்து பயிரைக் காக்க முடியும்.

அப்பயிர் வளா்ச்சி காலத்தில் திரவ நிலையிலான உரங்களை, குறிப்பாகக் கரிம உரங்களைப் பயிருக்கு அளித்தல், ஒரு பயிர்க் கழிவுகளை (தட்டைகளை) அந்நிலத்திலேயே மூடாக்கு செய்து பின்வரும் பயிரைச் சாகுபடி செய்தல் போன்ற முறைகள் நிலத்திலிருந்து நீா் ஆவியாவதைத் தடுத்துப் பயிருக்குத் தேவையான ஈரப்பதத்தை ஏற்படுத்தித் தரும்.

இத்தகைய நிலங்களில் போதுமான அளவு மண் புழுக்களின் இருப்பை உறுதிசெய்வதன் மூலம் நிலத்தில் நீர்ப் பிடிப்புத்தன்மையை அதிகாரிக்க முடியும். மானாவாரி நிலங்களின் அப்பகுதிக்கேற்ற மேம்படுத்தப்பட்ட ரக விதைகளைப் பயன்படுத்தினால் நீர்ப் பற்றாக்குறை நிலையிலும் ஓரளவு மகசூல் பெறமுடியும்.

அதிகவிலையில் வீரிய ஒட்டு விதைகளை மானாவாரி நிலங்களில் விதைப்பதை ஓரளவு தவிர்ப்பது நல்லது. இந்நிலங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ளும்போது கலப்புப் பயிர் அல்லது ஊடு பயிராக ஒன்றுக்கும் மேற்பட்ட பயிரைச் சாகுபடி செய்யும் நிலையில் வறட்சியின் காரணமாகவோ எதிர்பாராத அதிக மழையின் காரணமாகவோ ஒரு பயிரின் இழப்பு மற்றொரு பயிரின் மகசூலால் ஈடுகட்ட முடியும்.

மானாவாரி நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதன் மூலம் மழைபெய்யும் காலத்தில் மழைநீரைத் தேக்கிவைக்க வேண்டும். வறண்ட சூழ்நிலையில் பண்ணைக்குட்டையில் தேக்கிய மழைநீரைப் பயிருக்களித்து பயிரைக் காக்கலாம். தற்போது பல இடங்களில் பண்ணைக்குட்டையில் தேக்கிய மழை நீரைப் பயன்படுத்தி டீசல் இன்ஜின் உதவியுடன் சொட்டுநீா்ப் பாசன முறையைப் பயன்படுத்திப் பயிரைக் காக்கவும் மகசூல் எடுக்கவும் செய்கின்றனர்.

பயிர் சாகுபடி முறைகளில் பார் அமைத்துச் சாகுபடி செய்வதன் மூலம் பயிர்க் காலத்தில் தேவையான மழைநீரைச் சால்களில் தேக்கி ஓரளவு வறட்சியான நேரத்தில் பயிரைக் காக்கலாம். மர வகைப் பயிர்கள் சாகுபடி செய்யும்போது மரத்தைச் சுற்றிலும் வட்டப் பாத்திகள் அமைத்தும் பெய்யும் மழை நீரைப் பயன்படுத்தலாம். மேற்கண்ட வழிமுறைகள் பயிர் சாகுபடி செய்யும்போது கடைப்பிடிக்கப்படும் நீா் மேலாண்மை உத்திகளாகும்.

இவை தவிர, நீண்ட காலம் பலன் தரும் விதமாக இத்தகைய நிலங்களின் சரிவுக்கு குறுக்கே ஒத்த உயரமுடைய, இரண்டு நிலைகளுக்கிடையே நீண்ட வரப்புகளை ஏற்படுத்துவதன் மூலமும் அவ்வரப்புக்கு முன் பகுதியில் அகழிபோன்று குழிகள் வரப்பை ஒட்டி அமைப்பதன் மூலமும் மழைநீரை ஆங்காங்கே தேக்கி, நீா் பிடிப்புத்தன்மையை அதிகரிக்கலாம். இம்முறையால் அப்பகுதியில் சாகுபடி செய்யும் பயிரை வறட்சியிலிருந்து காக்க முடியும்.

பண்ணைக்குட்டைகளை விவசாயிகள் தங்கள் நில அமைப்புக்குத் தகுந்தவாறு தேவையான அளவுகளில் நிலத்தின் சரிவின் கடைசிப் பகுதியில் அமைக்க முடியும். இப்பண்ணைக்குட்டைகளை அமைத்துத் தர அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் முன் வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். பண்ணைக்குட்டைகள் அமைத்தல், மானாவாரி நிலத்தில் செல்லும் பருவகால மழை நீரோடைகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்தல், தாழ்வான நீர்த்தேங்கும் இடங்களில் நீர்ச்செறிவுக்கான குழாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு வழிகளில் மானாவாரி நிலங்களில் நீா் மேலாண்மை மேற்கொள்ளப்படுவதை விவசாயிகள் அறிய வேண்டும்.

கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com,
selipm@yahoo.com

SCROLL FOR NEXT