விவசாயிகளுக்கு நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீத மானியம் நிறுத்தப்படுவதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் வழங்கப்பட்ட விவசாய நகைக்கடன் வட்டியை உயர்த்தி வருகிற 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதிக்குள் வசூலிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளுக்கான நகைக்கடன் வட்டி 7 சதவீதத்தில் இருந்து 9.25 முதல் 11 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் வரையிலான கடனுக்கு 9.25 சதவீத வட்டியும், ரூ.3 லட்சத்துக்கு அதிகமான கடனுக்கு 9.50 சதவீதம் வட்டியும் வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 சதவீதமாக இருந்த விவசாய நகைக் கடன் வட்டி 2015-ல் மத்திய அரசு 11 சதவீதமாக உயர்த்தி மீதி 4 சதவீதத்தை மானியமாக அளித்தது.
தக்காளி விலை வீழ்ச்சி
வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டுக்கொண் டிருக்க, அதன் தோழமைக் காய்கறியான தக்காளியின் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.20 ஆக இருந்த தக்காளியின் விலை இப்போது ரூ. 10 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கோயம் பேடு சந்தையில் நாட்டு தக்காளி மொத்த விலையில் ஒரு பெட்டி (14 கிலோ) ரூ. 100 முதல் ரூ. 180வரையிலும் பெங்களூர்த் தக்காளி ரூ. 100 முதல் ரூ. 230வரையிலும் விற்கப்படுகிறது.
விவசாயக் கடனுக்கு சிபில் ஸ்கோர்
ரிசர்வ் வங்கி விவசாயக் கடன்களுக்கும் சிபில் ஸ்கோரை கட்டாயமாக்கியது. இதை விலக்கக் கோரி மாநிலங்களவையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வி.விஜயசாய் இந்தப் பிரச்சினையில் அவையில் எழுப்பினார். இதனால் கிட்டத்தட்ட 75லிருந்து 80 சதவீத விவசாயிகளுக்கு கடன் கிடைக்காமல் போவதாகவும் அவர் கூறினார்.
பெண்களுக்கு கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி
புதுச்சேரி குருமாம்பேட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், புதுச்சேரி காமராஜர் வேளாண் நிலையத்தில் கிராமப்புறப் பெண்களுக்கு கோழி வளர்ப்பு பயி்ற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வரும் ஜனவரி 27-ம் தேதி முதல் 31 வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தகுதி அடிப்படையில், முதலில் பதிவுசெய்யும் 20 பேருக்கு முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப்படும்.
வேளாண் அறிவியல் நிலையத்துடன் ஒப்பந்தம் செய்து, இங்கேயே கோழிகளை வளர்த்து, விற்பனைத் தொகையில் 20 சதவீதம் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு வழங்க வேண்டும். விருப்பமுள்ள பெண்கள், வரும் 31-ம் தேதிக்குள் ஆதார் நகலுடன், வேளாண் அறிவியல் நிலையத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, திட்ட உதவியாளர் டாக்டர் சித்ராவை 9486594243 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தொகுப்பு: விபின்