கு.வி. கிருஷ்ணமூர்த்தி
உலகின் 34 சிற்றினச் செழுமைப் பகுதிகள் (Hot spots), இந்தியாவின் நான்கு சிற்றினச் செழுமைப் பகுதிகள் ஆகியவற்றில் ஒன்றாக மேற்குத் தொடர்ச்சி மலை திகழ்கிறது. கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் அமைந்துள்ள அமைதிப் பள்ளத்தாக்கு (Silent Valley) மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் முக்கியமானது.
இந்த வெப்ப மண்டலப் பசுமைமாறாக் காட்டுப் பகுதியில், அந்தப் பகுதிக்கு மட்டுமே உரிய (Endemic) தாவர, உயிரினச் சிற்றினங்கள் பல வாழ்கின்றன; அவற்றுள் முக்கியமானது அரிதான சோலை மந்தி (Lion tailed macaque). இந்த மந்தியின் இருப்பை நியூ யார்க் விலங்குக் கழகத்தின் ஸ்டீவென் கிரீன், சென்னை பாம்பு/ முதலைப் பண்ணையின் நிறுவனர் ரோமுலஸ் விட்டேகர் ஆகியோர் முதலில் உலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்கள்.
நடுக்காட்டில் அணை
இந்தப் பகுதியின் முக்கிய ஆறுகளுள் ஒன்று குந்திப்புழா. அமைதிப் பள்ளத்தின் காட்டுப் பகுதியில் தோன்றி தென்மேற்காக 15 கி.மீ. தொலைவுக்குப் பாய்கிறது. ஆற்றினூடே அமைந்துள்ள சைராந்தி என்ற இடம் நீர்மின் உற்பத்திக்குத் தகுந்த இடமாக 1928-லேயே அடையாளம் காணப்பட்டது. 1970-ல் கேரள மாநில மின்வாரியம் ஆற்றின் குறுக்கே நீர்மின் நிலையத்துக்கான அணையைக் கட்ட ஒரு திட்டத்தைக் கொடுத்தது. மாநிலத் திட்டக் குழு இதை 1973 பிப்ரவரியில் 25 கோடி ரூபாய் செலவில் முடிக்க
அனுமதி அளித்தது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்
பட்டால் அந்தப் பகுதியின் சூழல் தொகுதி பாதிக்கப்பட்டு, அரிதான உயிரினங்களை அழித்துவிடும்; குறைந்தது 8.3 சதுர கி.மீ. அடர் காட்டுப் பகுதி நீரில் மூழ்கடிக்கப்படும் என்பன போன்ற விளைவுகளுக்கு அஞ்சி, அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்ற Critical Ecosystem Partnership Fund (CEPF) என்ற அமைப்பு அதே ஆண்டு ஒரு சமூக இயக்கத்தைத் தொடங்கியது. கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் (KSSP) அமைப்பின் உறுப்பினர்களும் இந்த இயக்கத்தில் பங்கெடுத்தனர்.
கடும் எதிர்ப்பு
இந்த அணைத் திட்டத்தின் அறிவியல்-தொழில்நுட்பத்தை மட்டுமின்றி, சமுதாய-பொருளாதார-அரசியல் விளைவுகளையும் மதிப்பிட்டு விரிவான அறிக்கையை இந்த அமைப்பு தயாரித்தது. பெண் கவிஞரும் செயல்பாட்டாளருமான சுகதகுமாரி இந்த இயக்கத்தில் முக்கியப் பங்காற்றினார்; அவர் இயற்றிப் பாடிய ‘மரோத்தினு ஸ்துதி’ (ஒரு மரத்துக்கான விளிப்பாடல்) என்ற பாடல், அந்த இயக்கத்தின் அடையாளங்களுள் ஒன்றாக மாறியது.
போராட்டக் கூட்டங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு பறவையியலாளர் சாலிம் அலி, அங்கு வந்து அரசை வேண்டிக்கொண்டார்; இந்தத் திட்டத்தை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
1976-ல் சூழலியல் திட்டம் - ஒருங்கிணைப்புக்கான தேசியக் குழு (NCEPC), ஜாபர் ஃபியூட்டேஹல்லி என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து இந்தத் திட்டத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை ஆய்வுசெய்தது. இது கைவிடப்படவேண்டிய திட்டம் என்று குழு பரிந்துரைத்தது.
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in