கு.வி. கிருஷ்ணமூர்த்தி
தென்மேற்கு வங்கத்தின் டால்பூம், ஜம்போனி, சில்டா உள்ளிட்ட பகுதிகள் நன்னீர்க் குளங்களையும் சால் மரக்காடுகளையும் அதிக அளவில் கொண்டவை. இந்தப் பகுதியில் பன்னெடுங்காலமாக சந்தால் (Santhal) பழங்குடி மக்கள் வாழ்ந்துவந்தனர். அவர்கள் மரபாக இந்த இயற்கை ஆதாரங்களை நம்பி வாழ்ந்துவந்தனர்; அந்தச் சூழலில் இருந்து தமக்கு வேண்டிய பொருட்களை இலவசமாக எடுத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் ஜங்கிள் மகால் என்ற மாவட்டம் மேற்கு வங்கத்தில் உருவாக்கப்பட்டது. வனச்சட்டம், தனியார் மீன் வளர்ப்புக் காப்புச் சட்டம் - 1889 ஆகியவற்றின் மூலம் மித்னாபூர் சுரங்கக் கூட்டமைப்பு (Midnapore Mining Syndicate, MMS) என்ற ஜமீன்தாரி அமைப்பு, இந்தப் பகுதியில் இருந்த குளங்கள், சால் மரக்காடுகள் ஆகியவற்றை ஜமீன்தார்களின் நீண்டகால அதிகாரத்துக்கும் கட்டுப்பாட்டின் கீழும் வழங்கியது.
ஆனால், உண்மையில் இந்த அமைப்பு மித்னாபூர் ஜமீன்தாரி நிறுவனத்துக்குச் (Midnapore Zamindari Company, MZC) சொந்தமானது. மேலும், பிரிட்டிஷ் மேலாண்மை முகவர் நிறுவனமான ஆண்ட்ரூ யூயில் நிறுவனத்தின் ஒரு முக்கியமான இந்தியக் கூட்டு அமைப்பாகவும் மி.ஜ.நி. செயல்பட்டது.
பழங்குடிகளின் எதிர்ப்பு
மி.ஜ.நி.க்குச் சொந்தமான நிலத்தில் சந்தால் பழங்குடி மக்கள் பயிரிட்டனர். தொடக்க காலக் குத்தகைக்கு நிலம் குத்தகைக்கு எடுத்தவரிடம் (அதாவது சந்தால் உழவர்களிடம்) ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டபோதும், ரயில்வேயின் வரவால் வெட்டுமர வணிகம் செழிப்படைந்திருந்ததால், சந்தால்களின் மேல் ஜமீன்தார்கள் தீவிரத் தடைகளை விதிக்கத் தொடங்கினார்கள்.
இந்தப் பழங்குடி மக்கள் முதலில் நீதிமன்றங்களையும் இதர சட்டபூர்வமான நடைமுறைகளையும் நாடி தங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ள முயன்றனர். என்றாலும், முதல் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு அதிக எதிர்ப்புகளைத் தூண்டின. துணி வியாபாரிகளையும் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களையும் முதன்மை இலக்குகளாகக் கொண்டு, காடு-வாழ் சந்தால்கள் சந்தையைச் சூறையாடினார்கள்.
தொடர்ந்த போராட்டங்கள்
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தேசிய காங்கிரஸின் இடையீட்டால், ஜங்கிள் மகாலின் வன உரிமைப் பிரச்சினைகள் ஓர் இயக்கத்தைக் கண்டன. 1921-ம் ஆண்டின் தொடக்கத்தில் வனத் தொழிலாளர்களாக வேலை செய்துவந்த மி.ஜ.நி. பணியாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்கெனவே இருந்த மோதலைத் தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸ் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
காட்டைக் கொள்ளையடிக்கவும், சந்தைகளைச் சூறையாடவும் (அங்கிருந்த வெளிநாட்டுத் துணிகள் எரிக்கப்பட்டன), அரிசி ஏற்றுமதி செய்வதைத் தடுக்கவும் சந்தால்களை காங்கிரஸ் தூண்டியது. இது குறித்து ஸ்வபன் தாஸ்குப்தா 1980-ம் ஆண்டுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். சில்டா பகுதியில் சந்தால்கள் வெட்டுமர வியாபாரிகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்ட கட்டைகளைக் கொள்ளையடித்தனர்; இவற்றை மீட்க வந்த காவலர்களைத் தாக்கினார்கள்.
மீன் கொள்ளை
மரபு உரிமைகளுக்காகப் போராடிய சந்தால்கள் மேற்கொண்ட மற்றொரு செயல் ஜமீன்தாரிகளின் தனிச்சொத்தாக இருந்த மீன் குளங்களிலிருந்து மீன்களைக் கொள்ளை அடித்தது. 1923-ல் ஏப்ரலில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், மித்னாபூரின் ஜார்கிராம் முதல் பிஹாரின் சிங்க்பூம் பகுதிவரை ஏறத்தாழ 200 சதுர மைல் பரப்பளவுக்குப் பரவியது.
இந்தக் கொள்ளையில் மிகவும் பாதிக்கப்பட்டவை டால்பூம், ஜம்போனி, சில்டா போன்ற பகுதிகள்; குளங்கள் தவிர, சால் மரக்காடுகளும் இந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டன.
இந்தக் கொள்ளை ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு நீடித்து, 30 சம்பவங்கள்வரை நடந்தேறின. தேசிய காங்கிரஸின் ஒத்துழையாமை (Civil Disobedience) இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுகளைச் சட்டத்துக்குப் புறம்பானவை என்று பழங்குடி மக்கள் ஏற்றுக்கொண்டாலும், காடுகள், குளங்களின் மேல் உள்ள மக்களின் மரபு-சார் உரிமைகளை ஜமீன்தாரிகள் விட்டுக் கொடுக்க தங்கள் நடவடிக்கைகள் உதவும் என்று நம்பினார்கள்.
ஆட்சியரின் ஒப்புதல்
சந்தால்களின் வழக்கை விசாரித்த ஒரு ஆட்சியர் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது: “ஒரு சந்தால் அவருடைய தந்தையின் காலத்தில் அனைத்துக் காடுகளும் எப்படி இலவசமாகப் பயன்படுத்தப்பட்டன என்றும், குளங்கள் பொதுமக்களுக்கு எப்போதும் திறந்திருந்தன என்றும் கூறுவார்; அவர் கூறுவது சரியானதுதான்”.
சுமித் சர்க்கார் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுவதைப் போல் 90 சதவீத மக்கள் கூட்டம், போராடும்போது அனைத்துக் காட்டு வசதிகளும் இலவசமாகக் கிடைத்த ஒரு பொற்காலத்தை மீட்கும் செயலில் தான் ஈடுபட்டதாக நம்பியது. ஆனால், அதை மீட்டெடுப்பதில் துரதிர்ஷ்டவசமாகத் தோல்வி அடைந்தது!
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in