உயிர் மூச்சு

வீட்டிலேயே எரு தயாரிக்கலாம்

செய்திப்பிரிவு

மண்ணின் வளத்தை மேம்படுத்தும் எருவை விலை கொடுத்து வாங்கித்தான் தோட்டங்களுக்கு இட்டு வருகிறோம். இந்நிலையில் வீட்டுப் பூத்தோட்டம், காய்கறித் தோட்டம், மாடித் தோட்டம் போன்றவற்றுக்கு இடுவதற்கான எருவை வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரிக்கலாம்.

முதலில் ஒரு பழைய பிளாஸ்டிக் பெட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் அடியில் காற்றோட்டத்துக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றவும் சில துளைகளை இட வேண்டும்.

அதன் பிறகு ஒரு அங்குல உயரத்துக்குச் சரளைக் கற்களைப் பரப்பி வைக்கவும்.

அதன் மீது ஓர் அங்குல அளவுக்கு மணலைப் பரப்பவும்.

இதன் மீது ஒரு அங்குல அளவுக்குத் தோட்டத்து மண்ணைப் பரப்பவும்.

இதில் தினமும் சமையலறைக் கழிவு, தோட்டக் கழிவு போன்ற மக்கக்கூடிய கழிவை இட்டு வரவும். கழிவில் ஈரப்பசை அதிகம் இருந்தால், அத்துடன் மண்ணைச் சேர்த்து இடவும். இந்தப் பெட்டியின் மேற்புறம் துளைகள் கொண்ட மூடியைக் கொண்டு மூடவும். அவ்வப்போது தண்ணீர் தெளித்து ஈரப்பசையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். பாத்திரம் நிறையும்வரை கழிவுகளை இட்டு வரவும்.

பெட்டி நிறைந்த பிறகு, மக்குவதற்கு விட வேண்டும். அதற்கு 30 முதல் 60 நாட்கள்வரை ஆகும். நன்றாக மக்கிய கழிவிலிருந்து மண்வாசனை வரும், கருப்பு நிறத்தில் இருக்கும். இதைச் செடிகளுக்கு எருவாக இட்டால், நல்ல வளம் கிடைக்கும்.

இந்த எருவில் மண்புழுக்களை இட்டு மதிப்பைக் கூட்டலாம். மண்புழு எரு தயார் செய்ய, மேற்கண்ட மக்கிய கழிவில் சில மண்புழுக்களை விடவும். மண்புழுக்களுக்கும் ஈரப்பசை அவசியம் என்பதால், ஏதாவது ஒரு சாக்கு அல்லது பருத்தித் துணியைக் கொண்டு பெட்டியை மூடவும். எரு பொலபொலவென்று வந்த பின், இந்த மண்புழு உரத்தைச் செடிகளுக்கு இடலாம்.

நன்றி: பினாங்கு பயனீட்டாளர் சங்க இயற்கை வேளாண்மை வழிகாட்டி

SCROLL FOR NEXT