கரிம விவசாயத்தின் நோக்கம் அதைப் பயன்படுத்தி விளைவித்த விளைபொருளை எவ்வாறு சந்தைப்படுத்துதல் என்பது குறித்து பார்த்தோம். இக்கரிம வேளாண்மையை எவ்வாறு வயல் மட்ட அளவில் செயல்படுத்துவது என்பது குறித்தும் என்னென்ன இடுபொருட்கள் கரிம முறையில் பயிர்ச் சாகுபடிக்குப் பயன்படுத்துவது என்பது குறித்தும் பார்ப்போம்.
தழைச்சத்துப் பயிருக்குக் கிடைக்கும் வகையில் நஞ்சை நிலங்களில், சணப்பு அல்லது தக்கைப்பூண்டு போன்ற பயிர்களை வளர்த்து, பூக்கும் தருணமான 40 முதல் 45-வது நாளில் நெற்பயிர் நடும் முன் மடக்கி உழவு செய்வது மூலம் தழைச்சத்தை பயிருக்கு அளிக்க முடியும். நில வளமும் மேம்படும். தக்கைப்பூண்டு அல்லது சணப்பு விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ அளவுக்குப் பயன்படுத்தி விதைப்பு மேற்கொள்ள வேண்டும். இவ்வகை விதைகள் சந்தையில் கிடைக்கின்றன. தோட்டக்கால் நிலங்களில் கொளுஞ்சி ஸெஸ்பேனியா, வேம்பு, பூவரசு தழை ஆகியவற்றையும் நிலத்துக்கு இடலாம். மரப்பயிர்ச் சாகுபடிக்கு மரக்கன்றுகளைச் சுற்றிலும் இத்தழைகளைக் குழிதோண்டி இடுவதன் மூலம் தழைச்சத்தை அளிக்கலாம்.
மண்புழு உரம்
இவ்வகை இயற்கை உரம் அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இவ்வுரம் ஏக்கருக்கு 2 டன் அளவில் அடி உரமாகப் பயன்படுத்தலாம். இவ்வுரத்தை வெளியிலிருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்த்து பண்ணைக் கழிவுகளைப் பயன்படுத்தித் தேவைக்கேற்ப மண்புழு உரத்தை உற்பத்திசெய்து பயன்படுத்துவது நல்லது. செலவும் குறைவாகும். செறிவூட்டப்பட்ட மண்புழு நீரைப் பயன்படுத்தினால் மண்ணின் வளமும் தழைச்சத்தும் பெருகும்.
தொழுஉரம்
பண்ணையில் கூட்டுப்பண்ணையம் முறையில் பெறப்படும் மாட்டுச்சாணம், கோழி எரு, ஆட்டு எரு, பன்றிக்கழிவு, மீன்துாள் போன்றவற்றை மக்கச்செய்து அவ்வுரத்தை அனைத்துப் பயிருக்கும் அடியுரமாக கடைசி உழவுக்கு முன் நிலத்தில் இடலாம். இதனால் தழைச்சத்து பயிர்களுக்குக் கிடைக்கும். இவ்வகை பண்ணைக்கழிவுகளை விரைவில் மக்கச் செய்யும் பொருட்டு தற்போது நுண்ணுயிர்த் திரவம் (Waste decomposer) புதிதாகக் குறைந்த விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. இதைப் பயன்படுத்தி மக்கச்செய்த பண்ணைக்கழிவு அல்லது தொழு உரத்தை ஏக்கருக்கு 10 டன் அளவுக்குப் பயன்படுத்தலாம்.
திடக்கழிவு மேலாண்மையிலிருந்து பெறப்படும் மக்கிய உரம், இயற்கை வேளாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நகர்ப்புறங்களுக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில், அரசு நடத்தும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் திறன் மேம்படுத்தப்பட்ட மக்கிய குப்பையைக் குறைவான விலைக்கு வாங்கி நிலத்துக்கு இடலாம்.
வெயிகுலார் அர்பஸ்குலாரமைக்கோரைசா(வாம்)பூஞ்சை வகையான இது வளரும் தாவரங்களின் வேர்களுடன் நன்மை தரும் வகையில் கூட்டு சேர்ந்து தாவர வளர்ச்சியை அதிகாரிக்கிறது. இதன் மூலம் மணிச்சத்துப் பயிருக்குக் கிடைக்க வழிவகுக்கிறது. வாம் (VAM) என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது. கரிம வேளாண்மையில் இதனைப் பயன்படுத்தலாம்.
திறன்மிகு நுண்ணுயிர்க்கலவை (Effective micro organism solution)இந்நுண்ணுயிர்க்கலவையைப் நீருடன் கலந்து பயிருக்கு அளிப்பதன் மூலம் பயிரின் வளர்ச்சியை மேம்படுத்தலாம். நிலமும் வளமாகும். கடல்வாழ் தாவரங்கள், மீன் கழிவுகள் இது இயற்கை வேளாண்மை முறையில் மிகவும் பயனளிக்கக்கூடியதாக உள்ளது. கடற்பாசி கலவை ஜெல் வடிவில் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இதைப் பயிரின் வளர்ச்சிக்கும் நிலத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம்.
பாக்டீரிய தழைச்சத்தைப் பயிருக்கு அளிக்கக்கூடிய அஸோஸ்பைரில்லம், அசட்டோபாக்டர், ரைசோபியம் ஆகியவற்றைப் பயிருக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது இயற்கை முறையில் தழைச்சத்தைப் பயிருக்கு அளிக்கும் ஒருமுறை. இவ்வகை இயற்கை உரங்கள், அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் கிடைக்கிறது.
பெரணி – பாசி
நீலப்பச்சைப்பாசி அசோலா என்ற ஒருவகை பெரணி தழைச்சத்தைப் பயிருக்கு அளிக்கிறது. இவ்வகைப் பாசியை நீர் தேங்கும் இடத்தில் வளர்த்துப் பின் நஞ்சை நிலங்களில் இட்டு, பின் நெற்பயிரில் களையெடுப்பின்போது மண்ணுக்குள் அமிழ்த்தி மண்ணின் வளத்தையும், தழைச்சத்தையும் பயிருக்கு அளிக்கலாம்.
பூஞ்சாணம்
பூஞ்சாண வகைகள் நிலத்தில் கரையாத மணிச்சத்தை கரைத்து பயிருக்கு அளிக்கிறது. மைக்ரோஸா சிகாஸ்போரா, அஸ்ஸர்ஜில்லஸ் பென்சீலியம் என்ற பூஞ்சாணங்கள் மண்வளத்தைப் பேண உதவுகின்றன.
பிண்ணாக்குகள்
வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு, இலுப்பைப் பிண்ணாக்கு வகைகளை கரிம விவசாயத்தில் பயன்படுத்தலாம். இப்பிண்ணாக்குகள் தழைச்சத்தையும் மணிச்சத்தையும் பயிருக்கு அளிக்கின்றன.
பிற உரங்கள்
எலும்புத்தூள், கொம்புத்தூள், குளத்து வண்டல், ஆற்று வண்டல் ஆகியவற்றையும் கரிம வேளாண்மையில் பயன்படுத்தித் தழை, மணி, சாம்பல் சத்தைப் பயிருக்கும் மண் வளத்தைப் பெருக்கவும் பயன்படுத்தலாம்.
மேற்கண்ட இயற்கையான இடுபொருட்களைப் பயன்படுத்திக் கரிம வேளாண்மையைத் தொடரும் ஒருவர், அந்தந்த பகுதிக்கேற்ப பெறப்படும் இடுபொருட்களைப் பயன்படுத்தியும் தனது நிலத்தின் அளவுக்குத் தகுந்தவாறு இயற்கையான இடுபொருளைத் தேவையான அளவு பயன்படுத்திக் கரிம வேளாண்மையை மேற்கொள்ளலாம்.
- சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்,
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com,
selipm@yahoo.com