வெங்காய உற்பத்தி 40 சதவீதம் சரிந்துள்ளதால் தட்டுப்பாடு காரணமாக விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பல நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100ஐத் தொட்டது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த 1 லட்சம் டன் வரை வெங்காயத்தை இறக்குமதிசெய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது வர்த்தகர்கள் தரப்பிலிருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்யவிருக்கிறார்கள். அதன்படி இம்மாத இறுதிக்குள் 1,000 டன் வெங்காயத்தை வர்த்தகர்கள் இறக்குமதி செய்யவிருக்கிறார்கள். சமீபத்தில் வெங்காயம் இறக்குமதிக்கான விதிகளை மத்திய அரசு தளர்த்தியது.
மக்காச்சோளம் விலை குறையும்
தமிழ்நாட்டில் பரவலாகப் பெய்துவரும் மழையின் காரணமாக மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவின் தாக்கம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு படைப்புழுத் தாக்கத்தால் மக்காச்சோள உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்தப் பாதிப்பு தற்போது குறைந்திருப்பதால் உற்பத்தியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகத்தில் இருந்து ஏற்கெனவே வரத்து தொடங்கியுள்ள நிலையில் இங்கு விலை குறைய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை, ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 19 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மக்காச்சோள விலை, சந்தை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது.
அந்த ஆய்வுகளின் அடிப்படையில், தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை அறுவடையின் போது (நவம்பர் - ஜனவரி) படைப்புழுவின் தாக்கம் தமிழ்நாட்டில் இல்லையெனில் குவிண்டாலுக்கு ரூ. 1,800 முதல் ரூ.2,000 வரையே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தேங்காய்ச் சிரட்டை விலை பாதி ஆனது
தேங்காய், கொப்பரை, மட்டை விலை சரிவைத் தொடர்ந்து, தேங்காய்ச் சிரட்டையின் விலையும், பாதியாகக் குறைந்துள்ளது. தேங்காய்ப் பருப்பு எடுத்த பிறகு கிடைக்கும் தேங்காய்ச் சிரட்டை, கார்பன் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருளாகப் பயன்படுகிறது. சில மாதங்களுக்கு முன், ஒரு டன் தேங்காய் சிரட்டை, ரூ. 15,000 ஆக இருந்தது. கடந்த வாரம், 9,500 ரூபாயாகக் குறைந்தது. தற்போது, 7,000 ரூபாயாகச் சரிந்துள்ளது.