உயிர் மூச்சு

சிப்கோ நிறுவனரால் பெருமை பெற்ற விருது

செய்திப்பிரிவு

பாமயன்

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமக்கு முன்னே இருக்கும் தெருக்களும் கடைகளும் அடித்துச் செல்லப்படுவதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்படியான ஒரு நிகழ்வு 1970 ஜூலை 20 அன்று உத்தராகாண்டில் நிகழ்ந்தது.

அங்கிருந்த அலக்நந்தா ஆற்றில் 60 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்தது. அதில் கண் முன்னே மக்களும், மாடுகளும் அடித்துச் செல்லப்பட்டதை நினைக்கையில் நெஞ்சம் பதைபதைக்கும். இமயமலையின் அந்தப் பகுதியில் இது சாதாரண நிகழ்வாக மாறியது.

மேகவெடிப்பின் தாக்கம்

ஒரே நேரத்தில் ஒரு கோடி லிட்டர் நீரை நம் தலையில் கொட்டினால் எப்படி இருக்குமோ, அப்படியான ஒரு நிகழ்வுதான் மேக வெடிப்பு (cloudburst); இது வழக்கமான மழையில் இருந்து வேறுபட்டது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேகத்திரள் பேரளவில் கூடி மிக விரைவாகப் பொழிவதால் ஏற்படும் இழப்பு கடுமையானது, தாங்க இயலாதது.

பெரும் உயரமும் அதிகச் சரிவும் கொண்ட பனியால் சூழப்பட்ட இமயமலைப் பகுதிகளில் இப்படிப்பட்ட மேகவெடிப்புகள் நிகழும். இந்த அரிய மலைப்பகுதியைக் காப்பவை அடர்ந்து வளர்ந்த மரங்களே. இந்த மரங்கள் இல்லை என்றால் இமயமலையே மொட்டையாக இருந்திருக்கும்.

உலக அளவில் புகழ்பெற்ற தேக்கு உள்ளிட்ட வெட்டுமர வணிகம் இங்கு அதிகம். ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, வளமான உருண்டுதிரண்ட மரங்களை வெட்டி விற்பது இங்குள்ள பெருவணிகர்களுக்கு அதிக வருமானம் தரும் தொழிலாகிவிட்டது. இந்த நிலை தொடர்ந்து அதிகரிக்க, வெள்ளப்பெருக்கும் அதைத் தொடர்ந்து ஏற்படும் அழிவுகளும் உத்தராகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பெருகின. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் 1970 ஜூலை மாதம் நடந்தது.

மரத்தைக் கட்டியணை

இந்த மாதிரியான மரம் வெட்டும் வேலைகளைத் தடுக்க ஒருவர் கடுமையாகப் போராடிவந்தார்.ஒருவரும் அவரைப் பொருட்படுத்தவில்லை. மேகவெடிப்பு நிகழ்வுதான் அவரை உலகுக்கு வெளிக்காட்டியது. எளிமையும் அன்பும் நிறைந்த, இன்றைக்கு 85 வயதைத் தொட்டு நிற்கும் அந்த மாமனிதர் சாந்தி [சந்தி/ சண்டி (இந்தி)] பிரசாத் பட். மகாத்மா காந்தியாலும் ஜெயபிரகாஷ் நாராயணனாலும் ஈர்க்கப்பட்டவர்.

அவருடைய தந்தை, சிறுவயதிலேயே இறந்துவிட்டார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த சாந்தியால், கல்லூரிப் படிப்பைத் தொடர முடியவில்லை. இன்று ஐக்கிய நாடுகள் ‘மேம்பாட்டுத் திட்டம் 500' என்ற விருது, ராமன் மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், காந்தி அமைதி விருது உள்ளிட்ட புகழ்பெற்ற விருதுகளைப் பெற்று உலகப் பசுமை இயக்கத்தின் முத்திரை மனிதர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அண்மையில் அவருக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருதை வழங்கி காங்கிரஸ் கட்சி பெருமை தேடிக் கொண்டது.

சூழலியல் தொடர்பானவர்களுக்கு நன்கு அறிமுகமான போராட்டம் ‘சிப்கோ இயக்கம்’ (‘சிப்கோ’ என்றால் ‘மரத்தைக் கட்டியணை’ என்று பொருள்). அதன் தலைவரான சுந்தர்லால் பகுகுணாவை பலருக்கும் தெரியும்; ஆனால், அந்த இயக்கத்தைத் தொடங்கியவர் சாந்தி பிரசாத் என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தி. பெருவணிகர்கள் வரைமுறையில்லாமல் மரங்களை வெட்டி விற்பதால், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை அவர் உணர்ந்தார். மக்களின் அன்றாடத் தேவைகளுக்கு உணவு முதல் விறகுவரை அந்த மரங்கள் வாரி வழங்கிவந்தன.

காடுகளில் மக்கள் தற்சார்புள்ளவர்களாக வாழ்ந்தார்கள். அந்தத் தற்சார்பைச் சீர்குலைத்தது மரவணிகம். சாதாரண விறகுத் தேவைக்குக்கூட மக்கள் சில கிலோமீட்டர் நடந்துசெல்ல வேண்டியதாயிற்று. அது மட்டுமல்லாமல், அந்த மரங்கள்தான் இமயமலையைச் சிதையாமல் காத்துவந்தன. மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து இயக்கம் தொடங்கினார் சாந்தி பிரசாத்.

1960-களில் சர்வோதய இயக்கத்தில் அவர் பணியாற்றியிருந்ததால், அந்தப் பட்டறிவு அவருக்குக் கைகொடுத்தது. ‘தசோலி கிராம் சுயராச்சிய மண்டல்' என்ற தற்சார்பு அமைப்பையும் உருவாக்கினார். உள்ளூரில் இருந்த எளிய பெண்களைக்கொண்டே வலுவான வணிகக் கோடரிகளைத் தடுத்தார். மரத்தை வெட்டுமுன் மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொள்ளும் போராட்ட முறையை அவர் முன்னிறுத்தினார்.

சிப்கோவின் முன்னோடிப் பெண்

இந்தப் போராட்ட முறை விஷ்னோய் பழங்குடி இனப் பெண், அமிர்தா தேவியின் தியாக வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டது. ராஜஸ்தானில் 1730-களில், ஜோத்பூர் அரசர் அபய்சிங் காலத்தில், மன்னரின் ஆட்கள் மரத்தை வெட்ட வந்தபோது மரத்தைக் கட்டிப் பிடித்து தடுத்தாள் அந்த வீரப்பெண்.அப்போது அந்தப் பெண்ணை மன்னரின் வீரர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். அதன் பின்னர் மனம் மாறிய மன்னர், மரம் வெட்டுவதை நிறுத்தினார். இந்த உணர்வுபூர்வமான வரலாற்று நிகழ்வைத் தனது இயக்கத்தின் போராட்ட முறையாக மாற்றினார் சாந்தி பிரசாத்.

பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மரங்களை வெட்டாமல் காடுபடு பொருட்களைச் சேகரித்து வாழும் முறையை அவர் விரிவுபடுத்தினார். ஆனால், அரசு மரவணிகர்களுக்குக் காடுகளைக் குத்தகைக்கு விட்டு, மக்களை வெளியேறச் சொன்னது. வணிகர்கள் மக்களை விரட்டினார்கள்.

காடுகளின் மீது அவர்களுக்கு இருந்த உரிமை பறிக்கப்பட்டது. எப்படிப் பொதுச் சாலைகளைத் தனியார் கைகளில் கொடுத்துவிட்டு அதற்குச் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ, அதுபோல அங்கே தனியார் மரவணிகர்களுக்கு காடு கைமாற்றப்பட்டது.

இந்தக் கொடுமையை எதிர்த்துத்தான் மக்களைத் திரட்டி காந்திய முறையில் சாந்தி பிரசாத் போராடினார். காடுகளின் பெருமை அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால், 1970-ல் நிகழ்ந்த மேகவெடிப்பு காடுகளின் இன்றியமையாமையை உலகுக்குப் பறைசாற்றியது.

வெட்டுமர வணிகர்கள் இந்த அறவழிப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கினார்கள். அந்தப் பெருவெள்ள நிகழ்வுக்குப் பிறகு மக்களை ஒன்றிணைத்து சாந்தி பிரசாத் மரங்களை நடத் தொடங்கினார். அரசும் வழக்கம்போல மரம் நட்டது.

அதில் மூன்றில் ஒரு பங்கு மரங்கள்தான் உயிரோடு இருந்தன. ஆனால், சாந்தி பிரசாத் நட்ட மரங்களில் 88 சதவீதம் வளர்ந்தன. இது தவிர பல இடங்களுக்கும் சென்று காடுகளின் அவசியத்தை, தற்சார்பு வாழ்க்கை முறையை வலியுறுத்தி அவர் பரப்புரை செய்துவருகிறார். அந்தப் பெருமகனாருக்கு கிடைத்த விருது பெருமை பெறுகிறது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: pamayanmadal@gmail.comசண்டி பிரசாத் பட்

SCROLL FOR NEXT