உயிர் மூச்சு

பசுமை எனது வாழ்வுரிமை 10: காடுகளைப் பிடுங்கிய அரசு

செய்திப்பிரிவு

கு.வி. கிருஷ்ணமூர்த்தி

தேரி கார்வாலின் ஜான்சான் பாவர் பகுதியில் மூன்று வகைக் காடுகளுக்கிடையே இருந்த எல்லைகளைக் குறிப்பிடுவதில் இருந்த சிக்கல் காரணமாக பிரிட்டிஷ் அரசு மூன்றாம் வகைக் காடுகளையும் தானே சிறிது சிறிதாக எடுத்துக்கொண்டு, சட்டரீதியான மேலாண்மைக்கு உட்படுத்தக்கூடும் என்ற சந்தேகத்தை (அதில் உண்மையும் இருந்தது) பழங்குடி மக்களிடம் ஏற்படுத்தியது.

அவர்களுடைய முழுமையான உரிமையின்கீழ் எந்தவொரு காடோ, தரிசு நிலமோ கொடுக்கப்படவில்லை. அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் அரசு எல்லாவற்றையும் மீண்டும் எடுத்துக்கொண்டு அவர்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கிவிடும் என்ற உண்மையை வலியுறுத்தியும் வனச் சட்டங்களின் தீவிரத் தன்மையைப் பற்றி அப்போது அந்த மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அந்தப் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநரிடம் மக்கள் தொடர்ச்சியாகப் புகார் அளித்தார்கள்.

“ஆண்டாண்டு காலமாகக் காடுகள் எங்களுக்குச் சொந்தமானவை. எங்களுடைய மூதாதையர்கள் இவற்றைப் பேணிப் பாதுகாத்து வந்தார்கள். இன்றைக்கு அவை அதிக மதிப்புடையதாக மாறியிருப்பதால் அரசு தலையிட்டு எங்களிடம் இருந்து பறித்துக்கொள்கிறது” என்று ஒரு மலைவாசி தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

விநோதத் தடை

வனச் சட்டத்தின் காரணமாகப் பரம்பரை பரம்பரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த காட்டுப் பொருட்கள் எடுக்கப்படுவதைத் தடைசெய்வது, ஒவ்வொரு நாளும் தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பியது. எடுத்துக்காட்டுக்கு, தேவதாரு மரம் மக்களுக்கு மரக்கட்டை உள்ளிட்ட பல பயன்பாடுகளைத் தந்துவந்தது. அது மரக்கட்டை கொடுக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக அந்த மரத்தைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வது மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

உண்மையில், வனச்சட்டம் தேவதாருவைத் தடைசெய்யவில்லை. எனவே, அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட ஒரு பொருளாகக் கருதி மக்கள் தொடர்ந்து தேவதாரு பொருட்களை (மரக்கட்டைகளையும் சேர்த்து) சேகரித்துப் பயன்படுத்தி வந்தனர்.

மேலும், காட்டு மேய்ச்சல் நிலங்களையும் ஓக் (Oak) மரங்களையும் சக்ராட்டாவிலுள்ள ராணுவ கண்டோன்மெண்டின் விறகு, புற்கள் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டது. இதை ஒரு முக்கியமான, சட்டபூர்வமான குறையாக மாவட்ட அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொண்டார்கள். காலனி ஆதிக்க ஆட்சியில் இந்த விஷயத்தில் அவர்களால் எந்தவித உதவியையும் மக்களுக்குச் செய்ய முடியவில்லை.

தொடர்ந்த கோடாலி

புதிய புல்வெளிகளை உருவாக்குவதற்காக மழைக் காலத்துக்கு முன்பு பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டுவந்த காட்டுத்தரைக்கு மக்கள் தீவைப்பது, மற்றொரு போராட்ட வடிவமாகத் திகழ்ந்தது. அரசு இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பழங்குடி மக்கள் மரக்கட்டையைப் பெறுவதற்குத் தேவையான கோடாலியைப் பயன்படுத்தியதையும் வனத்துறை தடை செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை.

கோடாலிக்குப் பதிலாக ரம்பத்தைப் பயன்படுத்துமாறு வனத்துறை மக்களிடம் அறிவுறுத்தியது. ரம்பத்தின் விலை அதிகம், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரியாது, கோடாலியால் வெட்டிப் பிளக்கப்பட்ட மரக்கட்டை ரம்பத்தால் அறுக்கப்பட்ட மரக்கட்டையைவிட அதிக காலத்துக்கு நிலைத்துக் காணப்பட்டது, தங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய கோடாலியைத் தாங்களும் பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கோடாலியைப் பயன்படுத்தி தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டினர். இத்தகைய அமைதியான போராட்டங்கள் ஜான்சார் பாவரின் செயல்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தவை!

கட்டுரையாளர்,
ஓய்வு பெற்ற தாவரவியல்
பேராசிரியர் தொடர்புக்கு:
kvkbdu@yahoo.co.in

SCROLL FOR NEXT