புதிதாக வேளாண்மையை முன்னெடுத்துச் செய்யும் ஒருவர் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதா? காிம விவசாயத்தை மேற்கொள்வதா? அல்லது இயற்கை இடுபொருட்களுடன் சோ்ந்து வேதியியல் உரங்களை பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்வதா என்பது போன்ற கேள்விகள் எழக்கூடும்.
முதலில் இயற்கை விவசாயம் என்றால் என்ன? ஜப்பான் இயற்கை வேளாண் நிபுணரும் இயற்கை விவசாய வழிமுறைகளை கோடிட்டுக் காட்டியவருமான மசானபு ஃபுகாகோ கூற்றுப்படி இயற்கை விவசாயமென்பது, காலாவதியான பழங்கால முறையன்று. கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் தாண்டியதே இயற்கை விவசாயம். அது ஒரு உறுதியான வடிவத்தைப் பெறவில்லை. மனிதத் தேவைக்காக உணவை, குறைந்த உழைப்பில் இயற்கை வழங்கும் கொடையைப் பின்புலமாகக் கொண்டு சாகுபடி மேற்கொள்வதே இயற்கை விவசாயம்.
நான்கு வழிமுறைகள்
இயற்கை விவசாயத்தின் அடிப்படையில் நான்கு வழிமுறைகளை அவர் விவரிக்கிறார். இயற்கை வேளாண்மைக்கு மண் உழப்படாமல் இருப்பது அடிப்படை. தாவர வேர்கள் மண்ணில் நுழைவதன் மூலமும் நுண்ணுயிர்கள், சிறு விலங்குகள் நன்மை பயக்கும் மண் புழுக்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் காரணமாகவும், மண் தானாகவே தன்னைப் பதப்படுத்திக் கொள்ளும்.
இரண்டாவது வேதியியல் உரங்களோ, தனியாக உருவாக்கப்பட்ட தழையுரமோ பயன்படுத்தக் கூடாது. நிலத்தை அதன் போக்கில் விட்டுவிட்டால், மண் தனக்குத் தேவையான சத்தை இயற்கையாகவே நிர்வகித்துக்கொள்ளும்.
மூன்றாவதாக களையெடுப்போ களைக்கொல்லிகளையோ பயன்படுத்தக் கூடாது. களைகளைக் கட்டுப்படுத்த முடியுமே ஒழிய, ஒழிக்கக் கூடாது. களைகளைக் கட்டுப்படுத்த வைக்கோலைப் பரப்புவது தீவனப் பயிரை பயிருக்கிடையே விதைப்பது, தற்காலிகமாக வயலில் நீரைத் தேக்கிவைப்பது ஆகியவற்றின் மூலமாக களைகளிலிருந்து பயிரை காக்கலாம்.
நான்காவதாக வேதியியல் பொருட்களின் சாா்புத்தன்மை தேவையில்லை. நோய்ப் பாதுகாப்பு, பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு ஏற்ற அறிவியல்பூர்வமான அணுகுமுறை, சுகாதாரமான சுற்றுச்சூழலை பயிருக்கு ஏற்படுத்துவது அவசியம்.
உயிர்ம வேளாண்மை, கரிம வேளாண்மை
தற்போது பரவலாக அனைத்துத் தரப்பினரும் இயற்கைவழி வேளாண்மை எனக் கூறி வருவது முற்றிலும் இயற்கை வேளாண்மையன்று. இது ஒரு வகையில் இயற்கை இடுபொருட்களை மட்டுமே பயன்படுத்தி விதைப்பது முதல் அறுவடைவரை பயிரை வளர்ப்பது. இந்த வகை வேளாண்மையை உயிர்ம அல்லது காிம வேளாண்மை எனக் கூறலாம்.
இத்தகைய இயற்கை இடுபொருட்களை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்யும் முறையில் இயற்கை இடுபொருளான தொழுஉரம், தழை உரங்கள், கோழி எரு, மாட்டுச்சாணம் முதலியவற்றை வெளியிலிருந்து பெற்றுப் பயன்படுத்தலாம் அல்லது பெருமளவு இடுபொருளை தற்சார்பு நிலையில் கூட்டுப்பண்ணையம் அமைப்பதன் வழியாக பண்ணையிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்துவது எளிது. கூட்டுப் பண்ணையம் மூலமாக காிம வேளாண்மையைத் தொடா்வது சிறந்த வழி.
கூட்டுப்பண்ணையம் என்பது அந்தந்தப் பகுதிக்கேற்ப சாகுபடியாகும் பயிரைத் தவிர பண்ணையிலேயே மாடு வளர்த்தல், ஆடு - கோழி வளர்த்தல், முடிந்தால் மீன் வளர்ப்பு, மரம் வளர்ப்பு, முயல், பன்றி வளர்த்தல் போன்ற அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறும் நிலத்தின் அளவைப் பொறுத்தும் ஒருவர் மேற்கொள்ளலாம்.
உயர் விளைச்சலே நோக்கம்
இந்த உயிர்ம அல்லது காிம வேளாண்மை முன்னர் கூறிய இயற்கை வேளாண்மையிலிருந்து சற்று விலகி உயர் விளைச்சல் பெறுவதை முக்கிய நோக்கமாகவும், மண்வளம், மனித உழைப்பை அதிகப்படுத்தி நிலையான, சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாத சிறந்த வேளாண்மை முறை.
இந்த முறையில் சாகுபடி செய்து பெறப்படும் விளைச்சலை நுகர்வோர் அதிகமாக வாங்கி பயன்பெற விழைகின்றனர். எனவே, சுய தேவைக்கு அல்லாமல் சந்தை சார்ந்த வேளாண்மை என்ற நோக்கில் இந்த வகை சாகுபடி உழவர்களுக்கு நல்ல வருமானத்தை தரக்கூடியது.
இந்தக் காிம அல்லது உயிர்ம வேளாண்மை பெருமளவு பழ மரங்கள் சாகுபடியிலும், அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிப் பயிாிலும், தற்போது பரவலாக சிறுதானியங்கள், நெல், பயறு வகைப் பயிாிலும் பயன்படுத்தப்பட்டு விளைபொருள் சந்தைக்கு வருகிறது.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் வேளாண் முறைக்கு இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்புகளும், சங்கங்களும் அகில இந்திய அளவில் ஆர்கானிக் பார்மிங் இந்தியா போன்ற அமைப்புகளும் உறுதுணையாக உள்ளன.
- சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com