சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதி சமீபத்தில் வெளியாகி, கவனம் பெற்ற ‘நீர் எழுத்து’ நூலில் இருந்து சில பகுதிகள்:
நீரினால் எழுதிய எழுத்து அழியும் என்பர். இது அழியாத நீர் எழுத்து. சங்க காலம் தொடங்கி சம காலம் வரைக்குமான தமிழ்நாட்டின் ஈராயிரம் ஆண்டு காலச் சுருக்கமான நீர் வரலாறு. குமரி முதல் ராஜஸ்தானின் ஆரவல்லி மலைத்தொடர்வரை நீண்ட ஆயிரக்கணக்கான மைல் பயணங்கள், ஆறாண்டு காலக் கள ஆய்வுகள், இரண்டரை ஆண்டு கால எழுத்து உழைப்பின் விளைவே இந்த ‘நீர் எழுத்து’.
# கேரளத்தில் வழங்கும் ஒரு வழக்குக்கதை இது. பாலக்காட்டுப் பகுதியை அப்போது சாமோரின் (சமுத்திரி) அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி அங்கிருந்து மிளகுக் கன்றுகளைத் தம் நாட்டுக்கு எடுத்துச்செல்ல முற்பட்டது. மிளகு அப்போது தங்கத்தைவிட மதிப்புமிக்கது. கன்றுகளை எடுத்துச் சென்று அவர்கள் நாட்டில் பயிரிட்டுவிட்டால் பின் எப்படி மிளகு ஏற்றுமதி நடக்கும் என்று கவலைப்பட்ட அமைச்சர், உடனே அரசரிடம் தகவலைத் தெரிவித்தார். அரசர் அலட்டிக்கொள்ளாது மறுமொழிக் கூறினார். “அவர்கள் நம் நிலத்திலிருந்து மிளகுக்கொடியைத்தான் எடுத்துச் செல்ல முடியும். ‘திருவாதிரை ஞாட்டுவேலாவை’ (பருவமழை) கொண்டு செல்ல முடியாது. பாவம்! வெறும் கன்றுகளை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்?” - இது பருவமழையின் அவசியத்தை உணர்த்தும் கதை.
# ஒரு சதுர கிலோ மீட்டர் காடு 50,000 - 2,00,000 க.மீ. நீரைச் சேமிக்கும். ஒரு பக்ராநங்கல் அணை அளவுக்கு நீரைச் சேமிக்க 10,000 ச.கி.மீ. பரப்பளவில் காடுகளை வளர்த்தால் போதும். நமது 40% நீர்வளம் காடுகளிடமிருந்தே கிடைக்கிறது. இத்தனைக்கும் நம் காடுகளின் பரப்பு 20% மட்டுமே. இதே அளவு நீர்வளத்தை அணைகளில் தேக்கிவைக்க வேண்டுமெனில், அதற்கு 1,25,000 கோடி ரூபாய் தேவைப்படும் என்கிறது டேராடூனிலுள்ள கானக ஆய்வு நிறுவனம் (FRI – Forest Research Institute). காடு, எனும் இயற்கை அணையே மலிவு என்பது எப்போதும் அணை கட்டத் துடிக்கும் பொறியாளர்களுக்கு ஏன் புரிவதில்லை?
# இமயத்தில் ஏறத்தாழ 15,000 பனிமுடிகள் உள்ளன. குளிர்காலத்தில் இதன் பனிப்பரப்பு 5,00,000 சதுர கி.மீ. இதில் நிரந்தரமான பனிப்பாறைப் பகுதி ஏறக்குறைய 50,000 சதுர கி.மீ. இதிலுள்ள நீரின் அளவு தோராயமாக 40 கோடி ஹெக்டேர் மீட்டர் என்கிறது ஒரு கணிப்பு. இது இந்திய ஒன்றியம் முழுவதும் ஓராண்டில் பெய்யும் மழையின் அளவு. பனி உருகுவதன் மூலம் ஆண்டுக்கு 6.5 கோடி ஹெக்டேர் மீட்டர் நீர் கிடைக்கிறது. இதில் 70-80 சதவீதம் நீர் ஜூன் தொடங்கி செப்டம்பருக்குள் கிடைப்பது. மற்ற எட்டு மாதங்களுக்கு மொத்தத்தில் கால்வாசி நீர்தான் கிடைக்கும். பருவநிலை மாற்றம் இமயத்தை ஐஸ்கிரீம்போல் உருக வைத்துக் கொண்டிருக்கையில் சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா ஆறுகளின் நீர் அளவுக்கு எந்த உறுதியும் கிடையாது. பிறகு எதை நம்பி ஆறுகளை இணைப்பது?
# பிரிட்டிஷார் ஆட்சியில் பாலாற்று நீரை வேலூர்ப் பகுதியில் ஆய்வுசெய்துவிட்டு அரசுக்கு அளிக்கப்பட்ட சென்னை முதல் நில அளவை அறிக்கையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “வடஇந்திய ஆறுகளைவிடப் பாலாற்றில் ஓடும் நீர்த் தெளிவாகவும் தூய்மையாகவும் உள்ளது”. இன்றைய நிலைமை? பாலாறு ஓர் ஆறு மட்டுமல்ல, அது பெரிய நீர்த்தேக்கம். ஆற்றின்கீழ் மற்றொரு ஆறு ஓடுகிறது என்பார்கள். ஒரே நேரத்தில் கால்வாயாகவும் நீர்த்தேக்கமாகவும் விளங்கும் ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியோ கால்வாய் (California Aquaduct) நவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், இதையே பாலாறு என்ற பெயரில் இயற்கை நமக்கு இலவசமாக வடிவமைத்துத் தந்துள்ளது.
# ஒரு நீர் மூலக்கூறு 100 ஆண்டு காலம் வாழ்கிறது என்று வைத்துக்கொண்டால், அதில் 98 ஆண்டுகள் அது கடலில் வாழ்கிறது. 20 மாதங்கள் பனிக்கட்டியாக உள்ளது. ஒரு வாரத்துக்கும் குறைவாக வளிமண்டலத்தில் தங்குகிறது. இங்கெல்லாம் அதற்கு ஒரு ஆபத்துமில்லை. ஆனால், இரண்டே இரண்டு வாரங்கள் மட்டும் நிலத்தில் தங்குகையில் மனிதரிடம் சிக்கி இயல்பு தொலைந்து சாம்பல் நீராகி விடுகிறது. மனிதரைத் தவிர வேறெந்த உயிரினமும் நீரை நஞ்சாக்குவதில்லை.
# தமிழகத்தின் சங்கிலித்தொடர் ஏரிகள் எட்டாம் பிறை வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தின் நில அமைப்பை ஊன்றிக் கவனித்து இதை அமைத்துள்ளனர். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சரியும் தமிழக நில அமைப்பில் தெற்கு வடக்காக அமைந்த ஏரிகள் மிகப் பொருத்தமான நீர் சேகரிப்பு முறை. ஒருகாலத்தில் நிலப்பகுதியில் இருந்து இன்றைய நிலைக்குப் படிப்படியாகக் கடல் பின்வாங்கி நகர்ந்தபோது, ஒவ்வொரு பகுதியிலும் பிறை வடிவப் பள்ளங்களையும் அதன் கீழே கரை போன்ற மண்மேடுகளையும் உருவாக்கியது. இதைப் புவியியலில், ‘லோபேட் டெல்டா’ என்றழைப்பர். இதை உன்னிப்பாகக் கவனித்த இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த பழந்தமிழர் சங்கிலித்தொடர் நுட்பத்தை வடிவமைத்துள்ளனர்.
# கான்கிரீட் தளத்திலும் தீர்வு வைத்துள்ளது இயற்கை. 500 சதுர அடிப் பரப்பளவுள்ள மாடிகளைக் கொண்ட 20,000 வீடுகள் இருந்தாலே போதும். மாடிகளில் பெய்யும் மழைநீரை முழுவதும் கிணற்றிலோ நிலத்திலோ சேமித்தால் அது மேட்டூர் அணையின் கொள்ளவுக்குச் சமம் என்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன். நாம் எவ்வளவு மேட்டூர் அணைகளை இழந்துகொண்டிருக்கிறோம்!
# நீர் ஒரு மாபெரும் புதிர். ஆய்வாளர்கள் இதுவரை நீரின் எழுபதுக்கும் மேற்பட்ட விநோதப் பண்புகளைக் கண்டறிந்துள்ளனர். நீரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்களைக்கொண்டு ஒரு நூலகத்தையே நிரப்பலாம். நீரைப் பற்றி அனைத்தும் அறிந்துவிட்டோம் என்று நினைப்பது அறியாமை. என்னதான் ‘பெம்பா விளைவு’ (Mpemba Effect) எனப் பெயரிட்டு அழைத்தாலும், நீரைக் குறித்த ஒரு வினாவுக்கு அரிஸ்டாட்டில் காலம் தொடங்கி இன்றுவரை துல்லியமான விடை கிடைக்கவில்லை என்கிறது ‘ஜியோ’ சூழலியல் இதழ். அந்த வினா இதுதான்: ‘கொதிநீரையும் வெதுவெதுப்பான நீரையும் ஃபிரீசரில் வைத்தால் ஏன் கொதிநீர் முதலில் உறைகிறது?’