அழகிய மலைக்காட்டின் விடியல் நேரம். பொறுத்துக்கொள்ளக்கூடிய வேனில் காலத்துக் குளிர்தான். ஆனாலும் மழைச் சாரல் உருவாக்கியிருந்த சூழல், கூடுதல் குளுமையைத் தந்தது. பறவைகளின் வருகைக்காக என்னோடு சேர்ந்து, அந்த காலைப் பொழுதும் பொறுமையாகக் காத்திருந்தது.
ஒரு மரத்தின் கிளையிலிருந்து தொடங்கிய ஏதோ ஒரு பறவையின் பாடல், ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. மெதுவாகத் தொடங்கிய பாடல், நொடிக்கு நொடி பதமாக ஸ்வரம் பிடித்து பலமாகக் கேட்டது. ‘புதுமையாக இருக்கிறதே…’ என அந்தப் பறவையைக் காண, பாடல் கேட்ட மரம் நோக்கி விரைந்தேன். அருகில் செல்ல செல்ல, ஒலியின் வீரியம் கூடிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் எனது வருகையை அறிந்துக்கொண்ட அந்தப் பறவை வேறு மரத்துக்குத் தாவியது.
தொடர்ந்த கச்சேரி
மீண்டும் அதே ஓசை. புதிய மரம் நோக்கி நகர்ந்தேன். மீண்டும் அடுத்த மரத்துக்குத் தாவியது அந்தப் பறவை. இப்படியே பல மரங்களைத் தரிசித்திருப்பேன். கடைசியாக ஓசை கேட்ட மரத்தைப் பின்பக்கமாக நெருங்கினேன். பாடலைக் காற்றில் தவழவிட்ட பறவையைக் அங்கே கண்டுபிடித்துவிட்டேன்.
‘யுரேகா… யுரேகா…’ என ஆர்கிமிடீஸ்போல துள்ளிக் குதித்தேன். ‘பாடிக்கொண்டே இருக்கிறாயே, உனக்கு வாயே வலிக்கதா…’ எனச் செல்லமாக அந்தப் பறவையிடம் கேட்க வேண்டுமெனத் தோன்றியது. அதன் பிறகு நீண்ட நேரம் அந்தப் பறவை அதே மரத்திலேயே இசைக் கச்சேரி நடத்தியது. ரசிகனாக ஆசை தீர இசையை உள்வாங்கிக்கொண்டேன்.
பாடலில் லயிப்பு
கொஞ்சத் தோன்றும் தோற்றம்; ரசிக்கத் தூண்டும் பாடல்; அழகான சிறிய கருவிழி; பாடுவதற்காக ஓயாமல் திறந்து கொண்டே இருந்த அலகுகள்; தலையின் மேல் காபி நிறம்; மொசுமொசுவென வெண் தொண்டை; வெள்ளை நிற வயிற்றில் காபி நிறத்தில் கோடுகள். இந்தக் குறிப்புகளைக் கொண்டு அது பொறி மார்புச் சிலம்பன் (Puff throated babbler) எனப் பிறகு அறிந்து்கொண்டேன்.
பாடகர்கள் பாடலுக்குள் ஆழ்ந்துபோய் ரசித்துப் பாடுவதைப் போல, பொறி மார்புச் சிலம்பனும் லயித்துப் பாடிக்கொண்டே இருந்தது. பின்னர் மரத்திலிருந்து கீழிறங்கித் தரையில் பதுங்கிப் பதுங்கி இரைதேடியது. அப்போதும் பாடுவதை மட்டும் நிறுத்தவில்லை அந்த அழகிய பறவை.
வேறு பறவைகளின் ஓசை கேட்டு நகர்ந்த பின்பும், பின்னணியில் பொறி மார்புச் சிலம்பனின் பாடல் கேட்டுக்கொண்டேதான் இருந்தது. சில திரைப்படப் பாடல்கள், திரும்பத் திரும்ப மனத்தில் ஒலித்துக்கொண்டே இருப்பதைப் போல, அன்று காலையில் கேட்ட அந்தப் பறவையின் பாடல், சில நாட்களுக்கு மனத்தில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.
பொறி மார்புச் சிலம்பன்… இன்னிசைப் பாடகன்!
- வி. விக்ரம்குமார்,
சித்த மருத்துவர் - இயற்கை ஆர்வலர்,
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com