உயிர் மூச்சு

பசுமை எனது வாழ்வுரிமை 09: ஜான்சார் பாவரின் உரிமைப் போராட்டங்கள்

செய்திப்பிரிவு

கிராமப்புறங்களின் எதிர்ப்பு, புரட்சி ஆகியவையே கிராம அரசியலுக்குக் காரணம் என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. ஆனால், அதற்கு மாறாக அரசியல்-சாரா எதிர்ப்புகளும் அந்த மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, தங்கள் மேல் வலுக்கட்டாயமாகச் சுமத்தப்பட்ட சட்டங்கள், தடைகள் ஆகியவற்றுக்கு மக்கள் ஒத்துழைக்க மறுத்துள்ளனர்.

வரிவசூல் செய்பவர்களுக்கும் இதர அதிகாரிகளுக்கும் தவறான அல்லது திசைதிருப்பும் தகவலைக் கொடுப்பது அல்லது தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டுத் திடீரென்று வேறு இடங்களுக்கு இடம்பெயர்வது என்பன போன்ற உத்திகளை மக்கள் கடைப்பிடித்தார்கள். மேலும் மனுக்கள் கொடுப்பது, அமைதியான, நியாயமான, சட்டரீதியான வழிமுறைகள் முயலப்பட்டன. இவை பொய்த்துப் போகும்போதுதான், தீவிரப் போராட்டங்களை அவர்கள் மேற்கொண்டனர் என்பது வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. என்றாலும், வன்மையான போராட்டங்கள்தாம் பேரளவுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன, அமைதிவழிப் போராட்டங்கள் அதிகமாக வெளிச்சத்துக்கு வரவில்லை.

மூன்று வகைக் காடுகள்

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் வனச் சட்டத்துக்கான வெளிப்படையை புரட்சியற்ற எதிர்ப்புக்கான ஒரு தெளிவான உதாரணம் ஜான்சார் பாவர் பகுதி மக்களின் போராட்டம். இந்தப் பகுதி டேராடூன் மாவட்டத்தின் மலைப் பிரதேசங்களில் ஒன்று. இதன் மேற்குப் பகுதியில் தேரி கார்வால் உள்ளது. 1860-களின் தொடக்கத்தில் இருந்தே ஜான்சார் பாவர் பகுதியின் காடுகள் பிரிட்டிஷ் அரசின் கவனத்தை ஈர்த்தன: ரயில்வே துறைக்குத் தேவையான மரக்கட்டைகள்; டேராடூனில் அமைந்திருந்த வனவியல் பள்ளியின் பயிற்சி மானவர்களுக்கான ஆய்வுக் காடுகள்; சக்ராட்டா ராணுவ கன்டோன்மென்டுக்குத் தேவையான மரக்கட்டைகள், விறகுகள் ஆகிய மூன்று முக்கியக் காரணங்களுக்காக பிரிட்டிஷார் இந்தப் பகுதியைக் கைப்பற்ற நினைத்தார்கள்.

1868-ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆணையின்படி அரசு, மேற்கூறப்பட்ட பகுதியின் காடுகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்தது: அவற்றின் பேணிப் பாதுகாத்தலுக்காக (Conservation) மட்டுமே ஒதுக்கப்பட்டு, முற்றிலும் மூடப்பட்ட காடுகள்; கால்நடை மேய்ச்சலுக்கும் மரக்கட்டை சேகரிப்புக்கும் ஒரு சில உரிமைகளைக் கிராம மக்கள் பெற்றிருந்த காடுகள்; வேளாண் மக்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக, ஆனால், காட்டுப் பொருட்களில் எதையும் பண்டமாற்றமோ விற்பனையோ செய்யக் கூடாது என்ற எச்சரிகையுடன், அனுமதிக்கப்பட்ட காடுகள். என்றாலும், இதனால் அந்த வட்டாரப் பழங்குடி மக்களும், கிராம மக்களும் உண்மையிலேயே பயன் பெற முடியவில்லை.

உரிமைக் குழப்பம்

அரசின் முற்றுரிமையை (monopoly) எதிர்த்துதான் தொடக்கத்தில் பழங்குடி மக்களின் போராட்டங்கள் இருந்தன. மேற்கூறப்பட்ட மூன்றாம் வகைக் காடுகளின் குழப்பமான சட்ட நிலையான, அதாவது அவற்றின் மேல் யாருக்கு உண்மையான உரிமை இருந்தது என்பது பற்றிய குழப்பம், தாங்கள் விரும்பியபடி மரக்கட்டைகளை விற்க பழங்குடி மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஆகியவற்றின் காரணமாகப் போராட்டம் அதிகரித்தது. மூன்றாம் வகைக் காடுகளின் உற்பத்திப் பொருட்களைப் பழங்குடிகள் விரும்பியபடி விற்க முடியாது என்றும், அவற்றின் மேல் அவர்களுடைய கட்டுப்பாடு முறைசார்ந்த (formal) ஒன்றுதான் என்று மக்கள் நம்பினாலும் பிரிட்டிஷ் அரசு தன்னுடைய பங்குக்கு மரக்கட்டை வணிகத்தில் இருந்த முற்றுரிமையை விட்டுக்கொடுக்க மறுத்தது.

இந்தப் பிரச்சினையும் முரண்பாடும் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்தன. தொடர்ச்சியான பல மனுக்கள் மக்கள் சார்பில் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. அந்த மாவட்டத்தின் அப்போதைய ஆட்சித் தலைவர் குறிப்பிட்டதைப் போல் கிராம மக்கள் மூன்றாம் வகைக் காடுகளின் அளவைவிட, அதன் சட்ட நிலைமைப் பற்றி அதிகம் கவலைப்பட்டனர். உண்மையில், அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக்கப்படும்பட்சத்தில், அப்போது அவர்கள் பெற்றிருந்த காட்டின் அளவைவிடக் குறைந்த அளவு காட்டைக்கூட ஏற்கத் தயாராக இருந்தனர்.

- கு.வி. கிருஷ்ணமூர்த்தி,
ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

SCROLL FOR NEXT