உயிர் மூச்சு

பசுமை எனது வாழ்வுரிமை 07: பழமையான சூழலியல் இயக்கம்

செய்திப்பிரிவு

கு.வி. கிருஷ்ணமூர்த்தி

காந்தியின் சர்வோதய இயக்கத்தின் தாக்கம் காடு, காடு-வாழ் மக்களின் மீதும் ஏற்பட்டது. காடு-வாழ் மக்களின் முன்னேற்றம் அனைத்து மக்களின் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் என்ற முழக்கம் பல இடங்கலில் எழத் தொடங்கியது. இந்தத் தாக்கத்துக்கான ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு டிலாரி (Tilari) இயக்கம்.

இன்றைய உத்தராகண்ட் பகுதியில் உள்ள தேரி கார்வால் அன்றைக்கு மன்னராட்சியின்கீழ் இருந்தது; வட இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடித்துவந்த மிகவும் பழமையான மன்னராட்சி இது. என்றாலும், சூழலியல் உரிமைப் போராட்டங்கள் நடந்த காலகட்டத்தில் மன்னரின் நிர்வாகம், அரசு அதிகாரிகளின் கையில் இருந்தது. ஆனால், அவர்கள் இந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திவந்தார்கள்.

மரபு முறையீட்டு முறை

ஏறத்தாழ கடவுளுக்கு நிகரான மதிப்பை மன்னர் பெற்றிருந்தார்; மக்களால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். ஆனால், அவருடைய அதிகாரிகளின் தவறான நிர்வாகத்தால் மக்கள் அதிக அளவு கசப்பும் அதிருப்தியும் அடைந்திருந்தனர். இந்தக் கசப்பும் அதிருப்தியும் அரசரிடம் அல்லாமல், அரசு அதிகாரிகளிடம்தான் காட்டப்பட்டன. இந்தப் பகுதியில் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்பு கிராம மக்களின் பொதுவான எதிர்ப்பு ‘தண்டக்’ (dhandak) ஆகத்தான் இருந்தது. இந்த உத்தியின் மூலம் கிராம மக்கள், அரசு அதிகாரிகளின் முறையற்ற செயல்பாடுகளை அரசரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வார்கள்.

சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கிராம மக்கள் கோயில் போன்ற பொது இடங்களில் ஒன்றுகூடுவார்கள். இந்தக் கூட்டத்துக்கான அறிவிப்பு பறை அடித்து அறிவிக்கப்படும். தங்களின் மரபு-சார் உரிமைகளுக்கு ஊறு விளைவிக்கும் புதிய அரசாணைகளுக்கு எதிராக மக்கள் ஒரு தீர்மானம் போடுவார்கள்; தேவைப்பட்டால் ஊர்வலமாக மன்னரிடம் சென்று இதுகுறித்து முறையிடுவார்கள். இவ்வாறு தண்டக் என்பது மரபாலும், பரம்பரை பரம்பரையாகவும் வழங்கப்பட்ட ஒரு முறையீட்டு உரிமையாக விளங்கியது.

சூழலியல் பாதுகாப்பு இயக்கம்

காடு, காட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான தங்களின் உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த மக்கள், தண்டக் உத்தி மூலம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இது 1906-ல் இருந்து தொடர்ந்தாலும், 1930-ல்தான் மரபுசார் வழக்கத்திலிருந்து ஒரு முக்கிய விலகல் ஏற்பட்டது. அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஏறத்தாழ 25 ஆண்டுகளாக நிலவிவந்த மனக்கசப்பின் விளைவாக இது ஏற்பட்டது. மக்கள் வழிவழியாகப் பின்பற்றிவந்த தண்டக் உத்தியை, பிரிட்டனின் காலனி ஆதிக்க அரசில் அங்கம் வகித்த அதிகாரிகளால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

மேலும், மக்களின் எந்தவொரு பெரிய போராட்டத்தையும் ஒரு வன்மையான புரட்சியின் அறிகுறியாகவே அவர்கள் பார்த்தார்கள். டிலாரி போராட்டம் 1906, 1930, 1944-1947 ஆகிய ஆண்டுகளில் விட்டுவிட்டு நடந்த ஒரு சூழலியல் உரிமைப் பாதுகாப்பு இயக்கம். 1930 மே 3 அன்று நடந்த போராட்டங்களின்போது பழங்குடி சமுதாயத்தினரில் பலர் மன்னர் படைகளால் கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டங்கள் பற்றிய விவரங்கள் ராமச்சந்திர குஹாவின் ‘The Unquiet Woods’ என்ற நூலில் உள்ளன.

(தொடரும்)
கட்டுரையாளர்,
ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

SCROLL FOR NEXT