நாட்டின் 20-ம் கால்நடைக் கணக்கெடுப்பு முடிவு வெளிவந்துள்ளது. இதில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை 2012-ன் கணக்கெடுப்பைக் காட்டிலும் 6 சதவீதம் அளவு குறைந்துள்ளன. கலப்பின மாடுகளின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதுபோல் வளர்ப்புப் பிராணிகளாக உள்ள கழுதைகள், குதிரைகள், பன்றிகள், எருதுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. 2012 கணக்கெடுப்பின்படி மாடு வளர்ப்பில் உத்தரப்பிரதேசதம் முதலிடத்தில் இருந்தது. இப்போது மேற்கு வங்கம் அதைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதுபோல் வளர்ப்புப் பறவைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
அற்புதப் பொன்னி டிகேஎம்-13
டீலக்ஸ் பொன்னி, கா்நாடகப் பொன்னி ஆகிய ரகங்களுக்கு மாற்றாக டிகேஎம்-13 அற்புதப் பொன்னி ரகம் 2015-ம் ஆண்டு தமிழக வேளாண் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரகம் மழை, வெள்ளக் காலங்களைச் சமாளிக்கும் தன்மை கொண்டது; இலை மடக்குப் புழு, தண்டுத் துளைப்பான், குலை நோய், இலை உறை அழுகல் நோய் போன்றவற்றை எதிா்க்கும் திறன் கொண்டது. சிறப்புப் பண்புகள் கொண்ட இந்த ரகத்தைப் பயன்படுத்தும்படி சேரன்மகாதேவி வட்டார வேளாண் உதவி இயக்குநா் கு.உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.
தக்காளி விலை குறையும்
ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் தக்காளி விலை குறையும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டிலும் தக்காளி விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.
பழங்கள் மீதான ஸ்டிக்கருக்குத் தடை
ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் போன்ற பழங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு சத்தீஸ்கர் அரசு தடை விதித்துள்ளது. பழங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி ஸ்டிக்கர் ஒட்டினால் சுகாதாரமற்ற
உணவை விற்ற குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: விபின்