சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்
தரமான விதையைத் தேர்ந்தெடுத்து அதை உரிய பருவத்தில் விதைப்பது என்பது இடத்துக்கு இடம் பருவ நிலைக்குத் தகுந்தாற்போல் மாறுபடும். நன்செய் நிலங்களில் பெரும்பாலும் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இதன் விதைப்பு தண்ணீர்ப் பற்றாக் குறையிலுள்ள நிலங்களில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
நீர்ப்பாசனம் உறுதியாக உள்ள ஆற்றுப் பாசனப்பகுதியிலும் கண்மாய்ப் பாசனப்பகுதியிலும் கிணற்றுப் பாசனப்பகுதிகளிலும் நாற்று விட்டுப் பின் அந்நாற்றுகளை நடவு வயலில் நட்டுப் பயிர் சாகுபடி செய்வது நடைமுறையில் உள்ளது. அவ்வாறு நெல் நடவு மேற்கொள்ளும்போதும் அல்லது நேரடி விதைப்பின் போதும் பண்ணை இயந்திரங்களின் பயன்பாடு குறித்து பார்ப்போம்.
இயந்திர நடவு முறை
நவீன வேளாண்மையில் இயந்திர நடவு முறை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான நடவு இயந்திரங்கள், தனிப்பட்ட ஒருவராலும் விவசாயக் குழுக்களிலும் என்.ஜி.ஓ.க்களிலும் வாடகைக்குக் கிடைக்கின்றன. இதை உழவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நடவுக்கு முன்பு நாற்றுகள் வளர்ப்பதில் ஒரு சிறப்பு முறையாக பாய் நாற்றாங்காலில் நாற்று வளர்ப்பது அவசியம். இவ்வியந்திரத்தின் உரிமையாளரோ அவர் சார்பில் பணி ஆட்களோ பாய் நாற்றாங்கால் தயார் செய்கிறார்கள்.
நில உரிமையாளர் தங்கள் பயிர்ச் சாகுபடி செய்யும் பரப்புக்குத் தகுந்தாற்போல் விதைகளை இந்நாற்றங்கால் அமைக்கும் பணியாளரிடம் வழங்கினால் நாற்று பாவிய பின் அவற்றைப் பறித்து நடவு வயலில் நட்டும் கொடுத்து விடுகின்றனர். இந்த நடவு முறையில் நெற்பயிரில் ஒரு வரிசைக்கும் மறு வரிசைக்கும் இடையேயும் ஒரு பயிருக்கும் மறு பயிருக்கும் உரிய இடைவெளி பேணப்படுகிறது.
இதனால் வரும் நாட்களில் களையெடுப்புக்கும் ஆகும் செலவு பேரளவு குறைகிறது. அதேநேரத்தில் பயிர்களுக்கு ஊடே களையெடுக்கும் கருவியைக் கொண்டு ஒரு நபர் களையெடுத்து விடலாம். இக்கருவியால் தொழி உள்ள நிலத்தில் களைகள் அமிழ்த்தப்பட்டு மக்கச் செய்யப்படுகிறது. இந்த நடவு முறை நெற்பயிரில் சாகுபடிச் செலவைக் குறைப்பதோடு விரைவில் நடவுப்பணியை முடிக்கவும் ஏதுவாகிறது.
இவை தவிர வழக்கமான நடவு முறையில் வயலில் நாற்று பாவி நாற்றுகள் வளர்ந்தவுடன் உரிய காலத்தில் வேலையாட்களால் (பெண்களால்) நடவு செய்யப்படுவது வழக்கம். இயந்திர நடவில் 16 நாட்களில் வயலில் நட்டு விடலாம். ஆனால், பழைய முறையில் நாற்றுக்கள் நட குறைந்தது 20லிருந்து 25 நாட்கள்வரை ஆகும். நாற்றங்காலில் வளர்ந்த நாற்றையே நடவு வயலுக்கு பறித்து எடுக்க முடியும்.
இப்போது நெல் நடவு இயந்திரங்களின் பங்கு அறுவடைக்குப் பயன்படுத்தும் இயந்திரத்தின் பயன்பாடுபோல் அதிகரித்துவருகிறது. குறைந்த வயது நாற்றுகள் நாற்று நடுவதற்கு எடுக்கும் கால அளவு குறைவு. களையெடுப்பதற்கு ஆகும் செலவு குறைவு. இதுபோன்ற நன்மைகளால் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
நேரடி நெல் விதைப்பு
ஆற்றுப்பாசனத்திலுள்ள கடைமடைப் பகுதிகளிலும் கண்மாய்ப் பாசனத்திலும் மழையை எதிர்பாா்த்து, நெல் சாகுடி செய்யும் உழவர்கள் நேரடி நெல் விதைப்பு என்ற உத்தியைக் கைக்கொள்ளலாம். நேரடி நெல் விதைப்பும் தற்போது பரவலாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நேரடி நெல் விதைப்பின்போது நிலத்தை நன்கு உழுது, உலர வைத்த விதைகளை நேரடியாக விதைத்துப் பின் குறுகிய இடைவெளியில் நீர்ப்பாசனத்தை மேற்கொள்ள வேண்டும். இம்முறையில் நெல் நேரடி விதைப்புக்கும் விதைப்புக் கருவி பயன்படுத்தப்படுகிறது.
இக்கருவியால் உரிய ஆழத்தில் விதைப்பு செய்ய முடிகிறது. நேரடி விதைப்பின்போது நெல் விதைகளை உலர வைத்து வறட்சியைத் தாங்கும் நிலையில் விதைகளை மேம்படுத்தி விதைக்க வேண்டும். இதனால் பயிரின் சீரான வளர்ச்சி, நீர் பாய்ச்சிய பின்பு தெரிய வரும். இம்முறையில் விதைப்பு செய்தால் பயிரின் வளர்ச்சிக் காலம் குறைகிறது. காலம் தாழ்ந்து பெய்யும் மழை, ஒரு மழைக்கும் மறு மழைக்கும் பருவகாலத்தில் ஏற்படும் இடைவெளி ஆகிய இயற்கை இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு மகசூலை எடுக்க இந்த முறை ஒரு சிறந்த உத்தி.
கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com,
selipm@yahoo.com