உயிர் மூச்சு

‘பசுமை’ பட்டாசுகள்

செய்திப்பிரிவு

வழக்கமான பட்டாசுகள் தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களான லித்தியம், ஆர்சனிக், பேரியம், ஈயம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும்போது காற்று, ஒலி மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மனித உடல்நலம் சீர்கெடுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த, வேதிப்பொருட்கள் குறைவாக உள்ள ‘பசுமைப் பட்டாசு’களைத் தயாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் மத்திய அறிவியல், தொழில் ஆராய்ச்சி மையம் (சி.எஸ்.ஐ.ஆர்.), தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (என்.இ.இ.ஆர்.ஐ.) ஆகியவை இணைந்து சுற்றுச்சூழலை பாதிக்காத ‘பசுமைப் பட்டாசு' தயாரிப்பு முறைகளை உருவாக்கியுள்ளன.

பசுமைப் பட்டாசுகளில் பாதுகாப்பான தெர்மைட், குறைந்த அளவு அலுமினியம், நீர் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதிக காற்று, ஒலி மாசு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றின் உற்பத்தி, விற்பனைக்கு 230 பட்டாசு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பசுமைப் பட்டாசுகள், தற்போது புழக்கத்தில் உள்ள பட்டாசுகளில் இருந்து மாறுபட்டவை. தற்போது தலைநகர் டெல்லியில் பசுமைப் பட்டாசுகளின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த பசுமைப் பட்டாசுகள் மீதுள்ள ‘QR Code'-ஐ ஸ்கேன் செய்து அவற்றின் தன்மைகளைப் பற்றி கூடுதலாக அறியலாம்.

ஞெகிழிக் குடிநீர்

ஞெகிழி கேன், பாட்டில் ஆகியவற்றில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரில் நுண்ஞெகிழித் துகள்கள் அதிக அளவு காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, குடிநீரில் உள்ள நுண்ஞெகிழித் துகள்கள் மனித உடலுக்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து விரிவான ஆராய்ச்சிகள் தேவை என ஐ.நா. அவை வலியுறுத்தியுள்ளது.

ஞெகிழிப் பொருட்கள் உற்பத்தி உலக அளவில் வளர்ந்துவரும் முக்கியத் துறையாக உள்ளது. இந்த எண்ணிக்கை தற்போதைய அளவில் இருந்து 2025-ல் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் நுண்ஞெகிழியின் அளவு அரை மில்லிமீட்டருக்கும் குறைவு. நுண்ஞெகிழி கலந்திருக்கும் நீரை அருந்தும் மனித, உயிரினங்களின் உணவுக் குழாய், குடல், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் நுண்ஞெகிழி கலந்து, உடலை ஞெகிழிக் கிடங்காக மாற்றிவிடுகிறது. இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது.

தொகுப்பு: எல். ரேணுகா

SCROLL FOR NEXT