வி.விக்ரம்குமார்
எழிலார்ந்த கொல்லி மலை ஆகாய கங்கை அருவியின் பிரமிப்பை முழுமையாக உணர்வது என்று ஒருநாள் முடிவுசெய்தேன். மரங்கள் சூழ்ந்த ஆயிரம் படிக்கட்டுக்கள் கொண்ட இறக்கத்தில் கால் பதித்து அருவியை நோக்கிக் கீழிறங்கிக்கொண்டிருந்தேன். என் நடைக்குப் பின்னணி இசை சேர்ப்பதுபோல், கொல்லிமலைக் காடுகளின் வெண்கன்னக் குக்குறுவான்கள் (White-cheeked barbet), ‘குட்று… குட்று…’ என இசையமைத்துக்கொண்டிருந்தன.
இசையை உள்வாங்கிக்கொண்டே ஆகாய கங்கை அருவி நிலத்தைத் தொடும் இடத்தை அடைந்துவிட்டேன். மிக அதிக உயரத்தில் இருந்து ’ஹோ’வென்ற ஓசையுடன் ஆர்ப்பரித்துக் கொட்டிக்கொண்டிருந்தது ஆகாய கங்கை. ஆனால், அருவியின் காலடியில் உறங்கிக்கொண்டிருந்த பாறைகளில் பட்டுத் தெறித்த தண்ணீரின் ஓசை எனக்கு மட்டும் ‘குட்று குட்று’வென்றே கேட்டது. குக்குறுவான் மீது அடங்காத பிரியம் எனக்குள் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
ஈர்த்த குரல்
உடனடியாக அந்தக் குரல் எழுந்த மேல் திசை நோக்கிப் பரபரவென நகர்ந்தேன். புவியீர்ப்பு விசைக்கு எதிராகப் படிக்கட்டுகளில் வேகமாக மேலேறுவது சிரமமாக இருந்தது. களைப்பைப் போக்க உட்கார்ந்தபோதெல்லாம், ‘குட்று குட்று’ ஓசை வெளிப்பட்டு என்னை மேலே உந்தித் தள்ளியது. அப்பகுதியில் நிறைய வெண்கன்னக் குக்குறுவான்கள் எனக்காக காத்திருந்தன. ஒரு கட்டத்தில் நாலா புறமும் அந்தப் பறவையின் ஓசை மட்டுமே எதிரொலித்துக்கொண்டிருந்தது.
மூச்சிரைக்கப் படியில் உட்கார்ந்து ஓரிடத்தில் தலையை நிமிர்த்திப் பார்த்தபோது, தலைக்கு மேலிருந்த அடர்ந்த மரக்கிளைகளுக்குள் ஒரு வெண்கன்னக் குக்குறுவான் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. சங்கிலித் தொடர்போல, நிறைய வெண்கன்னக் குக்குறுவான்கள் என் பார்வை வளையத்துக்குள் சிக்கத் தொடங்கின!
தனித்த ஜோடி
அங்கிருந்த குக்குறுவான் சாம்ராஜ்யத்தில் என் மனத்தை ஈர்த்தது ஒரு அன்பான ஜோடி. அலகோடு அலகை உரசுவது; ஒன்றை மற்றொன்று பார்த்துக்கொள்வது; இப்படியாக, சற்றுத் தொலைவில் இருக்கும் மற்ற குக்குறுவான்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் கவலைப்படாமல் அவை தங்கள் உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தன.
ஒரு குக்குறுவான் சென்று பழங்களை அலகுகளில் நிறைத்து வரும். மற்றொன்று, உணவுக்காகத் தன் அலகுகளை மெதுவாக விரித்து, பழங்களைக் கவ்விக்கொள்ளும். குழந்தை தனது தாயிடமிருந்து வாஞ்சையை எதிர்பார்ப்பதைப் போல, உணவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது அந்தக் குக்குறுவான்.
ஓவியர்கள் தூரிகையைக்கொண்டு ஒரு வெள்ளைத் தீற்றலைத் தீட்டியதைப் போன்ற கன்னம்; கொஞ்சத் தூண்டும் சின்னஞ்சிறு உருவம்; மார்பு பகுதியில் வெண்பழுப்பு நிறத்திலான வரிப் படலம்; இலைப் பச்சை நிறத்திலான முதுகு; மெல்லிய பச்சை நிறத்திலான முன் வயிற்றுப் பகுதி; உருமறைத் தோற்றத்துக்கு உகந்த நிற அமைப்பு.
அந்தச் சிறு பறவையின் குரல்வளையிலிருந்து அதிரச் செய்யும் ஒலி பிறக்கும் இயற்கையின் ஆற்றலை எண்ணி, இப்போதும் வியந்து கொண்டே இருக்கிறேன்!
கட்டுரையாளர்,
சித்த மருத்துவர் - இயற்கை ஆர்வலர்,
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com