சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்
இத்தொடர் குறிப்பாக வேளாண்மையைத் தொழிலாகப் புதிதாக முன்னெடுக்கும் உழவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறோம். ஏற்கெனவே வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோருக்கு அரசின் திட்டங்களை அறியவும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது எவ்வாறு என்பதையும் புதிய விவசாயத் தொழில்நுட்பங்களை அறியவும் அவற்றைத் திறம்பட செயல்படுத்தும் வழிகளைக் கூறும் விதமாகவே இத்தொடர் பயணிக்கும் என்பதை வாசகருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். முந்தைய வாரத்தில் பல்வேறு வகையான நிலத்தைத் தயார் செய்யும்போது பயன்படுத்த வேண்டிய உழவுக் கருவிகளையும் சாகுபடிக்குத் தகுந்தவாறு அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் அறிந்தோம்.
இவ்வாறு நிலத்தைத் தயார்படுத்தப் பயன்படுத்தப்படும் உழவுக் கருவிகளை வாடகைக்கு எடுத்தும் நிரந்தர முதலீடாகப் பண்ணைக் கருவிகளைச் சொந்தமாக்கிக் கொண்டு பயன்படுத்தவும் முடியும். நிலத்தைச் சாகுபடிக்குத் தயார்செய்யத் தேவைப்படும் டிராக்டர், கொழுக்கலப்பை, சட்டிக்கலப்பை, நஞ்சையில் தொழி கலக்கும் கருவி, நிலச்சமன்படுத்தும் கருவிகள் ஆகியவற்றை வாங்கும்போது (அல்லது) வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்த அந்தந்தப் பகுதிகளில் உள்ள வசதிகளைப் பார்ப்போம்.
தற்போது தமிழக அரசு வேளாண்மைத் துறை மூலம் ஆண்டிராய்டு அலைபேசியில் ‘உழவன்’ என்ற செயலியை (App) உருவாக்கியுள்ளது. அதில் வேளாண்மைக்குப் பயன்படும். பல்வேறு இடுபொருட்கள், மானியத் திட்டங்கள் பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ளும் பொருட்டு வெளியிட்டுள்ளது. அச்செயலியில் பல்வேறு வழிகாட்டிகளில் ஒன்று வேளாண் இயந்திர வாடகை மையம் என்ற தலைப்பில் வாடகைக்குப் பண்ணை இயந்திரங்கள் கிடைக்குமிடம், அலைபேசி எண், அந்தந்தப் பகுதியில் வாடகை மையம் எவ்விடத்தில் அமைந்துள்ளது ஆகிய விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. உழவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி உழவுக்கருவிகளை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தலாம். இவை தவிர பண்ணை உழவுக் கருவிகளைச் சொந்தமாக வாங்கிப் பயன்படுத்த. அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் தனி நபருக்கான வேளாண் கருவிகளுக்கான நிதிஉதவியும் (மானியமும்) விவசாயிகள் நலனுக்காகச் செயல்படுத்தப்படுகிறது.
சொந்த நிலம் வைத்துள்ளவர்கள் தங்கள் பகுதி வேளாண்மை பொறியியல் உதவிச் செயற்பொறியாளர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கணினி மூலம், தங்களது விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்து தேவைப்படும் பண்ணைக் கருவிகளை அரசு மானியத்தில் பெற முடியும். முன்னுாிமையின் அடிப்படையில் அரசு அங்கீகாிக்கப்பட்ட முன்னணி நிறுவனங்களில் கருவிகளை வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
விவசாயிகள் அதனடிப்படையில் தேவைப்படும் உழவுக் கருவிகளை வாங்கி உரிய ரொக்கப் பட்டியல்களை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் செலுத்தினால் பின்பு அரசு வழங்கும் மானியத்தொகை உழவர்களின் வங்கிக் கணக்குக்கே வரவு வைக்கப்படும். புதிய உழவுக் கருவிகள் வாங்கும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.
வேளாண்மைத் துறையின் மூலம் கூட்டுப் பண்ணையம் என்ற திட்டத்தின்கீழ் கிராம அளவில் இருபது விவசாயிகள் கொண்ட விவசாய ஆர்வலர் குழுக்களை உருவாக்கி பின் ஐந்து விவசாய ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து விவசாய உற்பத்திக் குழுக்களை ஏற்படுத்தி அக்குழுவின் மூலம் சிறு-குறு விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு ரூ.5 லட்சம் நிதியுதவி பண்ணை இயந்திரங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம். சிறு-குறு விவசாயிகள் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் விவசாய ஆர்வலர் குழுக்களில் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம் உழவுக்கருவிகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு. இதனை சிறு-குறு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com,
selipm@yahoo.com