உயிர் மூச்சு

தக்காளி விலை உயர்வு

செய்திப்பிரிவு

வெங்காயத்தைத் தொடர்ந்து இப்போது தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளது. தக்காளி விளைச்சல் நடக்கும் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்யும் கன மழையால் தக்காளி வரத்துக் குறைந்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. நாட்டில் அதிகமாக கொல்கத்தா சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ. 60க்கு விற்கப்படுகிறது. மும்பையில் ஒரு கிலோ ரூ. 54க்கும் சென்னையில் கிலோ ரூ.40க்கும் விற்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதேவேளை முந்தைய வாரங்களில் உச்சத்திலிருந்த வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியிருக்கிறது.

அரசு இயற்கை வேளாண் சந்தை

வேலூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், ‘நம் சந்தை’ என்ற பெயரில் இயற்கை வேளாண் பொருட்களுக்கான சந்தை திறக்கப்பட்டுள்ளது. வேலூர் அண்ணா சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்தை செயல்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும் பொதுமக்களுக்கு நஞ்சு இல்லாத இயற்கை வேளாண் பொருட்கள் கிடைக்கச் செய்வதும் இந்தச் சந்தையின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 சதவீத மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், 2019-ம் ஆண்டு வடகிழக்குப் பருவ மழைக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை 60 சதவீத சராசரி மழையளவு பெய்ய வாய்ப்பிருக்கிறது என அந்த மையம் தன் அறிக்கையில் கூறியுள்ளது.

ஆடு வளர்ப்பு இலவசப் பயிற்சி

ஈரோடு, வீரப்பன்சத்திரம் சாலையில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் வரும் 14, 15 ஆகிய இரு நாட்கள் ஆடு வளர்ப்பு குறித்துப் பயிற்சி நடக்கவுள்ளது. முதல் நாளில், ஆடு வளர்ப்பு குறித்து விளக்கம், கேள்வி பதில், நோய் தாக்கம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்படும். இரண்டாம் நாள், ஆடு வளர்ப்புப் பண்ணைக்கு அழைத்து சென்று, நேரடியான விளக்கங்கள் வழங்கப்படும். அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கலாம். தொடர்புக்கு: 0424 2291482.தொகுப்பு: விபின்

SCROLL FOR NEXT