ச.ச.சிவசங்கர்
வேளாண்மையை மையமாகக் கொண்டே கிராமப்புறப் பொருளாதாரம் இயங்கிவருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கிராமப்புறப் பொருளாதாரத்தின் பங்கு அளப்பரியது. தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலைக்குக் கிராமங்களின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள சுணக்கமும் ஒரு காரணம். 2016-17-ல் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.2 சதவீதமாக இருந்தது. பின்னர், 7.2, 6.8 என்று தொடர் சரிவைச் சந்தித்தது.
2019 ஜூன் வரையிலான காலாண்டில் இது 5 சதவீதமாகச் சரிந்தது. இதில் வேளாண் துறையின் வளர்ச்சியின் பங்கு 2 சதவீதம் என்கிறது ரிசர்வ் வங்கியின் அறிக்கை. பணமதிப்பிழப்பின் மூலம் நகர்ப் புறத்தை மையமாகக் கொண்ட ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, சிறு தொழில்கள் போன்ற துறைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. நகர்ப்புறங்களில் வேலைசெய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் கிராமப்புறத்திலிருந்து இடம்பெயர்ந்துவந்தவர்கள். இந்தக் காரணத்தால் கிராமங்களும் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டன.
நகர்ப்புறத்துக்குப் பயணம்
வேளாண்மையில் உற்பத்திச் செலவையும் அதில் கிடைக்கும் லாபத்தையும் கணக்குப் பார்த்தால் உழவருக்கு எதுவுமே மிஞ்சாது என்பதே நிலைமை. குத்தகை, உரம், பூச்சிக்கொல்லி, ஆள் கூலி, ஆகிய அடிப்படைச் செலவுகளே அதிகமாகிவிட்டதால் வேளாண்மை நஷ்டத்தையே சந்தித்துவந்தது. மேலும், வெள்ளப் பாதிப்பு, பயிர் கருகுதல் போன்றவற்றால் ஏற்படும் நஷ்டமும் அதிகம். அதற்காக வாங்கப்படும் கடனை அடைப்பதற்குள்ளேயே பல இழப்புகள் நிகழ்ந்துவிடுகின்றன. இந்தச் சிரமங்களைத் தாங்கிக்கொள்ள இயலாததாலேயே பெரும்பாலான உழவர்கள் மாற்று வேலைகளைத் தேடிச் சென்றனர்; பலர் நகர்ப்புறங்களில் கட்டிட வேலைக்கு வந்தனர். இப்படியாக நகர்ந்ததால் வேளாண் தொழிலுக்குத் தேவையான ஆட்களும் குறைந்தனர்.
பெரும்பாலானோர் நகர்ப்புறத்தை நோக்கி இடம்பெயர்ந்து வந்ததால் நகர்ப்புறத்தில் மக்கள் நெருக்கம் அதிகமானது. தமிழ்நாட்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் வட இந்திய மாநிலத்தைச் சேர்ந்த பலர் வேளாண் தொழிலாளர்கள். இப்படியாக நாடு முழுவதிலும் மாற்று வேலைகளில் வேளாண் தொழிலாளர்கள் பரவியிருக்கிறார்கள்.
நகர்ப்புறத்தில் கிடைத்துவரும் வருமானம் கிராமத்தில் புழங்கிக்கொண்டிருந்தது என்பதை மறந்துவிடலாகாது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி-க்குப் பின் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பால் கிராமப் பொருளாதாரம் கடுமையாகப் பாதித்தது. “கிராமப்புறங்களில் உழவர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட பிரதம மந்திரி-கிசான் திட்டத்தில் ரூ.14.6 கோடி உழவர்களுக்கு என்று இலக்கு நிர்ணயித்தனர். ஆனால், இதுவரை ரூ.6.89 கோடி உழவர்களே பயனடைந்துள்ளனர்.
இந்த நிதியாண்டில் (செப்டம்பர் 13 வரை) மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.45,903 கோடி. ஆனால், அதில் 73 சதவீதமான ரூ.33,420 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்ட செலவுத்தொகை ரூ.3,38,085 கோடி. ஒதுக்கப்பட்ட தொகையில் 31.8- சதவீதம் மட்டுமே ஜூலைவரை செலவு செய்யப்பட்டுள்ளது கடந்த ஆண்டில் இந்தச் செலவு சதவீதம் 37.1ஆக இருந்துள்ளது' என்கிறது ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை. கிராமப்புறத்தில் உற்பத்திசெய்யப்படும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதால்தான் வேளாண் தொழில் நசியத் தொடங்கியது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட கடன் வாங்கத் தொடங்கினார்கள்.
இந்தக் கடன் பிரச்சினையானது. அதை உழவர்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடன் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாததாலேயே 2018 நவம்பரில் உழவர்கள் ஒன்றுகூடி டெல்லியில் பெரிய அளவிலான பேரணியை நடத்தினர். வேளாண் தொழில் தங்களைக் கைவிட்ட காரணத்தால் பணமதிப்பிழப்பின்போது, உழவர்கள் பலரும் நூறு நாள் வேலை திட்டத்தில் இணைந்தனர். நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் கிடைத்த வருமானமும் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம். அதில் கிடைத்த குறைந்த வருமானம் உணவு, கல்வி போன்ற அடிப்படைச் செலவுகளிலேயே காலியாகிவிடுகிறது.
கிராமப்புறத்தின் பொருளாதாரம் வேளாண்மையை மட்டும் சார்ந்ததில்லை. டீக்கடை, உணவகம், சைக்கிள் கடை, செல்போன், எலெக்ட்ரிக் கடை போன்ற சிறு தொழில்கள் அனைத்தையும் உள்ளடக்கி இயங்குவதே கிராமப் பொருளாதாரம். வேளாண்மை அதன் சார்புடைய தொழில்கள் எனப் பல அடுக்குகளில் ஏற்பட்டுள்ள தொய்வு உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள் என அனைவரையுமே பாதித்துள்ளது.
கிராமப் பொருளாதாரம் உணர்வுரீதியிலான ஒருங்கிணைந்த தன்மை கொண்டது. ஒரு பக்கத்தில் அடி பட்டால் அதைச் சார்ந்த அனைத்துப் பிரிவுகளும் அதனால் பாதிக்கப்படும். பணப்புழக்கம் குறைந்து பொருட்களின் நுகர்வு இல்லாத வேலையில் தனியார் நிறுவனங்களும் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்.
“நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கிராமப்புறங்களை வலுப்படுத்த வேண்டும். 5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது புதிய கணக்கு முறையில் போடப்பட்டது. பழைய முறையில் பார்த்தால் 2 சதவீதம்தான் மிஞ்சும். வேளாண்மையின் நிலை மோசமாக இருக்கிறது. இந்த நிலையை அரசுதான் மாற்ற வேண்டும் பொதுத் துறைகளில் முதலீடு செய்து, அதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும்.
முதலில் மக்களிடம் பணம் போய்ச் சேர வேண்டும், அப்போதுதான் நுகர்வு அதிகரிக்கும்” என்கிறார் சென்னை பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம். பொருளாதார மந்த மந்தநிலையை ஒழுங்குபடுத்த கிராமப்புறங்களில் முறையாக முதலீடுகள் செய்வதே பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை மேற்கண்ட அறிக்கைகள் உணர்த்துகின்றன.