வி. விக்ரம்குமார்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள அழகிய பிலிகிரிரங்கன் மலைப் பகுதிக்குச் சென்றிருந்தோம். மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை இரண்டும் இணையும் சிறப்புமிக்க பகுதி அது.
உயிர்ச்சூழல் அதிகமுள்ள பிலிகிரி மலைச் சரணாலயத்தில் பயணம் மேற்கொண்டோம். ஆங்காங்கே தேங்கியிருந்த நீர்நிலைகளில் யானைகளைத் தேடினோம், கிடைக்கவில்லை. புலிகளின் உறுமலோ உருவமோ செவிகளிலும் கண்களிலும் படவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணிநேர சஃபாரியின் முடிவில் பெரிய அளவில் உயிரினங்களைப் பார்க்காததால் ஏமாற்றமே மிஞ்சியது.
திடீர் வருகை
‘விடுதிக்குத் திரும்பிச் செல்லவிருக்கும் 20 கி.மீ. பாதையும் அடர்ந்த காடுதான்… யானைகள் உங்கள் பார்வையில் தென்பட நிறைய வாய்ப்பு உண்டு. நம்பிக்கை இழக்காதீர்கள்’ என்றார் வழிகாட்டி. மெதுவாய் நகரத் தொடங்கியது எங்கள் வாகனம். பல இடங்களில் யானைகளின் சாணம் சாலையோடு அழுத்தமாகப் பதிந்துகிடந்தது. ஆனால், யானைகளைக் காண முடியவில்லை.
பார்வையையும் மனத்தையும் உற்சாகமடையச் செய்யும் நிகழ்வு ஒன்று நடக்கப் போகிறது என்றது உள்ளுணர்வு. சாலையோரத்தில் யானையின் முதுகுபோல் ஏதோ கண்ணில் பட்டது. அருகில் சென்று பார்த்தபோது, செடிகளால் சூழப்பட்ட பாறை அது என்பது புரிந்தது. ஆச்சரியம் அளிக்கும் வகையில், அப்பாறையின் மீது அழகிய சிறு பறவை ஒன்று, நடைப்பயிற்சி செய்வதைப் போல் வலமும் இடமும் நடந்துக் கொண்டே இருந்தது. உற்று நோக்கியபோது, அது ‘செந்தலைப் பூங்குருவி’ (Orange headed thrush) என்று தெளிவாகத் தெரிந்தது.
இளம் குழந்தையின் நடையில் மயங்கும் ரசிகனைப் போல், செந்தலைப் பூங்குருவியின் நடையில் மயங்கிப்போனேன்! பாறையின் முனைக்கு வருவது… கீழே குதிப்பதைப் போல் பாவனை காட்டுவது, பின் திரும்பிப் பாறையின் மறுமுனைக்குச் செல்வது என அதன் சேட்டைகளை அமைதியாக ரசித்துக்கொண்டே இருந்தேன். அங்கும் இங்கும் பறவை நடந்ததைப் பார்த்தபோது, அதுவும் யானையின் வருகைக்காகக் காத்திருக்கிறதோ என்று தோன்றியது.
பதிந்த பிம்பம்
சாம்பல் நிற முதுகு… கருவிழி வழிந்தோடுவதைப் போன்ற ஒரு கருங்கோடும், வெள்ளை நிற முகத்தில் ஒரு கருங்கோடும் பறவைக்கு அழகூட்டியது. தலையின் மேற்பகுதி, வயிற்றுப் பகுதியில் ஆரஞ்சு நிறம் அப்பியிருந்தது. தடித்த அலகு… ரசித்து ஒளிப்படம் எடுத்த பிறகும், அப்பறவை அந்த இடத்தை விட்டு நகர்வதாகத் தெரியவில்லை.
‘யானைகள் இருக்கும் அப்பகுதியில் நீண்ட நேரம் நிற்பது நல்லதல்ல… கிளம்பலாம்’ என்று வழிகாட்டி சொல்ல, அப்பறவையைப் பிரிய மனமில்லாமல் என் உடல் மட்டும் நகர்ந்தது. செந்தலைப் பூங்குருவியின் பிம்பம் கண்களில் பதிந்திருக்க, யானையின் பிம்பம் கிடைக்குமா என்று மீண்டும் கண்கள் தேடத் தொடங்கின!
கட்டுரையாளர்,
சித்த மருத்துவர் - இயற்கை ஆர்வலர்,
தொடர்புக்கு:
drvikramkumar86@gmail.com