உயிர் மூச்சு

பசுமை எனது வாழ்வுரிமை 01: மரத்தின் மகத்துவம் சொன்ன மகத்தான தியாகம்

செய்திப்பிரிவு

கு.வி.கிருஷ்ணமூர்த்தி

வெளிமான்களின் உணவுத் தேவைக்காக தங்கள் வயலில் விளைந்த பயிர்களை மேய மகிழ்ச்சியுடன் அனுமதிப்பவர்கள், வெளிமான் குட்டிகளை தங்கள் குழந்தைப் போல் பாவித்து இளம் தாய்மார்களே தாய்ப்பால் ஊட்டுவதை அனுமதிப்பவர்கள் விஷ்னோய் இன மக்கள். இப்படிச் சொன்னால் நம்மில் பலருக்கு அவர்கள் யார், எங்கிருக்கிறார்கள் என்ற கேள்விகள் எழலாம். ராஜஸ்தானில் வெளிமானைக் கொன்றதற்காக, பிரபல இந்தி நடிகர் சல்மான் கானுக்குத் தண்டனை பெற்றுத் தந்தவர்கள்தான் இவர்கள் என்று சொன்னால், சட்டென்று புரியும்!

சூழலியல் மதம்

விஷ்னோய் (பிஷ்னோய்) என்பது ஒரு சமய மரபு. குரு மகராஜ் ஜம்போஜி (ஜம்பேஷ்வர்) என்பவரால் 1485-ம்
ஆண்டில் ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் இந்த மதப் பிரிவு தோன்றியது. இந்த மதப் பிரிவின் 29 நெறிமுறைகளில் பெரும்பாலானவை சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்துபவை. பசுமையான மரங்களை வெட்டுவதையும் பறவைகளையும் விலங்குகளையும் கொல்வதையும், ஜம்போஜி தடை செய்தார்.

அதேபோல மரங்களுக்கும் விலங்குகளுக்கும் ஊறு விளைவிக்கும் செயல்கள் விஷ்னோய் மதப் பிரிவில் தடை செய்யப்பட்டவை. கேஜ்ரி மரத்தையும் வெளிமானையும் விஷ்னோய்கள், புனிதமாகக் கருதுகிறார்கள். விறகு, கால்நடைத் தீவனம் போன்றவற்றைக் கொடுப்பதோடு மண் வளத்தையும் கேஜ்ரி மரம் பாதுகாக்கிறது.

ராஜஸ்தானில் 1868-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின்போது ஆயிரக்கணக்கான விஷ்னோய் மக்களின் வாழ்க்கையைக் காப்பாற்ற கேஜ்ரி மரம் உதவியது. வன்னி என்றழைக்கப்படும் இந்த மரம், தமிழகத்திலும் புனிதமாகக் கருதப்படுகிறது. சில கோயில்களில் தல மரமாகத் திகழ்கிறது.
இந்த மரத்துடன் நெருங்கிய தொடர்புடைய ‘சீமைக் கருவேலம்’, தமிழகத்தில் பலரால் வெறுக்கப்பட்ட ஒரு தாவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூளைக்கு விறகுக்காக…

1730-ம் ஆண்டில் ஜோத்பூரின் மகாராஜாவான அபய் சிங், ஒரு புதிய அரண்மனையைக் கட்ட முடிவுசெய்து, அதற்கான செங்கற்களை உற்பத்தி செய்வதற்கு சூளைக்குத் தேவையான விறகுகளை வெட்ட முனைந்தார்.
விஷ்னோய்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்த கேஜ்ரி மரங்களை வெட்ட ஜோத்பூரிலிருந்து 26 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்த ஜேக்னாட் என்ற கிராமப்புறக் காட்டுக்கு அபய் சிங்கின் படை வீரர்கள் வந்தனர். படை வீரர்கள் கேஜ்ரி மரங்களை வெட்ட முயன்றபோது, விஷ்னோய்கள் கடுமையாக எதிர்த்தனர்.

மரங்கள் வெட்டப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அம்ரிதா தேவி என்ற பெண்ணும் அவருடைய மகளும் அந்த மரங்களைப் பாதுகாக்க அவற்றைக் கட்டித் தழுவிக் கொண்டனர். ‘வெட்டப்படும் ஒரு தலையை விட, வெட்டப்படும் ஒரு மரம் அதிக மதிப்பு உடையது’ என்று முழங்கினார் அம்ரிதா தேவி. அதைப் பார்த்த மற்ற கிராம மக்களும் அதையே செய்தனர். அவர்களில் பலரது தலைகள் வெட்டப்பட்டன.

அவர்களுடைய மதப் பிரிவு நெறிமுறைப்படி, ஒருவருடைய உயிரே போனாலும், பச்சை மரத்தை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியான உணர்வுதான் இந்தப் பெரும் தியாகத்துக்குக் காரணம். இப்படித் தியாக உணர்வு மிகுந்த 363 விஷ்னோய்கள் அன்றைக்குக் கொல்லப்பட்டனர்.

நினைவைப் போற்றுதல்

விஷ்னோய் மக்களின் உயிர்த் தியாகம் பற்றி அறிந்தவுடன், ஜோத்பூர் அரசர் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். விஷ்னோய் பகுதியை, பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியாக அறிவித்தார். மரங்களுக்கும் விலங்குகளுக்கும் ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளுக்கும் தடைவிதித்தார். இந்தச் சட்டம் இன்றுவரை அந்தப் பகுதியில் நடைமுறையில் உள்ளது.

மரங்களைக் காக்கக் கொல்லப்பட்ட 363 விஷ்னோய்களின் சடலங்கள் ஒட்டுமொத்தமாகப் புதைக்கப்பட்டன. அந்த இடத்தில் நான்கு தூண்கள் கொண்ட ஒரு கல்லறை கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 13 அன்று (கடந்த வாரம்) விஷ்னோய் மக்கள் இந்தக் கல்லறை அருகே திரண்டு தங்கள் முன்னோருடைய தியாகத்தைப் போற்றி வணங்குகின்றனர்.

விஷ்னோய்களின் இந்தப் பெரும் தியாகம், கடந்த நூற்றாண்டில் இமயமலை அடிவாரத்தில் மரங்களை வெட்டுவதற்கு எதிராக உருவான ‘சிப்கோ’ (கட்டித்தழுவுதல்) இயக்கத்துக்கு உந்துவிசையாகச் செயல்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கு.வி.கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழக தாவரவியல் துறையின் முன்னாள் பேராசிரியர். துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். ‘தமிழரும் தாவரமும்’, ‘அறிவியலில் பெண்கள்’ போன்ற நூல்களை எழுதியுள்ளார். ஏற்கெனவே ‘உயிர் மூச்சு’ பகுதியில் ‘கிழக்கில் விரியும் கிளைகள்’ எனும் பிரபல தொடரை எழுதியவர்.

(தொடரும்)
கட்டுரையாளர்,
ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

SCROLL FOR NEXT