- வி. விக்ரம்குமார்
எழில் கொஞ்சும் குடகு மலை! கேரள-கர்நாடக எல்லையாக இருக்கும் ‘குட்டா’ பகுதியில் முகாமிட்டிருந்தோம். முந்தைய நாள் பொழிந்திருந்த சாரல் மழை, குடகு மலை முழுவதையும் ஈரப்படுத்தி, மண்வாசனையோடு மூலிகை வாசனையையும் விரவவிட்டிருந்தது.
காலை நேரத்துப் பனிமூட்டம் குடகு மலையையும் தேகத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது. அருகில் இருந்த புகழ்பெற்ற ‘இருப்பு’ அருவியில் குளித்து இயற்கையோடு உறவாடலாம் என்று திட்டமிட்டு நடக்கத் தொடங்கினோம் அருவி விழுந்து வந்த ஓடைத் தண்ணீர் பாறைகளில் மோதி இசையைப் பிரசவித்துக்கொண்டிருந்தது.
அற்புத நிறக்கலவை
ஓடையில் கால் நனைத்தேன். ஓடைக்கு மேலிருந்த கிளை ஒன்றில் சற்று மங்கலான காபி நிற முதுகுடன் அழகிய பறவை ஒன்று அமர்ந்துகொண்டிருந்தது. மாறுபட்ட ஓசை கேட்க அந்தப் பறவை சட்டெனப் பறந்து மறைந்தது. பறவையைக் காணும் ஆவலில் ஓடைப் பகுதியையே சுற்றிச்சுற்றி வந்தேன்.
பச்சை நிறத் திரைக்குமுன் ஒரு தீப்பந்தம் ஜொலித்துக்கொண்டிருப்பதைப் போல, பச்சைநிற இலைத் தொகுப்புக்கு முன்பு, தீ நிறத்திலான ‘மலபார் தீக்காக்கை’ (Malabar trogon) அமைதியாய் ஜொலித்துக்கொண்டிருந்தது. அப்படி ஒரு நிறக் கலவை. தீக்காக்கை பறக்கும்போது, தீப்பந்தம் அங்கும் இங்கும் நகர்வதைப் போன்றதொரு மாயத் தோற்றத்தை தந்தது. அவ்வளவாக ஓசை எழுப்பாத அப்பறவை, அவ்வப்போது இடத்தை மட்டும் மாற்றிக்கொண்டே இருந்தது. பறக்கும்போது மட்டும் ஒலி எழுப்பிவிட்டு கிளைகளில் அமர்ந்தவுடன் சாந்தமாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.
இணையற்ற பரிசு
தீக்காக்கையின் முன் பகுதி முழுவதும் நல்ல சிவந்த நிறம். தலை, கழுத்து, அலகு முழுவதும் கரு வண்ணம். கழுத்துப் பகுதியையும் வயிற்றுப் பகுதியையும் பிரிக்கும் வெள்ளை நிறத்திலான எல்லைக்கோடு. மங்கிய காபி நிற முதுகுக்கு, கறுப்பு நிற எல்லைக்கோடு. தீக்காக்கையின் செயல்பாடுகளை ரசித்து முடித்த பின்பு, அதன் அழகுக்கு ‘இருப்பு அருவி’ ஈடுகொடுக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
இருப்பு அருவியின் நீர் என் மேல் விழுந்து கண்களை மூடிய போதெல்லாம், தீக்காக்கையின் உருவம் தோன்றிக்கொண்டே இருந்தது. இருப்பு அருவியின் ஓசை காதுகளுக்கு உணவளித்தது. தீக்காக்கையின் நிறம் கண்களுக்கு விருந்தளித்தது. குடகின் மண்வாசனை நாசிக்கு விருந்தளித்தது. இதைவிட மிகப் பெரிய பரிசை இயற்கையிடமிருந்து எதிர்பார்ப்பது தவறு!
கட்டுரையாளர், சித்த மருத்துவர் - இயற்கை ஆர்வலர்,
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com