உயிர் மூச்சு

பால் தரும் ஏ.டி.எம்.

செய்திப்பிரிவு

விபின்

ஒடிசாவின் கஞ்சம் மாவட்ட நிர்வாகம் பால் ஏ.டி.எம். (Any Time Milk) இயந்திரத்தை நிறுவியுள்ளது. எளிதாகப் பால் விநியோகிக்கும் முயற்சியாக இந்த ஏ.டி.எம். இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் ஞெகிழிப் பைகள், குப்பிகள் ஆகியவற்றின் பயன்பாடும் குறையும்.

2014-ல் இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல் இந்தியாவின் முதல் பால் ஏ.டி.எம். இயந்திரத்தை குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் நிறுவியது. ஆனால், அது ஞெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட பாலைத்தான் ஏ.டி.எம்.களில் சேகரித்து விற்பனை செய்தது. 150 பைகள் வைக்கும் விதத்தில் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஒரு பை, 300 மில்லி மீட்டர் அளவு பாலைக் கொண்டது. ஆனால் ஒடிசாவின் இந்த ஏ.டி.எம்., நேரடியாகப் பாலைத் தரக்கூடியது. வாடிக்கையாளர்கள் பாலுக்கான பணத்தை நேரடியாக இயந்திரத்தில் செலுத்தினால் அதற்குரிய பால் குழாய் வழி வரும். வாடிக்கையாளர்கள் தாங்கள் கொண்டுவரும் பாத்திரத்தில் அதைப் பிடித்துக்கொள்ளலாம். அல்லாதபட்சத்தில் ரூ.1 கொடுத்து அங்கேயே பிளாஸ்டிக் குடுவைகளை வாங்கிப் பாலைப் பிடித்துக் கொள்ளலாம்.

இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள டாடா ஸ்டீல் நிறுவனம், இங்குள்ள கஞ்சம் கஜபதி கூட்டுறவுப் பால்பண்ணை ஆகியவற்றுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் இந்த பால் ஏ.டி.எம். இயந்திரத்தை அமைத்துள்ளது. இதற்காக 7,200 பால் பண்ணைகளை மாவட்ட நிர்வாகம், கூட்டுறவுச் சங்கம் வழி அணுகியுள்ளது. இந்தப் பண்ணைகள் மூலம் ஏடிஎமுக்கான பால் தங்குதடையின்றிக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் 500 லிட்டர் சேமிப்புத் திறன் கொண்டது.

அதிகபட்சமாக 1 லிட்டர் பால் வரை இந்த ஏ.டி.எம். மூலம் வாங்க முடியும். 1 லிட்டர் பால் ரூ.40. குறைந்தபட்சமாக 250 மில்லி லிட்டர் வரை வாங்க முடியும். இது ரூ.10க்கு விற்கப்படுகிறது. இந்த ஏ.டி.எம்., தொழிலாளர்கள், மாணவர்கள் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த ஏடிஎமுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடந்து இன்னும் இரண்டு இடங்களில் ஏ.டி.எம்.மை நிறுவ மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

SCROLL FOR NEXT