இலங்கை-இந்திய வர்த்தக ஒப்பந்தம் 1998-ன்படி இலங்கையிலிருந்து மிளகு 2,500 டன் வரை வரி இன்றி ஏற்றுமதி செய்துகொள்ள முடியும். அதற்குக் கூடுதலாக ஏற்றுமதிசெய்தால் 8 சதவீதம்தான் வரி. இதனால் இலங்கையிலிருந்து 25,000 டன் அளவுக்கு மிளகு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால் உள்ளூர் மிளகு உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துவருகிறார்கள். மேலும் இலங்கை மிளகு என இறக்குமதிசெய்யப்படுவது வியட்நாம் மிளகு என இந்திய மிளகு, மசாலா வர்த்தகக் கேரள ஒருங்கிணைப்பாளர் கிஷோர் சாம்ஜி குற்றம் சாட்டியுள்ளார். வியட்நாமிலிருந்து நேரடியாக இந்தியாவில் இறக்குமதிசெய்யும்போது 54 சதவீதம் ஏற்றுமதி வரி செலுத்த வேண்டும் என்பதால் இலங்கை வழியாக இது ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இலங்கை மிளகு சராசரி விலைக்கும் குறைவாக விற்கப்படுவதால் இங்கு உற்பத்திசெய்யப்படும் மிளகுக்குக் குறைந்தபட்சம் விலையும் கிடைக்காத நிலை உள்ளது. இதைக் கட்டுப்படுத்த இறக்குமதி மிளகுக்கான குறைந்தபட்ச விலை ரூ.500ஆக இருக்க வேண்டும் என மத்திய அரசு நிர்ணயித்தது. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என கிஷோர் சாம்ஜி தெரிவித்துள்ளார்.
கரும்பு மானியத்துக்கு எதிராகப் புகார்
இந்தியா கரும்பு உழவர்களுக்கு அளவுக்கு அதிகமாக மானியம் அளிப்பதாக ஆஸ்திரேலியா, பிரேசில், கவுதமாலா ஆகிய நாடுகள் உலக வர்த்தக அமைப்பில் (WTOO) புகார் அளித்துள்ளன. உலக வர்த்தக அமைப்பு நிர்ணயத்துள்ளபடி 10 சதவீதம்தான் கரும்புக்கு மானியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் பல நிலைகளில் கரும்பு உழவர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் மானியம் வழங்குவதாக ஆஸ்திரேலியா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தப் புகாரை விசாரிக்கத் தனிக் குழு அமைக்க இந்த மூன்று நாடுகளும் கடந்த உலக வர்த்தக அமைப்பின் தீர்வுக் கூட்டத்தில் வலியுறுத்தின. ஆனால் அந்தக் கோரிக்கைக்கு இந்தியா தடை பெற்றுவிட்டது. உலக வர்த்தக அமைப்பின் சட்ட வரையறுகளுக்கு உடபட்டுத்தான் மானியம் வழங்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இம்மாதம் நடக்கவுள்ள கூட்டத்தில் மீண்டும் அதே கோரிக்கை முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை கோரிக்கையைத் தடைசெய்யும் அதிகாரம் இந்தியாவுக்கு இல்லை. அதனால் இந்தப் புகார் குறித்து விசாரிக்க மூன்று தனிக் குழுக்கள் அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
வேளாண் பல்கலைக்கழகப் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடைக்குப் பின்சார் தொழில்நுட்பத் துறையின் சார்பில் ‘மதிப்பூட்டப்பட்ட நெல்லிக்காய் உணவு தயாரித்தல்’ பயிற்சி நடத்தப்படவுள்ளது. இந்த மாதம் 21, 22 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் ரூ.1,500. பயிற்சி குறித்த கூடுதல் விவபரங்களுக்குத் துறைத் தலைவரை 0422 6611268 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
குன்னூரில் 82% தேயிலை விற்பனை
குன்னூர்த் தேயிலை இருப்பில் 82 சதவீதம் விற்கப்பட்டுவிட்டதாக குன்னூர்த் தேயிலை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. சராசரி விலை கிலோவுக்கு ரூ.80.78. 32 ஏலங்களின் வழி இந்த விற்பனை நடந்துள்ளது.
அனுமதியில்லாப் பருத்தி அமோக விளைச்சல்
மகாராஷ்டிர மாநிலத்தில் உழவர்கள் தற்கொலைக்குப் பேர்போன யவத்மால் மாவட்டத்தில் அனுமதியில்லா எச்.டி.பி.டி. (HTBT) பருத்தி பரவலாக மகசூல் ஆகியுள்ளது. மகாராஷ்டிர அரசு இது குறித்துக் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. யாவத்மால் மாவட்டத்தில் 4.5 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. இதில் 20 சதவீதம் எச்.டி.பி.டி. பருத்தி விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த 4.5 லட்சம் ஹெக்டேருக்கு 11.25 லட்சம் பை பருத்தி விதை தேவைப்படுகிறது. ஆனால் அந்த அளவு விதை கிடைப்பதில்லை.
அதற்குப் பதிலாக அனுமதியில்லா இந்தப் பருத்தி விதையை உழவர்கள் விதைக்கிறார்கள். இதற்குச் சில உழவர் அமைப்புத் தலைவர்கள் ஆதரவாக இருக்கின்றனர். இந்த எச்.டி.பி.டி. விதையைப் பயன்படுத்தினால் இளஞ்சிவப்புக் காய்ப்புழு தாக்குதல் இருக்காது என உழவர்கள் நம்புகிறார்கள். அதனால் இந்த அனுமதியில்லா விதையை விளைவிக்க ஆர்வமாக இருக்கிறார்கள் என மகாராஷ்டிர வேளாண்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: விபின்