வி.விக்ரம்குமார்
தொலைவிலிருந்து பார்த்தபோது, 200 தாமரை மலர்கள் நீரிலிருந்து மேலெழுந்து உருமாற்றம் அடைந்துவிட்டனவோ என்றுதான் எண்ணத் தோன்றியது. பக்கத்தில் சென்று பார்த்தபோதுதான் அவை அழகு மிகுந்த பூநாரைகள் என்பது தெரியவந்தது.
தமிழக-ஆந்திரம் சந்திக்கும் கடற்கரையோரம் உள்ள பழவேற்காடு ஏரியில் நீர்ப்பறவைகள் கவிபாடிய மாலை வேளை அது. அந்த மாலையை மேலும் அழகாக்க, நீர்ப்பரப்பின் மீது சாரலைத் தூவ மேகக் கூட்டங்கள் ஆயத்தமாகிக்கொண்டிருந்தன! பூநாரைகளைக் காண விசைப் படகில் புறப்பட்டோம். இருபது நிமிடப் பயணத்துக்குப் பிறகு ஏறக்குறைய 200 பூநாரைகள் தூரத்தில் தென்பட, மனம் பரவசமடையத் தொடங்கியது. பூநாரைகளில் சில, நீல வானத்துக்கு வண்ணம் தூவ ஆவலாகப் பறந்துக்கொண்டிருந்தன. சில பூநாரைகள் உப்பு நீரில் தனித்தும், சில குழுவாகவும் கழுத்தை வளைத்து சேற்றில் துழாவி இரை தேடிக் கொண்டிருந்தன.
கண்ணாமூச்சி ஆட்டம்
ஆழம் குறைந்த பகுதி என்பதால், பறவைக் கூட்டத்துக்கு அருகில் படகை செலுத்த முடியவில்லை. வேறு திசைகளை நோக்கித் திரும்பியது படகு. ஒரு பகுதியில் பூநாரைகள் நெருக்கமாக நின்று மெளன மொழியைப் பரிமாறிக்கொண்டிருந்தன. படகின் சத்தத்தைக் கேட்டதும் மெளனத்தைக் கலைத்து எங்களுக்கு எதிர்திசையில் வேகமாகக் கால்களைப் பதித்து நடக்கத் தொடங்கின. இப்படியே பல முறை பூநாரைகள் கண்ணாமூச்சி காட்டின.
‘படகைச் சற்று தொலைவிலேயே நிறுத்திவிட்டு, சத்தம் எழுப்பாமல் நீரில் நடந்து சென்றால் பூநாரைகளுக்கு வெகு அருகில் செல்லலாம்: ஆழம் குறைந்த பகுதிதான். நானும் துணைக்கு வருகிறேன்’ என்றார் படகோட்டி. அடுத்த நொடியே நீருக்குள் தன்னிச்சையாக இறங்கின எனது கால்கள்.
திரும்பக் கிடைக்காத மாலை
ஓசை எழுப்பாமல் மெதுமெதுவாக அடியெடுத்து வைத்துப் பூநாரைக் கூட்டத்துக்கு அருகில் சென்றுவிட்டோம். தண்ணீரில் ஏற்பட்ட சலசலப்பால் எங்கள் வருகையை அறிந்துகொண்ட அவை, மீண்டும் வேகமாக நடக்கத் தொடங்கின. நானும் நடையின் வேகத்தைக் கூட்டினேன். எவ்வளவு அருகில் செல்ல முடியுமோ அவ்வளவு அருகில் சென்று பூநாரைகளின் அழகைத் தரிசித்தேன்.
என்னைவிட மெதுவாகவே நடந்துக்கொண்டிருந்த பூநாரைகளுக்கு ஏதோ தோன்றியிருக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக ஒரு புறம் திரும்பின. அடுத்த நொடியே சத்தமெழுப்பிக் கொண்டு வானில் சிறகடிக்கத் தொடங்கின.
கேள்விக் குறி வடிவத்தில் உடல் அமைப்பு. இளஞ்சிவப்பு சிறகமைப்பு. சிலையென நிற்கும் கச்சிதம். ரோஜாப் பூ நிற அலகின் முனையில் இயற்கை வரைந்த கருங்கோடு. பறந்து செல்லும்போது இறக்கைகளுக்கு அடியில் தெரிந்த கருவண்ணம். இதுவோர் அற்புதப் பறவை.
என்னைச் சுற்றி நான்கு திசைகளிலும் வண்ணம் பூசிய பூநாரைகள் மட்டுமே இருந்தன! அதைவிட அழகான ஒரு மாலைப் பொழுது இனி எப்போதும் எனக்குக் கிடைக்கப் போவதில்லை!
கட்டுரையாளர்,
சித்த மருத்துவர் - இயற்கை ஆர்வலர்,
தொடர்புக்கு:drvikramkumar86@gmail.com