கிருஷ்ணன் சுப்ரமணியன்
உலகில் பல நாடுகளில் ஞெகிழிப் பொருட்களுக்கு முற்று முழுதான தடையில்லை. சில நாடுகளில் சில மைக்ரான் அளவுக்கு மேல் இருக்கும் ஞெகிழிப் பைகளுக்குத் தடை இல்லை; சில நாடுகளில் ஞெகிழிப் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது; சில நாடுகளில் மறுசுழற்சியை மையப்படுத்தி சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
பல நாடுகளில் மக்கும் ஞெகிழி, மக்காத ஞெகிழி எது என்ற குழப்பத்தில் அனைத்து ஞெகிழியும் தடை செய்யப்பட்ட பின்னரும் பயன்பாட்டில் உள்ளன; பல நாடுகளிலும் அரசு ஆவணங்களில் மட்டுமே ஞெகிழிக்குத் தடை உள்ளது, நடைமுறையில் இல்லை.
காலம் கடந்துவிட்டது
உலகமெங்கும் சூழலியலைப் பாதுகாக்க கூக்குரல் எழுந்துகொண்டிருக்கிறது. மாணவர்கள் பள்ளியைத் துறந்து சாலைகளிலும், நாடாளுமன்றங்கள் முன்பாகவும், ஐ.நா. அவையிலும் சூழலியலைக் காக்க முறையிட்டுவருகின்றனர். உலகளாவிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மக்கள், அரசு என்று அனைவரும் பேரழிவிலிருந்து காக்கவல்ல மிக முக்கியமான விஷயமாக ஞெகிழித் தடையைப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஞெகிழியால் ஏற்படும் சூழலியல் சிக்கல்களுக்கு மனித இனம் இன்றைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், மனித இனத்துக்கான முற்றுப்புள்ளி வைக்கப்படும் ஆபத்து எதிர்காலத்தில் வரப்போவதில்லை. அந்த ஆபத்து ஏற்கெனவே நம்மைத் தாக்கிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர வேண்டிய தருணம் இது.
துணியா, நான் வோவனா?
பல கோயில்களிலும் கடைகளிலும் ஞெகிழிப் பைகளுக்குப் பதிலாக
non-woven எனும் துணியைப் போன்று தோன்றக்கூடிய செயற்கை இழைப் பைகளைப் பயன்படுத்துகிறார்கள். இவை மக்கக்கூடியவை அல்ல, இவையும் ஒரு வகை ஞெகிழியால் செய்யப்பட்டவையே. துணியாக இருந்தால், அது நூலால் நெய்யப்பட்டு இருக்கும். சந்தேகம் இருந்தால் நான்-வோவன் (non-woven) பைகளை வெட்டிப் பாருங்கள், நூல் நூலாகப் பிரியாது. எரித்துப் பாருங்கள், ஞெகிழிபோல் எரியும். நான் வோவன் பையும் ஆபத்தான ஒன்றே.
கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர், தொடர்புக்கு: krishnan@theyellowbag.org