அனந்து
இயற்கை வேளாண் விளைபொருள் விற்பனையில் போலிகளைக் கட்டுப்படுத்தவே முடியாதா, சான்றிதழ் முறையும் தேவையில்லையா?
இயற்கை வேளாண் விளைபொருள் விற்பனையில் போலிகளைக் கட்டுப்படுத்த முடியும், முடிய வேண்டும். பசுமை அங்காடிகள் குறித்த கட்டுப்பாடுகளும், அதற்கு அரசு கையாளும் வழிமுறைகளும் நுகர்வோரின் நம்பகத்தன்மையைப் பெறும்வரை, இந்தச் சந்தையை முறைப்படுத்த நுகர்வோரே சில முயற்சிகளை முன்னெடுக்கலாம்.
ஒவ்வொரு மாவட்டம் அல்லது தாலுகா அளவில், அரசே இதற்கான பரிசோதனை ஆய்வகங்களை அமைக்க வேண்டும். ‘இயற்கை வேளாண் அங்காடி’ ஒன்றில், நுகர்வோர் ஒரு பொருளை வாங்கினால், அந்தப் பொருளை அரசு ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்று, ‘இது இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்தானா, வேதிப்பொருள் கலப்பு சிறிதும் இல்லையா?’ என்பதைப் பரிசோதிக்க வேண்டும். அப்போது போலிப் பசுமை அங்காடிகள் எது, போலி இயற்கை உழவர்கள் யார் என்பதெல்லாம் தெரிந்துவிடும்.
அந்த ஆய்வகம் அளிக்கும் சான்றிதழை வைத்து, அந்தப் போலிகள் மீது அரசால் நடிவடிக்கை எடுக்கவும் முடியும். இந்த முறையில் ஊழல் நடைபெறுவது பேரளவு தடுக்கப்படும். ஏனென்றால், ஒரு பொருளை யார் வேண்டுமானாலும் எடுத்துச் சென்று ஆய்வு செய்ய முடியும். இந்தக் கண்கணிப்பு முறையும் நிரந்தரத் தீர்வு அல்ல, தற்காலிகத் தீர்வுதான். நிரந்தரத் தீர்வு மேலே கூறியதுபோல், நேரடியாக உழவர்களிடம் வாங்கி விற்பனை செய்யும் சிறு அங்காடிகளே. அந்த அங்காடிகளும் ஒவ்வொரு பொருளும் வந்த வழியைக் கண்டறியக்கூடிய தன்மை, வெளிப்படைத்தன்மையுடன் இருப்பவையாக இருக்க வேண்டும்.
கட்டுரையாளர்,
இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு:
organicananthoo@gmail.com