பேரழிவும் பெருநகரமும்
சு. அருண் பிரசாத்
சென்னை கோமளீசுவரன் பேட்டையில் 1791-ம் ஆண்டில் வசித்த வள்ளல் பச்சையப்பர், தினமும் கூவம் ஆற்றில் குளித்துவிட்டு கந்தக்கோட்டத்திலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
நியூயார்க்கில் பிரம்மஞான சபையைத் தொடங்கிய பிளாவட்ஸ்கியும் ஆல்காட்டும் 1882-ல் சென்னைக்கு வந்தார்கள். தெளிந்த, சுத்தமான நீரோடிய அடையாற்றின் கரையில் 27 ஏக்கர் தோட்டத்தை 600 பிரிட்டன் பவுண்டுக்கு வாங்கினார்கள்; அனைத்து மதக் கோயில்களையும் உள்ளடக்கி, இன்றைக்கு உலகம் முழுவதும் கிளை பரப்பியுள்ள பிரம்மஞான சபையின் சர்வதேசத் தலைமையகமாக அந்தத் தோட்டம் இன்றைக்குத் திகழ்கிறது.
கவிஞர் பாரதிதாசன், ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி, பொதுவுடமை இயக்கத் தலைவர் ப. ஜீவானந்தம், குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, சாமி. சிதம்பரனார் உள்ளிட்ட நண்பர்கள் குழு, 1934-ல் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பக்கிங்காம் கால்வாய் வழியாகப் படகிலேயே பயணிப்பது என்று முடிவெடுத்தது. மாலை தொடங்கிய பயணம் நிலவொளியில் இரவெல்லாம் நீடித்து, மறுநாள் காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தை அவர்கள்
அடைந்ததாக, ‘மாவலிபுரச் செலவு’ என்ற கவிதையில் பாரதிதாசன் பதிவுசெய்திருக்கிறார்.
இப்படிச் சென்னையின் வரலாற்றைப் புரட்டும்போது, சென்னையின் புவியியல் வளம் குறித்த ஒவ்வொரு பதிவும் வியப்பைத் தருகின்றன. ‘வளர்ச்சி' என்ற ஒற்றைத் தாரகமந்திரம் நகரெங்கும் பரவி, எல்லாம் கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டு வறட்சி, வெள்ளம் என்ற இரட்டைப் பிரச்சினைகளால் சிக்கித் திணறிக்கொண்டிருக்கிறது இன்றைய தலைநகர் சென்னை.
நகரமயமாக்கமும் மக்கள்தொகையும்
சென்னை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முதன்முறையாக 1871-ல் நடத்தப்பட்டபோது, நகரின் பரப்பளவு 69 சதுர கி.மீ., மக்கள்தொகை 3.97 லட்சம். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நகரம் வேகமாகத் தொழில்மயமானதன் விளைவால், 1951-ல் மக்கள்தொகை 14.16 லட்சமாக உயர்ந்தது. 1981-ல் நகர எல்லை விரிவுபடுத்தப்பட்டபோது, 1871-ம் ஆண்டைவிட இரண்டு மடங்கு மட்டுமே பரப்பளவு அதிகரித்திருந்தது. ஆனால், மக்கள்தொகையோ எட்டு மடங்கு உயர்ந்து, 33 லட்சத்தைத் தொட்டிருந்தது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள்தொகை 88.7 லட்சம். மாநகர எல்லைக்குள் 47 லட்சம் பேர் வசிக்கின்றனர். அத்துடன் நகரின் எல்லையும் விரிவடைந்துகொண்டே போகிறது.
மரபு நீராதாரங்கள்
சென்னையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வடகிழக்குப் பருவமழை எப்போதும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஒரு முறை கொட்டித் தீர்க்கும்; மறுமுறை எட்டிக்கூடப் பார்க்காது. மழைநீரை ஆதாரமாகக்கொண்டு உழவு செய்யும் பண்பாட்டில் வந்த நம் முன்னோர், பயன்பாடுகளுக்குத் தகுந்ததுபோலவும், நீரிருப்பை மேம்படுத்தும் வகையிலும் நீர்நிலைகளை அமைத்திருந்தார்கள்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் சுமார் 6,000 ஏரிகள் இருந்திருக்கின்றன; அவற்றுள் சில 1,500 ஆண்டுகள் பழமையானவை. சென்னை மண்டலத்தில் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத 2774 ஏரிகள், அரசு சார்ந்த 974 ஏரிகள் என மொத்தம் 3,748 ஏரிகள் இருப்பதாகவும், மாநில ஏரிகளின் மொத்த சதவீதத்தில் இவை 35% என்று பொதுப்பணித் துறையின் புள்ளிவிவரம் கூறுகிறது.
சென்னை மாநகரின் இன்றைய கட்டுமீறிய வளர்ச்சிக்குக் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய விலை, அதன் நீராதாரங்கள்தாம். ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய சென்னையின் வரைபடத்தில் காணக்கிடைக்கும் நீர்நிலைகள், இருந்த சுவடே தெரியாமல் கபளீகரம் செய்யப்பட்டு இன்றைக்கு கான்கிரீட் கட்டிடங்களாக நிற்கின்றன. 1980-ல் 47 ச.கி.மீட்டராக இருந்த சென்னையின் கட்டிடப் பரப்பு, 2010-ல் 402 ச.கி.மீட்டராக அதிகரித்திருக்கிறது. இதே காலத்தில் சென்னை சதுப்புநிலப் பகுதிகளின் பரப்பு 186 ச.கி. மீட்டரிலிருந்து 71 ச.கி.மீட்டராகக் சுருக்கப்பட்டுவிட்டது.
ஆறுகள் தடத்தை மறப்பதில்லை
இப்படிப் புவியியல் வளம் திட்டமிட்டு நிர்மூலமாக்கப்பட்ட பின்னணியில்தான் 2015 பெருவெள்ளம் சென்னையை உலுக்கியது. எழுத்தாளர் க்ருபா ஜி எழுதி சமீபத்தில் வெளியான ‘ரிவர்ஸ் ரிமம்பர்: #சென்னைரெய்ன்ஸ் அண்ட் த ஷாக்கிங் ட்ரூத் ஆஃப் எ மேன்மேடு ஃபிளட்' என்ற புத்தகம் 2015 சென்னை வெள்ளத்துக்கான காரணங்களை ஆழமாக ஆராய்ந்துள்ளது. வெள்ளத்துக்கான காரணங்களைத் தேடும் இப்புத்தகம், பதில்களைவிடக் கேள்விகளையே அதிகமாகக் கொண்டிருக்கிறது!
களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுடனான நேர்காணல்கள்; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள்; அரசுசாரா நிறுவனங்களின் அறிக்கைகள் என மூன்றாண்டு காலத் தீவிர ஆய்வுக்குப் பின்னர் இந்தப் புத்தகத்தை க்ருபா எழுதியிருக்கிறார். தன்னுடைய பெற்றோரின் வீடு வெள்ளத்தில் சிக்கியதும் வெள்ளத்தின்போது மாநில அரசின் அலட்சியமான செயல்பாடுகளும், ஏன் இப்படி ஒரு பேரழிவு நடந்தது? என்பது குறித்த அடிப்படைக் கேள்வியை அவருக்குள் எழுப்பின. அதன் விளைவாகவே இப்புத்தகம் உருவானதாகக் கூறுகிறார் க்ருபா.
செம்பரம்பாக்கம் கோளாறு
வெள்ளம் ஏற்பட்ட நாளில் தொடங்கும் புத்தகம் சென்னை வெள்ளத்தின் சகல பரிமாணங்களையும் ஆய்வுசெய்து, வெள்ளத்தைப் பற்றிய விரிவானதொரு வரைபடத்தைத் தருகிறது. மிக மோசமான நகரக் கட்டமைப்பு, மிக மோசமான பேரிடர் மேலாண்மை ஆகிய இரண்டு அம்சங்களே சென்னை வெள்ளத்துக்கான முதன்மைக் காரணங்கள்; அரசு நிர்வாகக் கோளாறால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் சென்னை வெள்ளத்துக்கு உடனடிக் காரணம் என ஆதாரங்களுடன் இப்புத்தகம் நிறுவியுள்ளது.
கனமழை பொழியும் என்ற வானிலை முன்னெச்சரிக்கையைக் கருத்தில்கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நீர் முன்னதாகவே திறந்துவிடப்பட்டிருந்தால், அடையாற்றில் ஓடிய நீரின் அளவு கணிசமாகக் குறைந்து பாதிப்பின் அளவும் குறைந்திருக்கக்கூடும். வெள்ளம் ஏற்பட்ட நாளில் ஏரிக்கு நீர் வரத்து நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டிருந்த நேரத்தில், ஏரியிலிருந்து நீரைத் திறந்துவிடுவது தொடர்பான அரசு உத்தரவு பொறியாளர்களுக்குக் கிடைத்தபோது காலம் கடந்திருந்தது. இப்படி ஒரு அசாதாரணமான சூழ்நிலை ஏற்படும்போது மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைக் கொண்ட அரசு, அலட்சியமாகச் செயல்பட்டதன் விளைவால் கட்டுமீறிய வெள்ளம் சென்னையைச் சூறையாடியது.
2004-ல் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு, பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 இயற்றப்பட்டதன் விளைவாக, மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஆய்வு மேற்கொள்ள வேண்டிய இந்த ஆணையம், இதுவரை 2013 மே 28 அன்று ஒரே ஒருமுறை மட்டுமே கூடியிருப்பதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசு அலட்சியத்தின் விலை
நீண்ட தாமதத்துக்குப் பிறகு 2018 ஜூலை 9 அன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சென்னை வெள்ளம் தொடர்பான தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை, 2ஜி அலைக்கற்றை அறிக்கையைப் போல எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று க்ருபா குறிப்பிட்டுள்ளார். 171 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை சென்னை வெள்ளத்துக்கான பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் நிர்வகிக்கப்பட்ட முறையை இந்த அறிக்கை கடுமையாகச் சாடியிருக்கிறது.
நீர் எளிதாக வெளியேறுவதற்கான எந்த முன்னேற்பாட்டையும் செய்யாமல் தவிர்த்ததே, வெள்ளம் ஏற்பட்டதற்கான முதன்மைக் காரணம். தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடின்மையின் விளைவாக உருவான மனித அலட்சியத்தால் (man-made) ஏற்பட்ட வெள்ளம் இது என்று தணிக்கையாளர் அறிக்கை கூறுகிறது. ஏரி, குளம், ஆறு போன்ற பல்வேறு தன்மைகளைக் கொண்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து, அவற்றின் வழித்தடத்தைத் திரித்து, நகரம் அராஜகமாக மேலெழும்போது, வெள்ளம் போன்ற நிகழ்வுகளின் மூலம் இயற்கை தன் இருப்பை மீண்டும் நிலைநாட்டிக்கொள்கிறது. 2015 சென்னை வெள்ளத்தின் சகல பரிமாணங்களையும் ஆய்வு செய்திருக்கும் இப்புத்தகம், மறுக்க முடியாத தரவுகளின் அடிப்படையில் நம் ஒவ்வொருவரிடமும் தார்மிகக் கேள்விகளை எழுப்புகிறது.
இந்தக் கேள்விகள் முன்பே நம் மனதிலும், நம் கூட்டுமனதாகச் செயல்பட வேண்டிய அரசு நிர்வாகத்திலும் எதிரொலித்திருந்தால், சென்னை வெள்ளம் என்பது பொய்யாய், வெறும் கதையாக முடிந்திருக்கும். ஆனால், அது மருட்டும் உண்மையாக மாறி, சென்னையின் எதிர்காலம் குறித்து நாள்தோறும் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.
கட்டுரையாளர் தொடர்புக்கு:
arunprasath.s@hindutamil.co.in