கிருஷ்ணன் சுப்ரமணியன்
கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் 45 சதவீதத்துக்கும் அதிகமான காடுகள் உலகில் அழிக்கப்பட்டிருக்கின்றன. காடழிப்பாலும், புதைபடிவ எரிபொருளைப் (fossil fuels) பயன்படுத்துவதாலும் புவி வெப்பமடைதலை உலக நாடுகள் உணர்ந்தாலும்கூட, அதை சீரமைக்க வேண்டியதற்குத் தேவையான அரசியல் மனவலிமையை உலக நாடுகள் இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லை.
புதைபடிவ எரிபொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் முக்கியமான ஒரு பொருள் ஞெகிழி. மொத்த பிரச்சினையைத் தீர்க்க முடியாவிட்டாலும், ஞெகிழி போன்ற ஒற்றை பிரச்சினையையாவது முழுவதுமாக தீர்க்கும் மனவலிமையை உலக நாடுகள் விரைந்து உருவாக்கிகொள்வது நம் குழந்தைகளுக்கு நல்லது.
127 நாடுகளில் ஞெகிழித் தடை
ஞெகிழி ஒழிப்பில் பல நாடுகள் பெயரளவிலும், சில நாடுகள் முடிந்தவரையிலும், மிக சில நாடுகள் முழு தீர்க்கத்தோடும் செயல்பட்டுவருகின்றன. ஆனால், இன்னமும் உலகமெல்லாம் 50,000 கோடி ஞெகிழி பைகள் ஓராண்டுக்குத் தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தை மட்டுமே எடுத்துக்கொண்டாலும்கூட, ஞெகிழி பைகள் சாதாரணமாகக் கிடைக்கவே செய்கின்றன. தடை செய்யப்பட்டு ஆறு மாதம் ஆகியும், ஒவ்வொரு நகராட்சியும் கிலோகிலோவாக ஞெகிழிப் பைகளை பறிமுதல் செய்யப்பட்டது என்று சொல்வதில் இருந்தே ஞெகிழி உற்பத்தியும், பயன்பாடும் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை உறுதிசெய்கின்றன.
அத்துடன் 1.2 மெட்ரிக் டன் அளவுக்கு ஞெகிழி குப்பையை இந்திய நிறுவனங்கள் சத்தமின்றி இறக்குமதி செய்துள்ளன. சுமார் 25 உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஞெகிழிக் குப்பை இந்தியாவில் வேறு வடிவம் பெற்று மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களாக மாறலாம். ஆனால், நம் நாட்டிலோ ஞெகிழி குப்பைகள் அதிக அளவில் குப்பை கிடங்கில் எரிக்கப்படுகின்றன. உள்நாட்டு குப்பையே தரம் பிரிக்கப்பாடாமல் இருப்பதால், வெளிநாட்டு குப்பை அப்படியே அனுமதிக்கப்படுகிறது.
இதற்கிடையில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் அனைத்து ஞெகிழிப் பொருட்களையும் 2022ஆம் ஆண்டுக்குள் நிறுத்திவிடுவோம் என்று பிரதமர் மோடி வாக்களித்துள்ளார். ஏற்கெனவே, 18 மாநிலங்கள் முழு அல்லது சிறிதளவேனும் ஞெகிழிப் பொருட்களை தடை செய்துள்ளன. இன்னும் 11 மாநிலங்கள் தடை செய்தால் குறைந்தபட்சம் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியும் ஞெகிழிப் பொருட்கள் இந்தியா முழுவதும் தடைசெய்யப்பட்டுவிடும். ஆனால், இது முதல் படி மட்டுமே.
கட்டுரையாளர்,
துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org