உயிர் மூச்சு

புதிய பறவை 07: காற்றில் நீந்தும் துடுப்புகள்

செய்திப்பிரிவு

வி.விக்ரம்குமார் 

உயர்ந்த மரங்கள் நிறைந்திருந்த ஜலகம்பாறை பகுதி (வேலூர் மாவட்டம்). இலையுதிர்க் காலத்தை மெய்ப்பிக்கும் விதமாக இலைச் சருகுகள் மரங்களின் காலடியில் மெத்தைபோலக் குவிந்து உறங்கிக்கொண்டிருந்தன. செவிக்கெட்டும் தூரத்திலிருந்து ஒரு பறவையின் அழகிய பாடல் காற்றில் மிதந்துவந்தது. சருகுகளை மிதித்துக்கொண்டே நான் செல்ல, அதைக் கேட்ட துடுப்பு வால் கரிச்சான் (Racket tailed drongo) ஒரு மரத்திலிருந்து தனக்குச் சாதகமான மற்றொரு மரத்தில் சென்று அமர்ந்தது. சில நிமிடங்களில் மற்றொரு துடுப்பு வால் கரிச்சானும் சேர்ந்துகொண்டு ஜோடியாகக் காட்சியளித்தன.

ஒரு பறவைக்கு இரண்டு துடுப்புகள் இருக்க, மற்றொரு பறவைக்கோ ஒரு துடுப்பு அறுபட்டிருந்தது. எங்காவது சிக்கி ஒரு துடுப்பு கிழிந்திருக்க வேண்டும். துடுப்புகளை வீசிக்கொண்டு அடுத்தடுத்த மரத்துக்கு அவை பாய, நானும் பதுங்கிப் பதுங்கிப் பின்தொடர்ந்தேன். சிறிது நேரத்தில் அவை கூடு கட்டத் தொடங்கியிருந்த மர உச்சியைக் கண்டதும் மனதில் மகிழ்ச்சி பரவியது!

கோப்பை நார்க்கூடு

அழகிய கோப்பை வடிவ இல்லத்தின் அடிப்பகுதியை அவை கட்டத் தொடங்கியிருந்தன. மரத்தின் அருகிலேயே வேர்களை அழுத்திக்கொண்டிருந்த மிகப் பெரிய வட்டப் பாறை ஒன்று தென்பட்டது. சிறு சிறு பாறைகளின் மீது ஏறி, அந்தப் பெரும் வட்டப்பாறையில் கால்பதித்து கூட்டுக்கு நேராக லாகவமாக அமர்ந்துக்கொண்டேன். சிறிது நேரம் எங்கோ சென்றிருந்த பறவைகள், தங்களது அலகுகளில் நார்களை கவ்விக்கொண்டு திரும்ப வந்து அமர்ந்து, ’நார்க்கூடு’ கட்டும் தங்கள் மதிநுட்பத்தைக் காட்டத் தொடங்கின.

அடுத்த இரண்டு மணி நேரம் அப்பகுதியிலேயே முகாமிட்டேன். துடுப்பு வால்கள் இரண்டும் எங்கோ போவது, ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் கழித்து நார்களை கவ்விக்கொண்டு வந்து, தங்களது கோப்பை வடிவ இல்லத்தின் சுற்றளவைப் பெருக்குவதுமாக இருந்தன. கூடுகட்டிக்கொண்டே அவை வெளிப்படுத்திய காதல் மொழியின் ரகசியங்களை வைத்துப் பல கவிதைகளை வடிக்கலாம்! பறக்கும்போது மரக்கிளைகளில் துடுப்புகள் சிக்கிக்கொள்ள, அவற்றிலிருந்து மென்மையாய்த் துடுப்புகளை மீட்டெடுத்த கரிச்சானின் உத்தியை மெச்சிக்கொண்டே இருக்கலாம்.

பல குரல் மன்னன்

அந்த இரண்டு மணி நேரத்தில் அவை வெளிப்படுத்திய ஒலிகளைக் கேட்டு, பல குரல் மன்னர்களே தோற்றுப் போவார்கள்! ஐந்து குரல்களைக் கைபேசியில் பதிவு செய்துக்கொண்டேன். உற்று நோக்கியபோது, பல்வேறு ஒலிகளை எழுப்பத் தனது ஒவ்வொரு உடல் உறுப்பையும் துடுப்புவால் கரிச்சான் விதவிதமாகப் பயன்படுத்தியது பிரம்மிப்பை அளித்தது!. படகோட்டிகள் நீரில் துடுப்புகளைப் போடுகிறார்கள். கரிச்சான்கள் காற்றில் துடுப்பு போடுகின்றன.

கட்டுரையாளர், சித்த மருத்துவர் - இயற்கை ஆர்வலர்,
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

SCROLL FOR NEXT