வி.விக்ரம்குமார்
வால்பாறைப் பகுதியில் மழைக்காலத்தில் தண்ணீரை அசுர வேகத்தில் வெளித்தள்ளும் வெள்ளைமலை சுரங்கப் பகுதியைப் பார்வையிடச் சென்றிருந்தோம். சின்னக்கல்லாறு அணையிலிருந்து சோலையாறு அணைக்குத் தண்ணீரைக் கடத்தும் 8 கி.மீ. அளவிலான சுரங்கப்பாதை அது. ஏப்ரல் மாதம் என்பதால் சிற்றோடையாக மட்டும் காட்சியளித்தது. அந்தச் சிற்றோடை ஒருபுறம் சிறு அருவியாக வழிந்துகொண்டிருந்தது.
அருவி நீரைக் கைக்குவித்துப் பருகிக்கொண்டிருந்த வேளையில், சட்டென்று கவனத்தைப் பிடித்து இழுத்தது அருகே தவழ்ந்துவந்த இனிமையான சீழ்க்கை ஒலி. செவிப்பறைகளுக்கு இதமளித்த அந்த ஒலி வந்த திசை நோக்க, இரண்டு சீகாரப் பூங்குருவிகள் (Malabar whistling thrush) சிற்றோடையைத் தீண்டிச் செல்லும் பாறைகளின் மீதும் காற்றுக்குக் கீழே விழுந்த மரக்கிளைகளின் மீதும் தாவித் தாவி அன்பைப் பரிமாறிக்கொண்டிருந்தன.
கசிந்துவந்த பாடல்
சுரங்கப்பாதையின் பாசி படர்ந்த வெளிப்புற எல்லை வழியாக மெதுவாக நடந்து பறவை இருந்த ஒடைக்கு அருகில் சென்றேன். இரண்டு பறவைகளில் ஒன்று, கரையை ஒட்டிய பாறைகளுக்கு இடையிலிருந்த அதன் வீட்டுக்குள் (சிறு குகை) நுழைந்துகொண்டது. மற்றொரு பறவை குகைக்குள்ளே செல்வது, மீண்டும் வெளியே வருவது என உற்சாகமாக இருந்தது. அதன் குரல்நாணில் உருவான இனிய பாடல், அலகுகள் வழியாகக் கசிந்துவந்த நயத்தை ஆத்மார்த்தமாக ரசித்துக்கொண்டிருந்தேன். இப்படியே அதன் இசைக்குச் செவிமடுத்துக்கொண்டு, அதன் உடல் வண்ணங்களை உள்வாங்கிக்கொண்டு குகைக்கு அருகிலேயே தங்கிவிடலாமா என்றுகூடத் தோன்றியது.
விசிறிவால் அழகு
ஓர் இடத்திலிருந்து தாவி மறுபகுதியில் அது அமர்ந்ததைப் பார்த்தபோது, சிறிய விசிறிபோல் விரிந்திருந்த அதன் கருநீல வால் பகுதி கொள்ளை அழகுடன் பளிச்சிட்டது. மயில் தோகை மட்டுமல்ல, இந்தச் சிறுவிசிறி வாலும் இயற்கையின் அற்புதங்களில் ஒன்றுதான். அதன் கறுப்பு வயிற்றில் படிந்திருந்த நீல நிறப் பிறைப் பகுதி, அதன் அழகை மேலும் கூட்டியது. குகைக்குள்ளேயே ஒரு பறவை இருக்க, மற்றொன்று பறந்து சென்றது. அது இரை தேடிப் பறந்திருக்கலாம்.
அந்தப் பகுதியிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் செடிகளுக்கு இடையே மற்றொரு சீகாரப்பூங்குருவி தத்தி தத்தி நகர்வதை மீண்டும் ரசிக்கும் வாய்ப்பு அன்றே கிடைத்தது.
சீகாரப் பூங்குருவிக்கு ‘சீழ்க்கை வித்வான்' என்ற பட்டம் சாலப் பொருந்தும்!
கட்டுரையாளர்,
சித்த மருத்துவர் - இயற்கை ஆர்வலர்,
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com