ஜெய்
மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் உள்ள விளை நிலங்கள் வன விலங்குகளின் வேட்டைக்கு உள்ளாகிவருகின்றன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இம்மாதிரியான நிகழ்வுகள் நடப்பதுண்டு. இந்த வன விலங்குகளைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் உழவர்களாலும் மாநில அரசாலும் எடுக்கப்பட்டுவருகின்றன. அவற்றுள் ஒன்று மின்வேலி அமைப்பது என்ற அபாயகரமான நடவடிக்கை.
இதே போன்ற ஓர் அபாயகரமான நடவடிக்கையை 2016-ம் ஆண்டு கர்நாடக அரசு எடுத்தது. விளை நிலங்களுக்கு வரும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த முடிவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. வன விலங்குகள் என நினைத்து உழவர்கள் பலர் தவறுதலாகக் கொல்லப்பட்டனர். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் பலரால் கடுமையாக எதிர்க்கப்பட்ட இந்த நடவடிக்கையைக் குறித்த குறும்படம்தான் ‘பீட்ட’ (Bete).
கணேஷ் ஷெட்டி இயக்கியிருக்கும் இந்தப் படம் கர்நாடகத்தில் துளு நாட்டின் ஒரு கிராமத்தைக் கதைக் களமாகக் கொண்டது. ஏற்கெனவே இவர் இயக்கியிருந்த ‘பரோக்ஷ்’ (Paroksh) குறும்படமும் துளு நாட்டைப் பின்னணியாகக் கொண்டது. அந்தச் சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளைத் துருத்தாமல் சுட்டிக்காட்டியது அந்தப் படம். அந்தப் படமும் ஒரு அழகான கிராமத்து காலையில் அன்றாட நடவடிக்கைகளில் தொடங்கி இரவில் விறுவிறுப்பு அடையும். இந்தப் படமும் துளு நாட்டின் ஒரு இரவில் தொடங்குகிறது. பிராந்திய மொழியில் உழவுத் தொழில் குறித்த வானொலிச் செய்திகள் இருட்டின் பின்னணியில் கேட்கிறது. அந்தச் செய்தியைத் தொடர்ந்து அரசு நாட்டுத் துப்பாக்கிப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக வானொலியில் மறுநாள் நடைபெறவுள்ள விவாத நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வருகிறது.
பிறகு ஒரு அதிகாலை சுப்ரபாத சப்தத்துடன் தொடங்குகிறது. அடுப்பிலிருந்து சாம்பலை ஒரு தகரச் சட்டியில் எடுக்கிறார் அந்த வீட்டின் தலைவி. பஞ்சாரத்தால் மூடப்பட்டிருந்த வாத்துகளை விடுவிக்கிறார். சாம்பல் கொண்டு பாத்திரங்களைத் துலக்குகிறார். அந்த வீட்டின் தலைவரான உழவர் எழுந்து வாய்க்கால் தண்ணீரை மிதித்தபடி தோட்டக் காட்டுக்குள் நுழைகிறார். அவரது வளர்ப்பு நாய் பின்தொடர்கிறது. வரப்பில் கை நீட்டி நிற்கும் மரத்தின் இலைகளைப் பறித்து மடக்கிப் பல் துலக்கிறார்.
ஓடையில் காலைக் கடன்கள் முடிகின்றன. வீட்டுக்குள் தோசை, கல்லில் ஊற்றப்படுகிறது. மாடுகளுக்கும் கோழிகளுக்கும் தீவனம் வைக்கிறார் தலைவர். இப்படியாக ஒரு சம்சாரியின் அன்றாடத்தைத் துல்லியமான காட்சிகளாகத் தொகுத்துள்ளார் இயக்குநர். மேலும், இயற்கையைச் சார்ந்திருக்கும் கிராமத்து வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் இந்தக் காட்சிகள் சித்தரிக்கின்றன. படத்தின் ஒலிப்பதிவு, இந்தக் காட்சிகளை விசேஷமானதாக ஆக்குகிறது. கிராமத்தின் எண்ணற்ற பூச்சிகளின் சப்தங்களைப் பின்னணியாகத் தொகுத்துள்ளார் இதன் ஒலிப்பதிவாளர் சவிதா நம்ரத்.
தூரத்தில் விட்டுவிட்டு ஒலிக்கும் செம்போத்தின் சப்தமும் கவனத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. வசனமற்ற இந்தப் படத்தில் இந்தப் பின்னணிதான் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தத் தோட்டத்திலுள்ள மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள்போல் அந்த வீட்டிலிருக்கும் தலைவனையும் தலைவியையும் இயற்கையின் ஒரு அங்கமாகப் படம் சிருஷ்டித்துள்ளது.
அவர்களுக்குள் பேச்சற்ற ஒரு புரிந்துணர்வு செயல்படுவதையும் படம் சொல்லியிருக்கிறது. மாலையில் மாடுகளுக்குத் தீவனம் இடும் நேரத்தில் தொடக்கக் காட்சியில் அறிவிக்கப்பட்ட விவாதம் வானொலியில் நடப்பது பின்னணியாக வருகிறது. இரவு கவிகிறது. அந்த நாளின் இறுதிக் கட்டத்தில் உழவர், டார்ச் லைட்டுடன் தூரத்தில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் காணப் புறப்படுகிறார். திரும்பி வரும்போது இடைவெளியில் டார்ச் பழுதாகிவிடுகிறது. வன விலங்குகள் நடமாடும் அந்தப் பாதையில் அவர் வீடு திரும்பாத கதையைச் சொல்லிப் படம் நிறைவடைகிறது.
குறும்படத்தைக் காண :