உயிர் மூச்சு

தற்கொலைகளை அதிகரிக்கும் பி.டி. பருத்தி

வித்யா வெங்கட்

அதிகரிக்கும் வயல்வெளிகளும், விளைச்சலும் விவசாயிகளின் தற்கொலைகளைக் குறைக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக தேசிய அளவில் பி.டி. பருத்தி விளையும் இடங்களில் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன.

புதிய ஆய்வு

பூச்சிகளைத் தடுப்பதாகக் கூறப்படும் மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தியை மானாவாரி விவசாயத்தில் பயன்படுத்துவது இந்திய விவசாயிகளுக்கு ஆபத்தானதாக மாறியிருக்கிறது. கலிபோர்னியாவைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் சமீபத்தில் Environmental Sciences Europe இதழில், இது தொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கின்றனர்.

மானாவாரி விவசாயிகளின் வருடாந்திர தற்கொலை விகிதத்துக்கும் பி.டி. பருத்தி பயன்பாடு அதிகரித்திருப்பதற்கும் நேரடித் தொடர்பிருக்கிறது. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் வளம்குன்றாத விவசாய அமைப்புகளின் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ பால் கூட்டியேரஸ், லூகி பான்டி, ஹான்ஸ் ஆர். ஹெரன், ஜோஹன் பாம்கார்ட்னர், பீட்டர் ஈ. கென்மோர் ஆகியோரின் ஆய்வு முடிவுகள் இதைத் தெரிவிக்கின்றன.

பலியாகும் விவசாயிகள்

ஆந்திரம், குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் 2001 - 2010 வரை நடந்த வருடாந்திர தற்கொலை தொடர்பான தகவல்களை இந்த வேளாண் விஞ்ஞானிகள் மறுஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இதில் மொத்தத் தற்கொலை எண்ணிக்கையான 5,49,414 பேரில் 86,607 தற்கொலைகள் விவசாயிகளுடையவை. இதில் 87 சதவீதம் விவசாயிகள் 30 வயதிலிருந்து 44 வயது வரம்புக்கு உட்பட்ட ஆண்கள்.

இந்த ஆய்வு இரண்டு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. முதல் காரணம், இந்தியாவில் பருத்தி விளைச்சலுக்கு மானாவாரி நிலமே பொதுவாகவே பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவது, 2002-லிருந்து 2010 வரை, மொத்தப் பருத்தி சாகுபடியில் பி.டி கலப்பினப் பருத்தியின் பயன்பாடு 86 சதவீதம் அதிகரித்திருந்தது. விவசாய-உயிரிதொழில்நுட்பப் பயன்பாட்டைக் கையகப்படுத்தும் சர்வதேசச் சேவை மையம் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறது.

பொய்த்த பி.டி. பருத்தி

"நீர்ப்பாசனப் பகுதிகளில் பி.டி. பருத்தி பயிரிடுவது சிக்கனமானதாகத் தெரியலாம். ஆனால், குறைந்த மகசூல் தரும் மானாவாரி நிலத்தில் பி.டி விதைகள், பூச்சிக்கொல்லிகளின் விலை போன்றவை விவசாயிகளைத் திவாலாக்கிவிடுகின்றன. அத்துடன் கையிருப்பில் உள்ள விதைகளைப் பயன்படுத்த இயலாமை, அத்தியாவசியமான வேளாண் தகவல்கள் இல்லாமல் இருப்பது போன்றவைதான் உயிரி தொழில்நுட்பம், பூச்சிக்கொல்லிகளிடம் பருத்தி விவசாயிகளைச் சிக்கவைக்கிறது" என்கிறது வேளாண் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கை.

நஷ்டத்தைத் தவிர்க்க பி.டி. பருத்தியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அதனால் பி.டி. பருத்தி பயன்பாட்டை உற்சாகப்படுத்தும் பொதுவான போக்குக்குச் சவால்விடுவதாய் அமைந்திருக்கிறது இந்தப் புதிய ஆய்வு முடிவு.

செம்புழு தாக்குதல்

வசந்தக் காலத்தில் பருத்தியைத் தாக்கும் முக்கியமான பூச்சியான ‘பருத்திக்காய்ச் செம்புழு’(pink bollworm) மானாவாரி பருத்தியைத் தாக்குவதில்லை. அத்துடன் பி.டி. அல்லாத, சாதாரண மானாவாரி பருத்தியில் பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. இது பி.டி. பருத்தியின் தேவையையும், பூச்சிக்கொல்லிகளின் இடைஞ்சல்களையும் குறைக்கிறது. அதனால், இதற்கு மாற்றாகக் குறுகிய பருவத்தில் விளையும் அடர்த்தியான பருத்தியைப் பயன்படுத்தும்படி இந்த ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இது விளைச்சலை அதிகரிப்பதுடன், நீர் பாசனம், மானாவாரி நிலத்துக்கான இடுபொருள் செலவுகளையும் குறைக்கும்.

பெர்க்லி பல்கலைக்கழகத்தின் இந்தப் புதிய ஆய்வு முடிவுகளை வல்லுநர்கள் அக்கறையுடன் கவனிக்க வேண்டும் என்கின்றனர். மத்திய முன்னாள் சுற்றுச்சூழல், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், "உலகிலேயே பி.டி. பருத்தியை அதிகம் பயிரிடும் இரண்டாவது நாடு இந்தியா. அதனால், இந்த ஆய்வு முடிவுகளை ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. மரபணு மாற்றப்படும் பயிர்கள் இந்திய விவசாயத்தின் வளம்குன்றா வளர்ச்சி சமநிலையை எப்படிப் பாதிக்கும் என்பது பற்றி தீவிரமாக விவாதிப்பதற்கான சூழலை இந்த ஆய்வு முடிவு உருவாக்கியிருக்கிறது", என்கிறார்.

அதேபோல, பி.டி. பருத்தி தரும் நன்மைகள் விவாதத்துக்கு உரியதாகவே இருக்கின்றன என்கிறார் வேளாண் நிபுணர் எம்.எஸ். சுவாமிநாதன். பி.டி. பருத்தி அதிக விளைச்சலைக் கொடுக்கிறது என்று சிலர் கூறினாலும், வேறு சிலர் பி.டி. பருத்தி விளைச்சலைக் கேள்விக்கு உட்படுத்துகின்றனர். "என்றாலும் அதிக விளைச்சல் தரும் பயிர் வகைகளைப் பயன்படுத்துவதை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால், பருத்தி பயிரிடுபவர்களில் பெரும்பாலோர் குறுநில விவசாயிகளாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு லாபம் கிடைக்க அதிக விளைச்சல் தேவைப்படுகிறது" என்கிறார் சுவாமிநாதன்.

© தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: என். கௌரி

SCROLL FOR NEXT