உயிர் மூச்சு

தேனீக்களுக்கு ஒரு பாடல்

பாப்லோ நெருதா

மொய்க்கும் தேனீக்கூட்டமே

உலகின் மென்மைக்கும் மென்மையான

சிவப்பு, நீலம் மஞ்சளின் உள்ளே

புகுந்தும் புறப்பட்டும்

தொழிலுக்காகப்

பூவிதழின் அடுக்கினுள்

கவிழ்ந்து விழுந்து, மீண்டு,

பொன்மயமான உடையும்,

கணக்கில்லா மஞ்சள் காலணிகளும்.

கச்சிதமான இடை, கரும்பட்டைக் கோடிட்ட கீழ்வயிறு

துருதுருக்கும் சின்னஞ்சிறிய தலை

புத்தம்புதிய நீராலான இறக்கைகள் ---

மணங்கமழும் ஜன்னல்கள் எல்லாம் நுழைந்து,

பட்டுக் கதவுகளைத் திறந்து,

இணையில்லா மணம் வீசும் காதலின் மணவறையில் நுழைந்து,

வைரப் பொட்டாகப் பனித்துளியைக் கண்டெடுக்கிறீர்கள்.

சென்றுவரும் வீடெல்லாம்

தேன் என்னும் புதிரை, வளத்தை, கட்டமுதை

அள்ளிச்செல்கிறீர்கள்

அது அடர் மணம், ஓடையாய் ஒளிரும் திரவம்.

கூடிவாழும் கூடத்துக்கு மீண்டுவந்து

அதன் கைப்பிடிச் சுவரில்

பூவின், விண்வெளிப் பாய்ச்சலின்

விளைச்சலான அந்த

கந்தர்வ ரசத்தை, மணநாளின் ரகசியச் சூரியனை,

தேனை, சேமித்து வைத்து

மொய்க்கும் தேனீக்களே,

ஒற்றுமையின் புனித முகடே,

ரீங்கரிக்கும் கல்விக்கூடமே.

ரீங்கார ஆரவாரத்தில்

பூவின் மதுவைப் பக்குவமாக்க

அமுதத் துளிகளைப் பரிமாறி

பசுமை படர்ந்த

ஒசர்னோ எரிமலையின் ஏகாந்த வெளியில்

வெய்யில்கால பிற்பகலின் கண்ணயர்வு--

உச்சி சூரியன்

ஈட்டிக் கிரணங்களைப் பனிமீது பாய்ச்ச,

எரிமலைகள் ஒளிர

கடலாக நிலம் விரிகிறது.

நீல வெளியின் ஏதோவொரு நடுக்கம்.

கனன்றுவரும் கோடையின் இதயம்,

தேனினிக்கும் இதயங்கள் பெருகின

ரீங்கரிக்கும் தேனீ

நொறுங்கிச் சடசடக்கும் தேன்கூடு

பொன்வண்ணம், சிறகின் படபடப்பு!

தேனீக்களே,

களங்கமில்லா உழைப்பாளிகளே, ஊன்பெருக்காத கூன் உடல்

தொழிலாளர்களே ஒளிவீசும் தொழிலாள வர்க்கமே!

தன்னையே மாய்த்துவிடும் கொடுக்கோடு கொட்டிச் சாடும்

குறையில்லா தீரப் போர்ப்படையே

இரைச்சலிடுங்கள், புவியின் கொடைகளின்மேல்.

பொன்வண்ணக் குடும்பமே,

காற்றின் மந்தையே

பூக்களின் தீயை,

மகரந்தக் கேசரத்தின் தவிப்பை,

நாசியைத் துளைக்கும் நறுமண நூலை,

நாட்களை இணைத்துத் தைக்கும் நூலை,

அந்தத் தேனை விசிறித் தெளியுங்கள்

வெம்மையான கண்டங்களைக் கடந்து

மேலை வானின் தொலைதூரத் தீவுகளுக்கும்.

ஆம்,

பசுமைச் சிலைகளை

தேன் மெழுகு உருவாக்கட்டும்!

எண்ணில்லா நாவில் தேன் சிதறட்டும்,

தேன்கூடாய் ஆகட்டும் அந்தப் பெருங்கடல்

பூமியே பூக்களாலான கோபுரமாய், அங்கியாய் மாறட்டும்!

உலகமே ஓர் அருவியாகட்டும்

எரிகல்லின் ஒளிரும் வாலாக

தேன்கூடுகளின் முடிவில்லாச் செல்வமாய் ஆகட்டுமே!

- பாப்லோ நெருதா (1904 1973), சிலே நாட்டைச் சேர்ந்த பெருங்கவிஞர்,

இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1971-ல் பெற்றவர்.

தமிழில்: தங்க. ஜெயராமன்

SCROLL FOR NEXT