அணுசக்திக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்தவரும் பிரபல இதழாளருமான பிரஃபுல் பித்வாய் (66), நெதர்லாந்து சென்றிருந்தபோது கடந்த புதன்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஆசியாவிலேயே அதிக பத்திரிகைகளில் பத்திக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்ட இதழாளராக பிரஃபுல் பித்வாய்தான் இருப்பார். அவுட்லுக், ஃபிரண்ட்லைன், ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற இந்திய இதழ்களிலும் ‘தி கார்டியன்’ போன்ற வெளிநாட்டு இதழ்களிலும் அவரது கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் மூத்த ஆசிரியராக பிரஃபுல் பித்வாய் இருந்திருக்கிறார்.
நெதர்லாந்து கூட்டம்
நெதர்லாந்தின் டிரான்ஸ்நேஷனல் அமைப்பின் உறுப்பினர்களுள் பிரஃபுல் பித்வாயும் ஒருவர். நியாயமான, ஜனநாயகமான, வளம்குன்றா வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்ட புவி என்ற நோக்கத்தில் செயல்படும் இந்த மையத்தின் சார்பில் நடந்த கூட்டமொன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தபோதுதான் பிரஃபுல் பித்வாய் மரணமடைந்தார்.
‘1999 நியூ நியூக்ஸ்: இந்தியா, பாகிஸ்தான் அண்டு குளோபல் நியூக்ளியர் டிஸ்ஆர்மமென்ட்’ உள்ளிட்ட பல நூல்களை பிரஃபுல் எழுதியிருக்கிறார். இந்திய இடதுசாரிகள் குறித்து அவர் எழுதிய புத்தகம் ஒன்று இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகவிருக்கிறது.
சிறியதே அழகு
நாக்பூரில் பிறந்த பிரஃபுல் பித்வாய் புதுடெல்லியில் உள்ள ‘சமூக முன்னேற்றத்துக்கான மைய'த்தில் பணியாற்றியிருக்கிறார். நேரு நினைவு அருங்காட்சியகத்தில் மூத்த உறுப்பினராக இருந்திருக்கிறார். சமூக அறிவியல் ஆய்வுக்கான இந்திய கவுன்சில், கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியவற்றிலும் அவர் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தீவிர விமர்சகரான பிரஃபுல், மோடி அரசின் மாபெரும் திட்டங்களாக முன்வைக்கப்படும் தூய்மை இந்தியா, ஸ்மார்ட் நகரங்கள், கங்கையைத் தூய்மைப்படுத்துதல் போன்றவற்றைக் கடுமையாக விமர்சித்துவந்தார். பெரிய திட்டங்கள் பேரழிவையே கொண்டுவருகின்றன என்ற கருத்துடையவர் அவர். ஒரு வகையில் மைக்கேல் ஷூமாக்கரின் ‘சிறியதே அழகு’ என்ற கோட்பாட்டுடன் இணக்கம் கொண்டவர்.
துணிச்சல் மிக்கவர்
பிரஃபுல் பித்வாயைப் பற்றி அவரது சகாவான அச்சின் வானைக் எழுதிய அஞ்சலிக் குறிப்பு இங்கே பொருத்தமாக இருக்கும்:
"தான் நம்பும் விஷயங்களுக்காகக் குரல் கொடுப்பதற்கு பிரஃபுல் என்றுமே அஞ்சியதில்லை. அணுசக்திக்கான துறையின் அணுசக்தித் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்து, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் அவர் எழுதிய கட்டுரை அதற்கு ஒரு உதாரணம்.
பண ஆதாயத்துக்காகவும் ராஜதந்திர ஆதாயங்களுக்காகவும் மேற்கொள்ளப்படும் திட்டமே அது என்பதை, அந்தக் கட்டுரையில் பிரஃபுல் தோலுரித்துக்காட்டியிருந்தார். அந்தக் கட்டுரையின் காரணமாக அணுசக்தித் துறையின் தலைவர், பிரஃபுல் ஒரு தேசவிரோத சக்தி என்று சொல்லுமளவுக்கு ஆகிவிட்டது. அதுதான் பிரஃபுல்.
துணிவு மிக்கவர், சீரானவர், உரக்கக் குரல்கொடுப்பவர். இந்திய இடதுசாரிகளின் வலுவான குரலாக இருந்தார் பிரஃபுல். பிரிவினைவாதத்தைத் தீவிரமாக எதிர்த்துவந்ததுடன், குடிமை உரிமைகள் மதச்சார்பின்மை ஆகியவற்றுக்காகப் போராடிவந்தவரை இழந்துவிட்டோம்."
பின்னோக்கிப் பாயும் மோடி அரசு
நரேந்திர மோடி அரசின் சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் பிரஃபுல் பித்வாய். மோடியின் ஓராண்டு செயல்பாடுகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு பகுதி:
மோடியின் ‘சூட்-பூட் அரசு' அவமான உணர்வின்றிப் பணக்காரர்களுக்கு ஆதரவாகவும், ஏழைகளுக்கு எதிரானதாகவும் இருக்கிறது. முதலீட்டாளர்களை முதலீடு செய்வதற்கான எல்லா வழிகளையும் மோடி அரசு திறந்து வைத்திருக்கிறது.
ஆனால், முதலீடுகள் குவியக் காணோம். இந்தியாவின் 500 முன்னணி நிறுவனங்களில் 52 சதவீத நிறுவனங்கள் கடனில் தத்தளிக்கின்றன. வங்கிகள் கொடுத்த 14 சதவீத வங்கிக் கடன்கள் திரும்ப வராமல் இருக்கின்றன.
இதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிய மோடி அரசு தவறியிருக்கிறது. அதற்குப் பதிலாக முதலீட்டை ஊக்குவிக்க மூன்று அடிப்படை அம்சங்களைச் செய்தால் போதும் என்று அது நம்புகிறது:
சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை முற்றிலும் தளர்த்துவது, (நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மூலம்) விவசாய நிலத்தைத் தொழிற்சாலைகளுக்குக் கட்டுப்பாடற்று மாற்றுவது, வேலையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் துரத்துவதற்கு வசதியாகத் தொழிலாளர் சட்டங்களில் ‘சீர்திருத்தம்' செய்வது.
இதில் முதல் அணுகுமுறை, புதிய தொழிற்சாலை திட்டங்கள் குறித்து எந்த வகையிலும் ஆராயாமலும் வன உரிமைச் சட்டம், கடலோர ஒழுங்காற்று சட்டம் போன்றவற்றை மீறும் வகையிலும், காடுகளுக்கான வரையறையை மாற்றும் வகையிலும் திட்ட அனுமதிகளை அதிவேகமாக வாரி வழங்க வழி அமைக்கிறது.
அதேபோல டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் தலைமையிலான உயர்நிலைக் குழு, சுற்றுச்சூழல் சட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில், மாசு கட்டுப்பாட்டு வாரியங்களை ஒழிப்பது, தொழில் திட்டங்களைச் செயல்படுத்துபவர்களே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகச் சுயச் சான்றிதழ் அளித்துக்கொள்வது, காடுகளுக்குள் சாலைகள், மின் கம்பங்களுக்கு அனுமதி அவசியமில்லை என்பது போன்ற மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளது.
அதேநேரம், இவை சமீபத்திய மாற்றங்கள்தான், 2007-ம் ஆண்டு முதலே தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதற்குச் சுற்றுச்சூழல் விதிமுறைகள் பெரும்பாலும் தடையாக இருந்தது இல்லை. இந்தக் காலகட்டத்தில் 94 சதவீதத் தொழிற்சாலைத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது (2007 முதல் 2014 மே மாதம்வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது.)