உயிர் மூச்சு

கார் வாங்க வட்டி 0% விவசாயத்துக்கோ 8%

பாமயன்

நமது உழவர்களின் வாழ்நிலை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது, தொழிலாளிகளைப் போல ஒரு புறம் உடல் உழைப்பு செய்ய வேண்டும், அதேநேரம் ஒரு முதலாளியைப் போலத் தனது சாகுபடிக்கான மூலதனத்தையும் அவர்களே திரட்டிக்கொள்ள வேண்டும். வங்கிகளின் பட்டியலில் வேளாண்மைக்குத் தரப்படும் கடன் கடைசி இடத்தில்தான் இருக்கும்.

ஏழே நிமிடங்களில் 0% வட்டிக்குக் கார் வாங்கக் கடன் கிடைக்கும் (சந்தேகம் இருந்தால் இணையதளங்களைப் பாருங்கள்), ஆனால் வேளாண்மை கடனுக்கான வட்டி 8 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக உயருகிறது! விவசாயிகளுக்கு நம் நாடு அளிக்கும் மதிப்பு இதுதான்.

உழவன் சாகுபடிக்கான அனைத்து இடுபொருள்களையும் வாங்க வேண்டும், அதை வளர்த்துப் பயிராக்கிக் களை எடுப்பது முதல் அறுவடைவரைக்கும் செலவு செய்ய வேண்டும். அதைச் சந்தையில் கொண்டுபோய் விற்கும்போது, அதை அடிமாட்டு விலை கேட்கும் தரகர்களிடம் விற்க வேண்டும். விற்ற பின்னர் கந்து வட்டிக்காரர்களுக்குப் பத்து வட்டிக்கு மேல் அழ வேண்டும். பின் எப்படி அவர்களுடைய பிள்ளைகளைப் படிக்கவைப்பது, இதர தேவைகளை நிறைவு செய்வது?

ஒரு மழைக்குத் தாங்காதா?

இறந்துபோன திருவாரூர் பருத்தி உழவரான ராஜாராம் பயன்படுத்தியது மரபீனி மாற்ற பி.டி. பருத்தி (BT Cotton). இந்தப் பருத்தி நல்ல விளைச்சல் தரும் என்று கூறப்பட்டது. ஏறத்தாழ நாற்பதாயிரம் ரூபாய்வரை லாபம் கிடைக்கும் என்பது அவருடைய எதிர்பார்ப்பு. ஆனால், இந்தப் பி.டி. பருத்திப் பயிர் அதிக மழைக்கும் தாங்காது, ஈரம் இல்லாவிட்டாலும் தாங்காது என்பது ஏனோ அவருக்குத் தெரியவில்லை. இரண்டு நாள் தொடர்மழைக்குப் பருத்திச் செடி மொத்தமாக அழுகிவிட்டது.

அவரது கனவெல்லாமும் சிதைந்துவிட்டது. பருத்திக்குப் பயன்படுத்திய பூச்சிக்கொல்லியே அவருக்கு எமனானது. பி.டி. பருத்திக்குப் பூச்சிக்கொல்லி எல்லாம் தேவையில்லை என்று பாடம் எடுக்கும் நமது ‘நவீன' வேளாண் அறிஞர்கள், அதே பயிர் மழைக்குத் தாங்காதது ஏன் என்பதற்கு என்ன பதில் வைத்துள்ளார்களோ தெரியவில்லை.

சாதாரணப் பருத்தி விதை கிலோ ரூ.70-க்கும் குறைவு. இந்தப் பி.டி. விதை 450 கிராம் அளவின் விலை ரூ.750-க்கும் மேல். அது மட்டுமல்லாமல் இதற்கும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதற்கெல்லாம் மேலாக வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்க முடியாத ‘சோதா' விதைகள். இவ்வளவு கொடுமையையும் தாங்கிக்கொண்டுதான் உழவர்கள் ஒரு பயிரைச் சாகுபடி செய்கிறார்கள். ஆனால், திடீரென்று ஏற்படும் எதிர்பாராத மழை, கடும் வெயில் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்காகக் காப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், அதிலும் அரதப் பழைய முறையையே நமது அரசுகள் பின்பற்றுகின்றன.

எல்லாவற்றிலும் நவீனம் பேசும் நமது ஆட்சியாளர்கள், இன்னும் ‘ஊர் பூராவும் பயிர் அழிந்து போனால்தான் இன்சூரன்ஸ் தருவேன்' என்று அடம்பிடிக்கும் காட்சிகளைக் காண முடிகிறது. தனித்தனியாக நிலத்துக்குக் காப்பீட்டுக் கட்டணம் கட்டும் விவசாயிக்குத் தனித்தனியாக இழப்பீடு தரப்படுவதில்லை. ஆனால், இயற்கைச் சீற்றத்தில் ஒரு கார் பாதிக்கப்பட்டால், அதற்குத் தனியாக இழப்பீடு தரப்படுகிறது. இப்படி எல்லா வகையிலும் உழவர்களை நெருக்கடிக்குத் தள்ளி வேடிக்கை பார்க்கிறது நம் அரசு.

கட்டுரையாசிரியர்,
சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com

SCROLL FOR NEXT