நேபாளத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது, நிலைகுலைய வைத்திருக்கிறது, துண்டாடி இருக்கிறது... இப்படி, இன்னும் எத்தனையோ வார்த்தைகளில் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தைப் பற்றி விவரிக்கலாம். ஆனால், எப்படிச் சொன்னாலும் நடந்து முடிந்த நிலநடுக்கத்தை நம்மால் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை என்பது மட்டும் வலி மிகுந்த நிஜம்!
இயற்கைப் பேரிடர்களிலேயே முன்கூட்டியே கணிப்பதற்கு மிகவும் கடினமானது... இன்னும் சொல்லப்போனால் துல்லியமாகக் கணிக்கவே முடியாதது என்று புவியியல் அறிஞர்களால் சுட்டிக்காட்டப்படுவது, நிலநடுக்கம்தான்!
நிலநடுக்கம் அதிகமாக நிகழும் நாடான ஜப்பானில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கருவிகள்கூட நிலநடுக்கம் ஏற்படுகிறபோது, அதனால் வேறு எந்தெந்த இடங்களில் பாதிப்பு உருவாகும் என்று எச்சரிக்கை மட்டுமே விடுக்கும் தன்மைகொண்டவை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கும் புவியியல் ஆய்வாளரான சத்யாவிடம் கேட்டபோது, சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஏன் வருகிறது?
"நிலநடுக்கம் என்பது புவி மேலோட்டில் ஏற்படுகிற சமநிலை குலைவால் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகள்தான். இந்தப் புவி மேலோடு சிறிதும் பெரிதுமான பல்வேறு தட்டுகளால் ஆனவை. இவை பூமிக்கு அடியில் உருகிய நிலையில் உள்ள மென்பாறைக் குழம்பின் மேல் மிதந்துகொண்டு இருக்கின்றன. அவ்வாறு மிதக்கும் தட்டுகளின் விளிம்புகளே, அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாக உள்ளன.
இந்தத் தட்டு விளிம்புகளை ஒன்றிணையும் தட்டு விளிம்புகள் (converging plate boundaries), விலகு தட்டு விளிம்புகள் (diverging plate boundaries) மற்றும் பக்கவாட்டு நகர்வு தட்டு விளிம்புகள் (transform plate boundaries) என மூன்றாகப் பிரிக்கலாம்.
ஒன்றிணையும் மற்றும் பக்கவாட்டு தட்டு விளிம்புகள் மிகவும் ஆபத்தானவை. தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நேபாளத்தின் இமயமலை, 2004-ம் ஆண்டு சுனாமிக்குக் காரணமான சுமத்ரா தீவு நிலநடுக்கம், ஜப்பானில் நிகழும் நிலநடுக்கங்கள் ஆகியவை ஒன்றிணையும் தட்டு விளிம்புகளில் நிகழ்ந்தவை. 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பக்கவாட்டு தட்டு விளிம்பு நிலநடுக்கத்துக்கு ஓர் உதாரணம்.
மூன்றாம் நிலை அலை
ஒன்றிணையும் தட்டு விளிம்புகளில் ஒரு தட்டும் மற்றொரு தட்டும் எதிர் எதிர் திசையில் நகரும் தன்மை கொண்டவையாக இருக்கும். அவ்வாறு நகரும்போது மிகவும் எடை அதிகமான தட்டு பூமிக்குள் அழுத்தப்பட்டு, எடை குறைந்த தட்டின் மேல் மடிப்பு மலைகள் தோன்றும். உலகில் எங்கெல்லாம் இவ்வாறு மடிப்பு மலைகள் உள்ளனவோ, அவையெல்லாம் இதுபோன்ற நிகழ்வுகளால் உருவானவைதான். இந்தப் பகுதிகள் என்றைக்கும் நிலநடுக்க ஆபத்து மிகுந்த பகுதிகள்தான்.
இதுபோன்ற தட்டு நகர்வுகளின்போது ஏற்படும் மிகுந்த அழுத்தம் காரணமாக, புவி மேலோட்டில் சமநிலைக் குறைவு ஏற்படுகிறது. இந்த நகர்வின்போது பூமிக்குள் இருக்கும் பாறை அடுக்குகள், அதன் நெகிழ்வுத்தன்மையை மீறிய அழுத்தம் ஏற்படும்போது உடைய நேரிடுகிறது. அவ்வாறு உடையும்போது முதன்மை அலைகள், இரண்டாம் நிலை அலைகள் மற்றும் புவி மேற்பரப்பு அலைகள் என மூன்று விதமான நிலநடுக்க அலைகள் உருவாகின்றன. இதில் முதல் இரண்டு அலைகள் பூமிக்கு அடியில் பயணம் செய்பவை. இவற்றால் எந்த உயிர்ச் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படாது.
ஆனால், புவி மேற்பரப்பு அலைகள் மிகவும் ஆபத்தானவை. பூமி குலுங்குவது, கட்டிடங்கள் இடிவது போன்றவை இந்த அலைகளின் தாக்கத்தால் ஏற்படுபவையே. இந்த அலையின் வீச்சே ரிக்டர் அளவுகோலில் மதிப்பிடப்படுகிறது.
முன்னெச்சரிக்கை
நிலநடுக்கத்தைத் தடுக்க முடியாதே தவிர, திட்டமிட்டுச் செயல்பட்டால் அதன் மூலம் உருவாகும் உயிர் சேதத்தைப் பெருமளவு குறைக்க முடியும். நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் முதல் நிலை அலைகள் உருவாகி 30 முதல் 45 நிமிடங்கள் கழித்தே, இரண்டாம் நிலை அலைகள் தோன்றும். அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்தே புவி மேற்பரப்பு அலைகள் தோன்றும். ஆக, முதல் நிலை அலைகளுக்கும் புவி மேற்பரப்பு அலைகளுக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் இடைவெளி இருக்கும்.
நிலநடுக்கக் கண்காணிப்பு மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளைக் கொண்டு புவி மேற்பரப்பு அலைகளின் பயணத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியும். அதை வைத்து அந்த அலைகள் எத்தனை மணிக்குத் தாக்கும் என்று மக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல் அளித்து, பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றிவிட முடியும்.
நிலநடுக்கக் கண்காணிப்பு மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளைக் கொண்டு புவி மேற்பரப்பு அலைகளின் பயணத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியும். அதை வைத்து அந்த அலைகள் எத்தனை மணிக்குத் தாக்கும் என்று மக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல் அளித்து, பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றிவிட முடியும்.
உதவும் விலங்குகள்
தவிர, இந்த முதல் இரண்டு நிலநடுக்க அலைகளை மனிதர்களால் உணர முடியாதே தவிர, விலங்குகளால், குறிப்பாக ஊர்வன குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளால் நன்கு உணர முடியும். இத்தாலி, சிலி போன்ற நாடுகளில் நம் ஊரில் உள்ள விலங்கியல் பூங்காக்கள் போலச் சீஸ்மிக் பூங்காக்களை ஏற்படுத்தியுள்ளனர். மிகவும் உணர்ச்சி மிகுந்த ஊர்வனவற்றின் வயிற்றுப் பகுதியில் மைக்ரோ சென்ஸாரைப் பொருத்தி, அந்தப் பூங்காக்களில் இயற்கை சூழலில் உலவ விட்டுள்ளனர். நிலநடுக்க அலைகள் ஏற்படும்போது இந்தச் சென்ஸாரின் உதவியுடன் வல்லுநர்களைக் கொண்ட கண்காணிப்பு குழு மக்களை எச்சரிக்கை செய்கிறது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக நிலநடுக்கத்தைக் கணிக்க முடியும். அதேபோல, கட்டுமானப் பொறியியல் துறையில் சீஸ்மிக் கோட்பாடுகளுக்கு இணக்கமான தொழில்நுட்பங்களைப் புகுத்துவதன் மூலம் பெருமளவு பொருட்சேதத்தைத் தடுக்க முடியும். இந்த இரண்டும்தான் நம் நாட்டின் தற்போதைய அவசிய, அவசரத் தேவை" என்கிறார்.
மாறிய முடிவு
தட்டு விளிம்புகள்தான் அடிக்கடி நிலநடுக்கம் நிகழும் பகுதிகள் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. எனினும், தட்டு மையப்பகுதிகள் நிலநடுக்கத்துக்கு அப்பாற்பட்டவை என்று இன்னும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆக, நிலநடுக்கப் பாதிப்புக்கு அப்பாற்பட்ட பகுதி என உலகின் எந்தப் பகுதியையும் நம்மால் வரையறுக்க முடியாது என்பதே நிதர்சனம். நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகள் தொடர்பான வரையறையும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.
உதாரணத்துக்கு, 1969-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கொய்னா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தைக் கூறலாம். அதுவரை தீபகற்ப இந்தியா நிலநடுக்க ஆபத்து அற்ற பகுதியாகத்தான் புவியியலாளர்களால் கருதப்பட்டு வந்தது. அந்த நம்பிக்கையைக் கொய்னா நிலநடுக்கம் தகர்த்தெறிந்தது.
தமிழகம் தப்புமா?
இதன் மூலம் நமக்குத் தெரிய வருவது தமிழகமும் நிலநடுக்கத்துக்கு அப்பாற்பட்டது அல்ல என்பதுதான்!
அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தின் ரோசன்ஸ்டீல் கடல்சார் மற்றும் வளிமண்டல அறிவியல் மையம் மற்றும் இலங்கையின் பேராதீனப் பல்கலைக்கழகம் ஆகியவை மேற்கொண்ட ஓர் ஆய்வில் இந்தியப் பெருங்கடலில் 9.2 ரிக்டர் அளவுக்கும் மேலாக நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி இருந்தன.
இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்ற அடிப்படையில், இது தொடர்பாகச் சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டபோது, ‘அப்படி ஓர் ஆய்வு இருப்பது குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை' என்று அந்த அணுமின் நிலையம் சொல்லியிருக்கிறது.
அப்படியென்றால், தமிழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால்...? அதனால் அணுமின் நிலையம் பாதிக்கப்பட்டால்...?
தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகும்?