‘எதிலும் வேகம் அவசியம் -மெதுவாகப் போனால் தோல்வி' என்று பலரது மனதிலும் ஆழமாகப் பதிந்து போய்விட்டது. நம் இயல்பைத் தொலைத்து வேகமாகப் பறந்துகொண்டிருக்கும் இச்சூழலில், இயல்பாக மெதுவாக வாழும் உயிரினங்களை நாம் மறந்துவிட்டோம். ஆனால், மெதுவான இயல்பைக் கொண்ட ஆலிவ் ரிட்லி (Olive ridley) ஆமைகள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பங்குனி ஆமைகள் தங்களது இனத்தைக் காக்க வாழ்க்கை முழுவதும் இடைவிடாது போராடுகின்றன. இந்த ஆமைகளுக்கு சித்தாமை, தென்மாவட்டங்களில் பஞ்சல் ஆமை என்ற பெயர்களும் உண்டு.
மனித உயிர்களுக்கே மதிப்பில்லாத காலத்தில் ஆமைகளைப் பாதுகாக்க யாருக்கு நேரம் இருக்கிறது? புதுச்சேரி கடற்கரை பகுதியில் பங்குனி ஆமை ஒன்று சமீபத்தில் இறந்துகிடந்தது. வழக்கமாக மணல் பகுதியில் மட்டுமே ஊர்ந்து செல்லக்கூடிய இந்த ஆமை, கடற்கரை தடுப்புக் கற்களைத் தாண்டி வந்திருந்தும் பலருக்கும் தெரியவில்லை. இந்த ஆமைகளின் வாழ்க்கையைத் தேடிப் போனால், அதில் புதைந்திருக்கும் தகவல்கள் ஆச்சரியம் தருகின்றன.
தாயகம் தேடி
இந்த ஆமைகள் எதற்காகப் புதுச்சேரி கடற்கரை பகுதியைத் தேடி வருகின்றன? தங்களது இனத்தைத் தொடர்ந்து வாழவைக்கத்தான். இந்த வகையைச் சேர்ந்த ஆமைகள் முட்டையிலிருந்து குஞ்சாகப் பொரித்துக் கடலுக்குச் செல்லும் ஆமை, அதே தாய்மண்ணைத் தேடி, 20 முதல் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முட்டையிடத் தேடிவருவது மிகப் பெரிய ஆச்சரியம்.
இந்தியக் கடற்கரைகளுக்கு முட்டையிட வரும் ஐந்து வகை கடல் ஆமைகளில் பங்குனி ஆமைகள் கிழக்கு கடற்கரைப் பகுதிக்கு அதிக அளவில் வருகின்றன. புதுச்சேரி கடற்கரை கிராமங்களான வீராம்பட்டினம், புதுக்குப்பம், நரம்பை, பனித்திட்டுப் பகுதிகளுக்கு இவை வருகின்றன.
இந்த ஆமைகள் குறித்து புதுச்சேரி வனப் பாதுகாப்பு துணை அலுவலர் சத்தியமூர்த்தி பகிர்ந்துகொண்டார்.
“ஒரு ஆமை ஒரு முறைக்கு 120 முதல் 140 முட்டைகள்வரை இடும். புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் 2 மாதங்களில் 2 ஆயிரம் முட்டைகளைக் கையகப்படுத்தி, பாதுகாப்பான கடற்கரை மணற்பரப்பில் புதைத்துள்ளோம்.
டேராடூனில் உள்ள இந்தியக் காட்டுயிர் நிறுவனம் இந்த ஆமைகள் பற்றி ஆராய்ச்சி நடத்தியுள்ளது. இந்த ஆராய்ச்சியில் சில ஆமைகளுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, அவற்றின் இயக்கம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் முட்டையிலிருந்து குஞ்சாகிக் கடலுக்குச் செல்லும் ஆமைகள் வளர்ந்து பெரிதாகிக் கடல் ஆமைகள் மீண்டும் முட்டையிட தாய்மண்ணுக்கே வருவது உறுதிப்படுத்தப்பட்டது. அப்படிப் பார்த்தால், இங்கு முட்டையிட வரும் ஆமைகள், இங்கே பிறந்தவைதான்.
தற்போது கிராம மக்கள் உதவியுடன் வனத்துறையினர் ரோந்து சென்று ஆமை முட்டைகளைக் கையகப்படுத்திப் பாதுகாப்பாகக் குஞ்சு பொரிக்க உதவுகிறோம். இந்தப் பொரிப்பகத்தில் பொரித்த ஆமைக் குஞ்சுகள் தற்போது கடலில் விடப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டார்.
ஆமைகள் இறப்பு
அதேநேரம், கடந்த 2 மாதங்களில் 46 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. அரிய வகை ஆமையான இந்தப் பங்குனி ஆமைகள் பெரும்பாலும் மீன்பிடி படகு இன்ஜின்களிலும், டிராலர் பெருவலைகளிலும் சிக்கி இறக்கின்றன. கடற்கரையிலும் கடலிலும் நாம் வீசும் பிளாஸ்டிக் பொருள்களைச் சாப்பிட்டும் பல ஆமைகள் இறக்கின்றன. இப்படி வேகமாக அழிந்துவரும் பங்குனி ஆமை தனது இனத்தை அழிவிலிருந்து மீட்கப் போராடும் நிலையில், அவற்றுக்கு இடைஞ்சல் தராமல் அந்த இனம் வளர நாமும் உதவலாமே.