உங்கள் வீட்டில் ஒரு மணி நேரம் மின்சாரத்தை அணைத்து வைப்பதால் என்ன மாற்றம் நிகழப் போகிறது? நிச்சயம் உலகம் தலைகீழாகிவிடாது. ஆனால், ஒரு மாற்றம் நடக்கும். நாட்டின் முக்கிய நகரங்களில் பெரும்பாலோர் இப்படிச் செய்தால், ஆயிரம் மெகாவாட்வரை மின்சாரத்தைச் சேமிக்கலாம்.
விளக்குகளை அணைப்போம்
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் கடைசி சனிக்கிழமை பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அதற்கான காரணங்களைக் குறைக்கும் வகையிலும் 'எர்த் அவர்' என்னும் விளக்குகளை அணைக்கும் பிரசாரம் நடைபெற்றுவருகிறது.
இந்தத் தன்னார்வ முயற்சிக்கு உலக இயற்கை நிதியம் எனப்படும் WWF ஏற்பாடு செய்கிறது.
கடந்த ஏழு ஆண்டுகளாக உலகின் முன்னணி நகரங்களும் இந்தியாவும் பங்கேற்கும் இந்தப் பிரசார நிகழ்ச்சியில் குறிப்பிட்ட ஒரு மணி நேரம் மட்டும் வீடு, அலுவலக விளக்குகளை, மின்சாரக் கருவிகளை அணைத்து வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் வீடு, முதல்வர்களின் வீடுகள் இந்த நிகழ்ச்சியில் ஏற்கெனவே பங்கேற்றிருக்கின்றன.
மாற்று எரிசக்தி
உலகை மிரட்டும் பருவநிலை மாற்றம் தீவிரமடைவதற்கு மின்சாரப் பயன்பாடும் ஒரு காரணம். மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் நிலக்கரி, எரிபொருட்களில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடே பூமியை வெப்பப்படுத்தி பருவநிலை மாற்றத்தை அதிகரிக்கிறது. நாட்டிலேயே வீடுகளில் அதிக மின்சாரத்தைச் செலவழிப்பதில் சென்னை முன்னணி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனால் மரபு சார்ந்த மின் உற்பத்தி முறைகளுக்கு மாறாக, சூரியசக்தி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறைகளுக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்துவதே 'எர்த் அவர்' பிரசார நிகழ்ச்சியின் நோக்கம்.
தமிழகத்தில் இந்த ஆண்டு தமிழகத்துக்கான 'எர்த் அவர்' விளம்பரத் தூதராக நடிகர் பரத் செயல்பட்டார். "இந்தப் பூமியைப் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். லட்சக்கணக்கான மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நானும் சந்தோஷப்படுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
மார்ச் 28-ம் தேதி சனிக்கிழமை இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணிவரை இந்த ஆண்டு 'எர்த் அவர்' கடைப்பிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட வீட்டில் மின்சாரப் பயன்பாடு குறைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்கவே, இந்தப் நிகழ்ச்சி இரவில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 150 நகரங்களில் இந்த பிரசாரம் நடைபெற்றது.
பிரசாரத்தின் ஒரு பகுதியாக அன்றைக்கு ஒரு நாள், ஒரு மணி நேரம் மட்டும் விளக்குகளை அணைத்து வைப்பது ஓர் அடையாளம்தான். தேவையற்ற நேரத்தில் விளக்குகள், மின்கருவிகளை அணைத்து வைப்பதை வழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அத்துடன் எல்.இ.டி. விளக்குகள், சூரியசக்தி கருவிகள் போன்ற மாற்று எரிசக்திகளுக்கு மாற வேண்டும். அதுவே உலகம் ஆரோக்கியமாக இருக்க உதவும்.